அயோத்தி : லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அயோத்தி விவகாரத்தை, பா.ஜ., மீண்டும் கையில் எடுத்துள்ளது. அயோத்திக்கு நேற்று வந்த, உ.பி., மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளரான, அமித் ஷா, ""மிக விரைவில், அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவோம்,'' என்றார்.
கைது செய்யப்பட்டால்:
அடுத்தாண்டில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அரசியல் கட்சிகள், இப்போதே தயாராகி வருகின்றன. உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்றிய, காங்., கட்சி, அதன் மூலம், தேர்தலில், கணிசமான ஓட்டுகளை அறுவடை செய்ய நினைக்கிறது.பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வும், தற்போது, தன் ஓட்டு வங்கியை தக்க வைத்து கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த கட்சி, மீண்டும், ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.குஜராத் மாநிலத்தில், நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர், அமித் ஷா; நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர். இவர், அமைச்சராக இருந்தபோது, குஜராத்தில், சொராபுதீன் ஷேக் என்பவர், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.இது, போலியான என்கவுன்டர் என்றும், உள்துறை அமைச்சராக இருந்த, அமித் ஷா தான், இந்த போலி என்கவுன்டருக்கு மூளையாக இருந்தார் என்றும், புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
அயோத்தியில்...:
தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ள, அமித் ஷாவை, உ.பி., மாநிலத்துக்கான, கட்சியின் மேலிட பொறுப்பாளராக, பா.ஜ., தலைமை நியமித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், உ.பி., மாநிலம், பா.ஜ., கோட்டையாக விளங்கியது. தற்போது, பா.ஜ.,வின் செல்வாக்கு, அங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் வகையில், பா.ஜ., மேலிடம், அமித் ஷாவை, அங்கு களமிறக்கியுள்ளது. உ.பி.,யில், மொத்தம் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், அடுத்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில், 40 தொகுதிகளையாவது, பிடித்து விட வேண்டும் என, பா.ஜ., மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமித் ஷா, நேற்று, அயோத்திக்கு வந்தார். அங்குள்ள, ராமர் கோவிலில், பிரார்த்தனை நடத்தினார். இதன்பின், அவர் கூறியதாவது:இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வசிக்கும், பல கோடி இந்துக்கள், புனித தலமாக கருதும் ராமர் கோவிலுக்கு வந்தது, மகிழ்ச்சியை அளிக்கிறது.
"கோவில் கட்டுவோம்':
கோவிலில் பிரார்த்தனை நடத்தியபோது, நாட்டில், நல்ல நிர்வாகம் அமைய வேண்டும் என்றும், காங்கிரசின் பிடியில் இருந்து, நாட்டை விடுவிக்க வேண்டும் என்றும், வேண்டினேன். அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து, அயோத்தியில், விரைவில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவோம் என்றும், வேண்டினேன்.
இவ்வாறு, அமித் ஷா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE