உலக நாடுகள் ஒன்றோடொன்று, போட்டி போட்டு வளர்ந்து வரும், இன்றைய நவீன உலகின் பரிணாம வளர்ச்சிக்கு, மனிதனின் அறிவு வளர்ச்சியே முக்கியமானது. அத்தகைய, அறிவை வளர்ப்பதற்கு எண்ணற்ற கல்வி வாய்ப்புகள் பெருகி வரும் வேளையில், மாணவர்களின் சிந்தனைகளை, நோக்கங்களை சீர்குலைக்கும் வைரஸ் கிருமியாக, சினிமாக்கள் பெருக்கெடுத்து வருகின்றன.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடு இருக்கிறது என, பறை சாற்றிய எம்.ஜி.ஆர்., மாணவர்களுக்கு அறிவுரை வழங்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்தார். கவிஞர்களும், படைப்பாளிகளும், சமூக பொறுப்புணர்வோடு, பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லாமல், கலைக்கு உரிய மரியாதையோடு வாழ்ந்து, சகாப்தம் படைத்தனர்.
அமெரிக்காவில், வகுப்பறையில் சக மாணவர்களை, சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளிய மாணவன் மட்டுமின்றி, இங்கே சென்னையில், ஆசிரியையை பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொன்ற மாணவனின் கொடூர செயல்களும் சினிமாவின் பாதிப்பே, என்பதை மறுப்பதிற்கில்லை. சினிமாவில் காட்டப்படும் ஹீரோ, அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது நியாயமான விஷயமாக இருந்தாலும், 10 பேரை அடித்தால் தான், ஹீரோ ஆக முடியும் என்ற நிலை மாறி, 10 பேரை துப்பாக்கியால் சுடுவது தான், "ஹீரோயிசம்' என்று, ஆயுத கலாசாரம் துவங்கி உள்ளது. வன்முறை காட்சிகளும், ஆபாச பாடல்களும் இல்லாமல் சினிமா எடுத்து பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை குறி வைத்து அதுவும், பள்ளி சீருடையில் கதாநாயகி நடிப்பதும், டூயட் பாடுவதும், மாணவர்கள் குடித்து கும்மாளம் போடுவதுமாக, தொடர்ந்து படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.எதிர் விளைவை உணராமல் வெறும் வியாபார நோக்கில், ஒரு சிலரால் எடுக்கப்படும் இது போன்ற படங்கள், கலாசார சீரழிவை உண்டு செய்கிறது.
காதலித்து வாழ்க்கையை தொலைத்த கதைகள், சினிமாவில் காட்டப்பட்டாலும், தனக்கு சாதகமான காட்சிகளையே, இளைஞர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு ஏழை பெண், ஒரு பணக்காரனை காதலிக்க போராடுவது போல், படம் எடுத்தால் ஓடாது என்று தெரியும்.ஏனென்றால், அந்த கதையில் ஒரு, "த்ரில்' இருக்காது, அது போல தான் ஒரு த்ரில்லுக்காக தான் இளைஞர்கள் வாழ்கின்றனர். சினிமாவில் வரும் கதைகளுக்கேற்ப, தங்களது வாழ்க்கையை மாற்ற துடிக்கும் மாணவர்கள், பரிதவிக்கும் பெற்றோர், கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள், கவலைப்படாத கலைஞர்கள் இது தான் இன்றைய தமிழகம்.சமூக எழுச்சிக்காக போராடிக் கொண்டிருக்கும் அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பயன்படுத்தும் கருத்து சுதந்திரம், இன்று, சிலரின் சுய விளம்பரத்திற்காக வீணடிக்கப்படுகிறது. கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமையாக பாவிக்கும் போது, ஒருவர் எடுத்துரைக்கும் கருத்து, மற்றவரை பாதிக்கும் போது, அவதூறு வழக்கு தொடுக்கப்படுகிறது.இங்கே கருத்து சுதந்திரத்தை விட, தனி மனித சுதந்திரம் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், ஒரு சமூகம், அதிலும் இளைய சமுதாயம் பாதிக்கப்படும் போது, இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளும், வெறும் கண்துடைப்பு போராட்டம் அறிவிக்கும் இயக்கங்களும் காணாமல் போகின்றனர்.
யாரையும் மிரட்டுவதற்கும், பலத்தை நிரூபிப்பதற்கும், இளைஞர்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் சமுதாய அமைப்புகள் ஈடுபட வேண்டும். சட்டத்தாலும், நீதியாலும் மட்டுமே இந்த கலாசார பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். தவறு செய்தவர்கள் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும். தற்போது, நிலவி வரும் பிரச்னைகள், சினிமாத்துறைக்கு எதிரான தாக்குதலாக கருதாமல், பிரச்னைகள் மேலும் விஸ்வரூபம் ஆகாமல் பாதுகாக்க வேண்டும். சினிமாவை மக்கள் வெறுக்கும் நிலை வரக்கூடாது.பிஞ்சு உள்ளங்களை பாதிக்கும் காட்சிகள், பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் காதலிப்பது போன்ற தேவையற்ற காட்சிகளை, திரையுலகினர் தவிர்க்க வேண்டும். ஜாதி, இன, மொழி பாகுபாடின்றி அனைத்து மக்களின் மனதை தொடும் மனிதர்கள், சினிமா கலைஞர்கள் என்பதை உணர வேண்டும்.இ-மெயில்: mmkibrahim@gmail.com
- எம்.எம்.கே.இப்ராகிம் - சமூக ஆர்வலர்