தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில், இளவரசன் பிரேத பரிசோதனை அறிக்கை ஆய்வுக்கு பின், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இளவரசன் மரணத்தில், பல்வேறு சர்ச்சை கிளப்பப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு, இளவரசன் பிரேத பரிசோனை அறிக்கையை,அவரது தந்தையிடம் போலீசார் வழங்கினர்.
இந்த நகல்களை, இரண்டு டாக்டர்கள் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இளவரசனின் உறவினர்கள், இரண்டு குழு அமைத்து, ஒரு குழுவினர் புதுக்கோட்டையில் உள்ள டாக்டர் மற்றும் சென்னையில் உள்ள டாக்டர்களிடம் கொடுத்து, நேற்று ஆலோசனை நடத்தினர்.
நேற்று காலை, 9:00 மணிக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து, வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை செய்தனர்.
பின், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் சிந்தனை செல்வன் நிருபர்களிடம் கூறும்போது,""பிரேத பரிசோதனை அறிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எனவே நாங்கள் இளவரசனின் உடலை வாங்கி செல்ல போகிறோம்,'' என்றார்.
இதற்கு, வழக்கறிஞர் ரஜினி எதிர்ப்பு தெரிவித்தார். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, இருக்கும் நிலையில், நீங்கள் எப்படி தன்னிச்சையாக கூறலாம் என, கேட்டார். இதனால், இளவரசனின் தரப்பினருக்கு இடையே, இரு கோஷ்டியாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், இளவரசனின் தாய் கிருஷ்ணவேணி, வழக்கறிஞர் ரஜினியிடம், ""என் மகன் சாவை, நீங்கள் தகராறு செய்து அரசியலாக்காதீர்கள்,'' என்றார்.
இளவரசனின் தந்தை இளங்கோ, ""மறு பிரேத பரிசோதனைக்கு பின், உடலை பெற வேண்டும்,'' என்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி., அரசு, ""144 தடை உத்தரவு உள்ளது. எனவே, இளவரசன் பெற்றோர், அவரது உறவினர்களை தவிர, யாரும் பிரேத பரிசோதனை அறை முன் இருக்க கூடாது. உடனடியாக கலைந்து செல்லுங்கள்,'' என, எச்சரித்தார்.
இதையடுத்து, பிரேத பரிசோதனை அறைக்கு முன், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவமனையின் பழைய நுழைவு வாயில் கேட் மூடப்பட்டு, அந்த வழியாக யாரும் அனுமதிக்கப்படவில்லை.
புதிய நுழைவு வாயில் கேட் வழியாக மட்டும் நோயாளிகள் நீண்ட விசாரணைக்கு பின், அனுமதிக்கப்பட்டனர். இதனால், நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
அதன் பின், ஒரு மணி வரை, அமைதியாக இருந்தனர். ஒரு மணிக்கு பின், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த சென்றனர்.
குடிநீருக்கு ஏற்பாடு
அரூர் எம்.எல்.ஏ., டில்லிபாபு, பிரேத பரிசோதனை அறை பகுதிக்கு வந்த போது, அங்கிருந்த பெண்கள், "தங்களை போலீசார் வெளியில் செல்லவும், உள்ளே வரவும் விடுவதில்லை குடிக்க தண்ணீர் கூட இல்லை' என்றனர். உடனடியாக குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அனுமதி மறுப்பு
ஜம்மு காஷ்மீர் ராணுவ பணியில் இருக்கும், இளவரசனின் அண்ணன் பாலாஜி நேற்று காலை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்தார். தன் தம்பியின் உடலை பார்க்க போலீசாரிடம் அனுமதி கேட்டார்.
"நீதிமன்ற உத்தரவுப்படி உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்க்க அனுமதியில்லை. எஸ்.பி., அனுமதி கொடுத்தால், பார்க்க அனுமதிக்கிறோம்' என, போலீசார் கூறினர். பாலாஜி, எஸ்.பி.,யை சந்தித்து உடலை பார்க்க அனுமதி கேட்டார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE