சென்னை: தடையை மீறி, சென்னையில் நேற்று, கோட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற, 2,000 பேர், முன்னெச்சரிக்கையாக, 1,400 பேர் என, த.மு.மு.க.,வினர், 3,400 பேரை, போலீசார் கைது செய்தனர். எழும்பூரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முஸ்லிம்களுக்கான, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்; 10 ஆண்டுகளை நிறைவு செய்த முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்; திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற, மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 6ல் (நேற்று), கோட்டை நோக்கி பேரணி நடத்தப் போவதாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.,) அறிவித்தது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயிருந்து பேரணி துவங்க ஏற்பாடு நடந்த நிலையில், பேரணிக்கு, தமிழக அரசு தடை விதித்தது. சென்னை நோக்கி வந்த வாகனங்கள், மாவட்ட எல்லையில் நிறுத்தப்பட்டு, த.மு.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னைக்குள்ளும் பஸ், வேன்களை மடக்கி சோதனை நடந்தது. ரயில் மூலம் வந்தோரும், கைது செய்யப்பட்டனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வழியே வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. பிற்பகலில், அப்பகுதிக்கு கூட்டமாக வந்தோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போலீசாரை திசை திருப்பிவிட்டு, சற்றும் எதிர்பாராத வகையில், 2,000க்கும் மேற்பட்டோர், எழும்பூர் பாந்தியன் சாலை, போலீஸ் கமிஷனர் அலுவலக சாலை சந்திப்பில் கூடினர். தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, 2,000 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் குறித்து, த.மு.மு.க., மூத்த தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கூறியதாவது:
மாநிலம் தழுவிய பிரச்னைகளுக்கு, பேரணி நடத்த உரிமை உண்டு. நாங்கள், மூன்று அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய பிரச்னை என்பதால், சென்னையில், கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டோம்; பேரணிக்கு அரசு தடை விதித்துள்ளது. "மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு தடை விதிப்பது' என, முடிவு செய்து, முதலாவதாக எங்களில் இருந்து ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். இது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல் என்பதால், தடையை மீறி பேரணிக்கு குவிந்துள்ளோம். சட்டம் - ஒழுங்கை மதிக்கவும் தெரியும்; எங்கள் உரிமையை வென்றெடுக்கவும் தெரியும். இரவு முதலே போலீசார், எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்து, ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளனர்; நாங்கள் எல்லாரும் அமைதியாக கைதாவோம். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில், 2,000 பேரும், முன்னெச்சரிக்கையாக, 1,400 பேரும் கைது செய்யப்பட்டதாக, போலீசார் கூறினர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE