தர்மபுரி : இளவரசன் கடைசியாக எழுதிய கடிதத்தை எடுத்து சென்றவரை, போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். அதே நேரம், கடிதத்தை மறைத்தவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், இதில் தொடர்புடையோர் பீதியடைந்துள்ளனர்.
இளவரசனின் இறப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், 7ம் தேதி இரவு, இளவரசன் கடைசியாக எழுதிய, நான்கு பக்க கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம் இளவரசனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து, 4ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது; கடிதத்தை எடுத்தவர், மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார்.
இளவரசனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்த கடிதம் குறித்து, இளவரசனின் உறவினர்கள் மற்றும் சில அரசியல் கட்சியினருக்கும் தெரிந்துள்ளது. ஆனால், இதை போலீசாருக்கு, தெரிவிக்காமல் மறைத்துள்ளனர்.
இளவரசன் இறந்து கிடந்த அன்று, இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியிருந்தால், இளவரசன் தற்கொலை உறுதி செய்யப்பட்டிருக்கும். கடிதத்தை எடுத்தவர், இந்த வழக்கின் போக்கை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்தாரா என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கடிதத்தை எடுத்தவர், தற்போது, போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாக கூறப்பட்டாலும், யார் எடுத்தார் என்ற தகவலை, போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். போலீசார், தற்போதைக்கு, இளவரசனின் இறுதி சடங்கு முடித்து, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வேண்டும். அதன் பின், கடிதம் குறித்த விசாரணையை முடுக்கி விட்டு, இதில், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க காத்திருக்கின்றனர். கடிதத்துக்கு பின், இளவரசனின் உறவினர்கள் உள்ளிட்டோர், எந்த சர்ச்சையும் கிளப்பாமல் உள்ளனர். மருத்துவமனையிலும் கூட்டம் சேருவது குறைந்துள்ளது. இந்த வழக்கில், இளவரசனின் கடிதம் மூலம், தற்கொலை உறுதி செய்யப்பட்ட போதும், தொடர்ந்து, இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் சிலர், இளவரசன் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி வருகின்றனர். கடிதம் எடுக்கப்பட்டது, மறைக்கப்பட்டதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், கடிதம் எடுத்தவரின் மொபைல் போன் மூலம், யாருக்கு எல்லாம் போன் செய்யப்பட்டுள்ளது, அந்த எண்களில் இருந்து யாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை, போலீசார் சேகரித்துள்ளனர். போலீசாரின் மறைமுக நடவடிக்கை அறிந்த சிலர், தற்போதே பீதியடைந்திருப்பதோடு, இளவரசனின் இறுதிச் சடங்கிற்கு பின், அவர்கள் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது. தற்போது, மாவட்டம் முழுவதும் அமைதியாக இருந்த போதும், கிராம பகுதி முதல், நகரப் பகுதி வரை, தொடர்ந்து போலீசார், பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாவட்டம் முழுவதும், 16 செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, நேற்று முதல், வெளி மாநில, மாவட்ட வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பின், அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பாக, சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் யாராவது மாவட்டத்துக்குள் செல்கின்றனரா என்பது குறித்து, மாவட்ட எல்லைகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதி, திருமண மண்டபம் உள்ளிட்டவைகளில் தங்குவோர் குறித்த, விவரங்களையும் போலீசார், சில நாட்களாக கண்காணித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE