வத்தலக்குண்டு : பா.ஜ., தலைவர் அத்வானியை கொல்ல, பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில், தலைமறைவாக இருந்த முகமுது ஹனீபா, வத்தலக்குண்டு அருகே நேற்று முன்தினம் கைதானார். இவர் மீது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்ததாக, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே கட்டகாமன்பட்டி இடமலையான் கோவில் கரடு பகுதியில், முகமது ஹனீபாவை, போலீசார் கைது செய்தனர். கடந்த, 6 மாதமாக வத்தலக்குண்டு, தேனி, திண்டுக்கல்லில் பிரியாணி கடைகளில் வேலை செய்ததாகவும், தென்காசியை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர்களை கொலை செய்ய, திட்டமிட்டது குறித்தும் கூறியுள்ளார். இவர் மீது, கொலை முயற்சி, அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருத்தல், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது, இந்து முன்னணி பிரமுகர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டது போன்ற பிரிவுகளில், வத்தலக்குண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.