மேலூர் : நீண்ட நாட்களுக்கு பிறகு, மேலூர், கீழவளவு ஸ்டேஷன்களில், அரசிற்கு, 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மீது, நேற்று, மூன்று வழக்குகள் பதிவானது. அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக, அரசு துறை அதிகாரிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை, அனுப்பானடியை சேர்ந்த வெங்கடசுப்பு, கீழவளவு போலீசில் அளித்த புகார்:
திருச்சுனையை சேர்ந்த சோலைராஜன் என்பவரிடம், 2 ஏக்கர் இடத்தை கிரானைட் எடுப்பதற்காக,"லீஸ்' பெற்றேன். அந்த இடத்தின் அருகில், பி.ஆர்.பி., நிறுவனம் மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்கள் கற்களை வெட்டி எடுத்தனர். இவர்கள் அத்துமீறி, என் பகுதிக்குள் நுழைந்து கற்களை வெட்டி எடுத்தனர்.
இதற்கு அரசு நிறுவனங்களான, டாமின், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, சுங்கத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர். பி.ஆர்.பி., நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி, அவரது மகன்கள் இருவர் உட்பட, அவரது குடும்பத்தினரும், சிந்து கிரானைட் உரிமையாளர் பி.கே.செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரும், இதில் செயல்பட்டுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.
திருவாதவூர் வி.ஏ.ஓ., அனுராதா, மேலூர் போலீசில் கொடுத்த புகார்: திருவாதவூர் பஞ்சபாண்டவர் மலை, கீழசுமை குளம், கல்லுகட்டி ஊரணி பகுதியில் உள்ள அரசின் புறம்போக்கு இடத்தில் அத்துமீறி, வெடி வைத்து, கிரானைட் கற்களை வெட்டி எடுத்த சிந்து கிரானைட் உரிமையாளர் பி.கே.செல்வராஜ், அவரது மனைவி, மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் அரசிற்கு, 431 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.
வி.ஏ.ஓ., அளித்த மற்றொரு புகாரில், "மதுரா கிரானைட் உரிமையாளர் பன்னீர் முகமது, உறவினர்கள், திருவாதவூர் கல்லுகட்டி ஊரணியில், அத்துமீறி கற்களை வெட்டி எடுத்ததில், அரசிற்கு, 18 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார். இவ்வழக்குகளை, தனிப்படை இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE