சென்னை :கூடங்குளம் அணு உலையில், "கட்டுப்படுத்தப்பட்ட அணு பிளவு சோதனை' மேற்கொள்ளும் பணி துவங்கி உள்ளது. எந்த நேரத்திலும் மின் உற்பத்தி துவங்கும் என, அணுசக்தி கமிஷன் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், 14 ஆயிரம் கோடி ரூபாயில், இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், தலா, 1,000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள, இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவற்றில், முதல் அணு உலையில், 2011, டிசம்பரில் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டிருந்தது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் மற்றும் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளால், மின் உற்பத்தி தாமதமானது.கடந்த, மே 6ம் தேதி, "கூடங்குளம் அணு உலை இயங்கத் தடையில்லை' என, சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், முழுமையாக பின்பற்றப்பட்டு உள்ளதா என்பது தொடர்பான, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வில், முதல் அணு உலையின் செயல்திறன், பாதுகாப்பு தன்மை ஆகியவை, உறுதி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், முதல் அணு உலையில், மின் உற்பத்தியைத் துவக்குவதற்கான அனுமதியை வழங்கியது.இதையடுத்து, கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் அணு உலையில்,
"கட்டுப்படுத்தப்பட்ட அணு பிளவு சோதனை' மேற்கொள்ளும் பணி, நேற்று துவக்கப்பட்டு உள்ளது.
"அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், முதல் அணு உலையில், மின் உற்பத்திக்கு அனுமதிஅளித்துள்ளது. இதற்கான முதல் கட்ட பணி துவங்கி உள்ளது. இந்த முதல் கட்ட நடவடிக்கை, 72 மணி நேரத்தில் முடிவடையும்' என்று, கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு நாளில், கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கும். முதலில் குறைந்த அளவு மின்சாரம் உற்பத்தியாகும். பின்னர், படிப்படியாக 1,000 மெகா வாட் உற்பத்தி திறனை அணு உலை எட்டும் என, அணுசக்தி கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திட்டவட்டம் : டில்லியிலிருந்து நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி:கூடங்குளம் அணு மின் நிலையத்தில், முதல் அணு உலையில், ஓரிரு நாளில், படிப்படியாக மின் உற்பத்தி துவங்கும். மேலும், அணு மின் நிலையத்தில், இன்னும் 10 நாட்களில், 1,000 மெகா வாட் மின் உற்பத்திக்கான பணி துவங்கப்படும்.இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், தகுந்தபாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, அணு உலை செயல்பட அனுமதி அளித்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டதற்கு, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களே காரணம்.நான்கு மாதம் அவர்கள்
ஏற்படுத்திய தாமதத்தால், அரசுக்கு, 1,650 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இரு நாட்டு மீனவ சங்க பிரதிநிதிகள் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Microsoft OLE DB Provider for SQL Server
error '80040e31'Query timeout expired
/xtralog_load.asp, line 349