ஈரோடு: தமிழகத்தில், 12 மாவட்டங்களில் உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும், உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மானியம் மூலம் பொதுமக்களுக்கு, காஸ் சிலிண்டர், ரேஷன் பொருட்கள், பண்டிகை காலங்களில் இலவச வேட்டி, சேலை, நிவாரண உதவி வழங்குகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத்தில் வழங்கும் பொருட்களை, இடைத்தரகர்கள் ஏமாற்றி, குறைந்த விலைக்கு வாங்கி, வர்த்தக நிறுவனங்கள், வெளிமாநிலங்கள், பண்ணைகளுக்கு கூடுதல் விலையில் விற்று, தொழிலாக செய்து வருகின்றனர். அரசு மானிய பொருட்களை, வாங்குவோர், விற்பனை செய்வோர் பிடிபட்டால், நீதிமன்றம் மூலம் தண்டிக்கும் பணியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஈடுபடுகின்றனர். டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., தாசில்தார், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடன் இணைந்து, இப்பணியை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில், 12 மாவட்டங்களில் இப்போலீஸ் பிரிவு இல்லை. இரண்டு மாவட்டங்களை இணைத்து இப்பிரிவினர் செயல்படுகின்றனர்.
இதன்படி தமிழகத்தில், சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கட்டுப்பாட்டில் நாமக்கல், ஈரோட்டுடன் கரூர், கோவையுடன் நீலகிரி, கிருஷ்ணகிரியுடன் தர்மபுரி, திருச்சியுடன் அரியலூர், பெரம்பலூர், தஞ்சையுடன் திருவாரூர், மதுரையுடன் சிவகங்கை, விருதுநகருடன் ராமநாதபுரம், திருவள்ளூருடன் காஞ்சிபுரம், கடலூருடன் விழுப்புரம், வேலூருடன் திருவண்ணாமலை என, 12 மாவட்டங்கள் இணைந்து செயல்படுகிறது.
12 மாவட்டங்களில் துவங்க ஏற்பாடு: கடந்த, 2012 டிசம்பரில், சென்னையில் நடந்த கலெக்டர் மாநாட்டில், இந்த, 12 மாவட்டங்களில் புதிதாக உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவை துவக்கவும், ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., 10 போலீஸார், 2 டிரைவர் நியமிக்க உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து, தமிழகம் முழுவதுமாக போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களிடம் விருப்பு மனு கோரப்பட்டது. தவிர, மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் மூலம், புதிய மாவட்டங்களில் அலுவலகம் தேர்வு செய்ய உத்தரவிட்டனர். இந்த, 12 மாவட்டங்களில் புதிதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துவங்கி, அலுவலகம் தயாராகவும், பணியிடமாற்றம், விருப்ப மனு மூலம் போலீஸாரை தேர்வு செய்து, தயார் நிலையில் உள்ளனர். போலீஸ் உயரதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவித்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இம்மாவட்டங்களில் புதிதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தை செயல்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைப்பார், என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.