"ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற ஒரு தமிழனின் குரல், அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எட்டியது. ஆனால், இங்குள்ள நம்மிடம் எட்டவில்லை.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர், இதர என்று, 360க்கும் குறையாமல் ஜாதிகள் இருக்கின்றன. இவைகளில், இரண்டு வகுப்பினர்களுக்கு மட்டும், இந்தியா முழுவதும் சுதந்திரம் அடைந்து, ஐம்பது ஆண்டுகள் வரை அனைத்து வகைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு, அரசியல் சட்டத்தின் மூலம் செய்துள்ளது. இது காந்தி கண்ட கனவு.பல்வேறு விஷயங்களில், அமைதிப் பூங்காவாக கருதப்படும், நம் தமிழகம் ஜாதி ரீதியாக, அரை நூற்றாண்டாக வன்முறைக்கு இடம் அளிப்பது, தென் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்குத் தான் அதிகம் தெரியும்.வட தமிழகத்திலும், சமீப காலமாக குறிப்பிட்ட, இரு தரப்பினரிடையே மோதல்கள், கலவரங்களாக முடிந்துள்ளன. கல்வியறிவில், தமிழகம் முதல் பத்து இடங்களுக்குள் பிடித்ததில், அர்த்தமில்லாமல் போய்விட்டது. ஆதி முதல், அந்தம் வரையிலும் அனைத்து விஷயங்களும், ஜாதியை அடிப்படையாக கொண்டே அமைகின்றன. முன்பெல்லாம், இன மோதல்கள் பெரும்பாலும், திருவிழாக்களின் போது தான் வரும்.
இப்போதோ, காதல் மற்றும் காதல் திருமணங்களிலும் வருகிறது. வட தமிழகத்தில் ஒரு விதமாகவும், தென் தமிழகத்தில் வேறு ஒரு விதமாகவும் வருகிறது. சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய தியாகிகள், சமூக நல்லிணக்கத்திற்காக உயிர் நீத்தார்கள். இன்று, அந்தந்த ஜாதிகளுக்கு தலைவர்களாக சித்தரிக்கப்படும் வேளையில், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுவதால், சமூக நலன் மறைந்து சமுதாய நலன்களாக மாறிவிட்டது.பள்ளி, கல்லூரி பருவங்களில், பாலின ரீதியாக ஏற்படும் காதல், தருமத்தை மாவட்டத்தின் பெயரில் இருந்து அகற்றி, அதர்மபுரியாக மாற்றியுள்ளது. மாணவ சமுதாயத்திலும் ஜாதி, மத உணர்வுகளே மேலோங்கி நிற்பதை காட்டுகிறது. இந்தியாவில், புராண காலத்தில் இருந்தே, காதல் செழிப்புடனே இருந்தாலும், அவைகளும் மோதல்களில் தான் முடிந்துள்ளன.பல வகையான திருமணங்கள், அதாவது நிச்சயிக்கப்பட்ட திருமணம், போட்டிகளில் வெற்றி பெற்று கிடைக்கும் திருமணம், கந்தர்வ திருமணம் மற்றும் இதர வகையான திருமணங்கள் இருந்தாலும், இந்த காதல் திருமணங்கள் மட்டுமே, தோல்வியில் முடிந்தால், அது சமூகப் பிரச்னையாகி விடுகிறது.
இந்தியாவில், 19ம் நூற்றாண்டில் ராஜாராம் மோகன்ராய், கேசவ் சந்திரசென், டாக்டர் ஆத்மராய் பாண்டுரங், ரானடே, கோகலே, தயானந்த சரஸ்வதி போன்றோர், சமூக ரீதியாகவும், பாரதியார், பாரதிதாசன், முத்துலெட்சுமி போன்றோர், பெண்ணடிமையை எதிர்த்தும், போராடித் தான், பெண் சுதந்திரத்தினை பெற்றுத் தந்தனர். இவை அனைத்திற்கும் காரணம், கல்வியே. கல்வியும், கலப்புத் திருமணங்களின் மூலம், ஜாதியற்ற உலகம் அமையும் என்றும் நினைத்தோம். ஆனால், இன்று வட தமிழகமே, ஜாதித் தீயினால் பற்றி எரியக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டது. வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்களின் திருமணங்கள், முதலில் வெற்றி என்பதில் துவங்கி, உயிரிழப்பில் போய்விடுவது சோகம் தான். சமீபத்திய, இந்த சம்பவம் நமக்கு பல விஷயங்களை சொல்கிறது. அவை, சாதாரணமாக காதலில் துவங்கி, ஜாதி ரீதியாக சென்று, கட்சி வழியில் நடந்து, கடைசியில் அரசியலில் முடிந்து விட்டது. இதற்கு, அந்த இரு கட்சிகளும் ஒன்றையொன்று, குற்றம் சொல்லும் அளவிற்கு சென்று விட்டதால், தமிழகத்தில் இவைகள் தவிர, பல கட்சிகள் ஜாதி அரசியல் தான் செய்வது, இன்னும் தெளிவாக தெரிகிறது.
கல்வியின் வாயிலாக, சமூக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான், அரசு பள்ளிகளில் இலவச கல்வி, கல்வி உபகரணங்கள், இலவச பஸ் பாஸ் போன்றவைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், மாணவர்கள், இவைகளில் கவனம் செலுத்தாமல், காதல் என்ற விவகாரத்தில் சிக்கி, தாங்களும், தங்களின் பெற்றோரையும் துன்பத்திற்குள்ளாக்கி, தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குகின்றனர். இன்றைய நவீன யுகத்தில், இளம் வயதில் பார்க்க கூடாதவைகள், செய்யக் கூடாத செயல்கள், கணக்கிலடங்கா பணம், பெற்றோரின் கவனக்குறைவு, பிள்ளைகளின் ஏமாற்றும் திறன் இவைகள் அதிகம். அவைகள் தான், இந்த சம்பவங்களுக்கெல்லாம் காரணமாக அமைகின்றன. செல்லமாக வளரும் பிள்ளைகள், தங்களை மீறி திருமணம் செய்வதை மட்டும் பின்னர் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் விளைவு, உயிர்ப்பலி.
திருக்குறள், விவேகானந்தர் உரைகள், பாரதியார் படைப்புகள், கீதை, ஆன்மிகம், பாரம்பரிய விளையாட்டு, சுதந்திர போராட்டத்தின் போது, தமிழகம் எந்த நிலைகளில் இருந்தது போன்றவைகளில், நம் இளைய சமுதாயம் கவனம் செலுத்துவது இல்லை. டேட்டிங், பேஸ்புக், இன்டர்நெட், கபேக்கள், பி.பி.ஓ., தவறான உறவுகள், இவைகளில் கவனம் செலுத்துவதின் விளைவு தான், தர்மபுரி சம்பவம் போன்ற உயிர்ப்பலிகள், அரசு சொத்துகள் சேதம், தேவையற்ற பதற்றங்கள் உருவாக காரணமாக அமைகின்றன.ஊடகங்கள், இவற்றை பரபரப்பு செய்திகளாக்கி, தங்களின் "ரேட்டிங்' கை ஏற்றிக் கொள்வது, ஒரு புறம் இருந்தாலும், சினிமாக்களில் ஜாதி மதங்களை இழிவுபடுத்துகின்றனனர், புத்தகங்களை தடை செய்வது, ஜாதித் தலைவர்கள் பிறந்த, இறந்த தினங்களை கலவரங்களில் முடிப்பது போன்றவைகள், நம் மாநிலத்தில் அதிகரிப்பது, அமைதிச் சூழலை தடுக்கிறது.
கடந்த, 1997-98களில் ஜாதிக்கலவரம் நிகழ்ந்த போது, அப்போதைய அரசு, ஜாதி தலைவர்கள் பெயரை மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு நீக்கி கலவரங்களை தடுத்தது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு, ஒற்றுமையே பலம் என்றெல்லாம், உலகில் நம் பெருமைகள் பறை சாற்றும் வேளையில், கல்வியறிவு பெற்று சிறப்பான தேர்ச்சிகள் நிகழும் தருணத்தில், நாம் ஜாதித்தீயில் கருகாமல், வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்க வேண்டும்.
இ-மெயில்: ckkeyan 77@yahoo.in
சி.கார்த்திகேயன் -
எழுத்தாளர்