சென்னை:""முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும்,'' என அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திசிதம்பரம் பேசினார்.தேசிய நண்பர்கள் குழு சார்பில் புனித ரமலான் (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி. அப்துல்காதர் தலைமை வகித்தார். தாராஷபி தொகுத்து வழங்கினார்.
செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பேசும் போது, "" தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் மலரும் போது மதுக்கடைகள் மூடப்படும்,'' என்றார்.அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன. ஆனால், முஸ்லிம்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை பதிவு செய்யவில்லை. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு காங்கிரஸ் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.
எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராகத் தான் உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையாக தான் இருக்கிறது. முஸ்லிம்கள் தங்களது கருத்தை ஆழமாக சொல்ல வேண்டும். அவர்களின் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும்.காங்கிரஸ் கட்சியும் மற்ற பிரதான கட்சிகளும் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது.
மதச்சார்பின்மை கட்சிகள் என சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தங்களுக்கு வசதி என்றால் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி வைக்கின்றன. பா.ஜ.,வின் எதிர்ப்பு இயக்கமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது. மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு கல்வி பயில வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வி பயில வேண்டும். கல்வி அறிவு கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும். வறுமையை ஒழிக்க முடியம்.
விடுதலை கிடைக்கும்.இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.விழாவில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, ராஜ்குமார், சுந்தரம், சிரஞ்சீவி, கராத்தே தியாகராஜன், , ஹசீனா சையத், ரஞ்சன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.