பொது செய்தி

தமிழ்நாடு

கவிஞர் வாலி உடல் தகனம்

Updated : ஜூலை 19, 2013 | Added : ஜூலை 18, 2013 | கருத்துகள் (78)
Advertisement
Noted lyricist Vaali dies at 82

சென்னை: பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர், வாலி, 82, மாரடைப்பால் நேற்று இறந்தார். அவரது உடலுக்கு, திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில் திரளானவர்‌கள் பங்கேற்றனர். சென்னை பெசன்ட்நகர் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு மகன் பாலாஜி தீ மூட்டினார்.
கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வாலி, இரண்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நுரையீரல் தொற்று நோய் மற்றும் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை, மூச்சுத் திணறல் அதிகமானதால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு வாலி இறந்தார். அவரது உடல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள கற்பகம் அவின்யூ வீட்டிற்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. திரையுலகத்தினர், பாடகர்கள், பாடகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வாலியின் மனைவி ரமணத் திலகம், இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். பாலாஜி என்ற மகன் உள்ளார்.

கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். துவக்கத்தில் எழுத்தாளராக ஆசைப்பட்ட வாலி, நண்பர்களுடன் சேர்ந்து, "நேதாஜி' என்ற கையெழுத்து பத்திரிகையை துவங்கினார். திருச்சி வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதினார். திரைப் படங்களுக்கு பாடல் எழுத ஆசைப்பட்டு சென்னை வந்தார்; அவர் நினைத்தது நடந்தது. 1958ல், "அழகர் மலை கள்வன்' படத்தில், "நிலவும் தரையும் நீயம்மா...' என்ற பாடலை வாலி எழுத, டி.கோபாலன் இசையில், பி.சுசிலா பாடினார். இதன் பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் துவங்கி, இன்றைய இளைய முன்னணி கதாநாயகர் வரை அனைவரின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். இதுவரை, 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என, பல துறைகளிலும் கால் பதித்துள்ளார். சிறுகதை, கவிதை, உரைநடை என, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வெற்றிலை பாக்கு பிரியரான இவர், இப்பழக்கத்தை 15 வயதிலிருந்து தொடர்ந்து, 76 வயதில் நிறுத்தினார். "அவதார புருஷன்', "அழகிய சிங்கர்' என கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.


நூல்கள், படங்கள்:

கவிஞர் வாலியின், "அம்மா, அவதாரபுருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், கலைஞர் காவியம், கிருஷ்ண பக்தன், நானும் இந்திய நூற்றாண்டும், வாலிப வாலி' ஆகிய நூல்கள் பிரபலமாக பேசப்பட்டன. இவர், "சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்கால் குதிரை' படங்களில் நடித்துள்ளார்.


17 படங்களுக்கு திரைக்கதை:

"கலியுகக் கண்ணன், காரோட்டி கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக்குருவி, ஒரே ஒரு கிராமத்திலே' உட்பட, 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் மாருதி ராவுடன் இணைந்து, "வடை மாலை' படத்தை இயக்கவும் செய்தார்.


விருதுகள்:

வாலியின் கலைச் சேவையை பாராட்டி, 2007ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். "எங்கள் தங்கம், இவர்கள் வித்தியாசமானவர்கள், வருஷம் பதினாறு, அபூர்வ சகோதரர்கள், கேளடி கண்மணி, தசாவதாரம்' படங்களுக்கு பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசினால், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை, ஐந்து முறை பெற்றுள்ளார். பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருதுகளும் பெற்றுள்ளார். 1973ல், பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற "இந்திய நாடு என் வீடு... இந்தியன் என்பது என் பேரு' என்ற பாடல் வரிகளுக்காக, தேசிய விருது கிடைத்தது. ஆனால், வாலி விருதை ஏற்க மறுத்து விட்டார்.


மனதை "திருடிய' திரைப்பாடல்கள்எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், சிம்பு, சிவகார்த்திகேயன் என, மூன்று தலைமுறைகள் கடந்து, திரைப்பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட, இவரது பாடல்களில் சில:
* மன்னவனே அழலாமா... கண்ணீரை விடலாமா....* தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்...* நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...... * காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்... * சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ...* ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...* அந்த நாள் ஞாபகம் - நெஞ்சிலே வந்தே நண்பனே, நண்பனே...* மாதவிப் பொன் மயிலாள் தோகைவிரித்தாள்...* ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...* மல்லிகை... என் மன்னன் மயங்கும், பொன்னான மலரல்லவோ...* வெற்றி வேண்டுமா... போட்டுப்பாரடா எதிர்நீச்சல்...* புன்னகை மன்னன், பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக...* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...* "புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது* நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ...* ஏமாற்றாதே ஏமாறாதே...* கண் போன போக்கிலே கால் போகலாமா...* நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும்...* ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதல் இரவு...* இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...* ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை...* அம்மா என்றழைக்காத உயிரில்லையே...* சுந்தரி கண்ணால் ஒரு சேதி...* ரோஜா ரோஜா...
பழைய பாடல்கள் என்று இல்லை, காலத்திற்கேற்ப புதிய படங்களையும் இவரது "வாலிபமான' பாடல்கள் ஆக்கிரமித்தன.* கொஞ்ச நாள் பொறு தலைவா... அந்த வஞ்சிக்கொடி இங்கு வருவா... * அடி ஒன் இஞ்ச், டூ இஞ்ச், த்ரி இஞ்ச் கேப் ஏண்டியம்மா... * மாசி மாசி... காதல் வாசி...* மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாய்..
இதைத் தவிர, தற்போது திரைக்கு வந்த "தில்லுமுல்லு', "மரியான்', "உதயம் "என்.எச்., 4', "எதிர்நீச்சல்', "அலெக்ஸ் பாண்டியன்' போன்ற பாடங்களிலும், இவரது படைப்புகள் இடம்பெற்றன.
"காதோடு தான் நான் பாடுவேன்... மனதோடு தான் நான் பேசுவேன்...''
- இந்த வரிகள், ஒவ்வொரு தமிழ் திரைப்பட பாடல் ரசிகனுக்கும், தன்னைப் பற்றி கவிஞர் வாலி, சொல்லிவிட்டு சென்றதாகவே கருத வேண்டி உள்ளது. அவரது, ""வார்த்தைக்கு வயதில்லை கருத்துக்கு காலம் இல்லை சிந்தனைக்கு சிதைவு இல்லை'' -நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே, "வயசாயிப்போச்சு...' என புலம்புவோர் மத்தியில், 82வது வயது வரை, "வாலி'பராகவே வலம் வந்தவர் வாலி. இதுவரை, அவர் இயற்றியது 1000 படங்களுக்கு, 15 ஆயிரம்


புத்தகங்கள்:

கவிஞர் வாலி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

* பாண்டவர் பூமி * ஆறுமுக அந்தாதி* பகவத்கீதை கவிதை நடை* சரவண சதகம்* இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்* கம்பன் என்பது* நானும், இந்த நூற்றாண்டும் * நினைவு நாடாக்கள் உள்ளிட்ட ஏராளமான பாடல்கள், அழியாத காவியமாகவே விளங்குகின்றன. இது தவிர, "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' உட்பட பல தனி பாடல்களும் வாலியை, பாராட்டு மழையில் நனைய வைத்தன.


பெயர் மாற்றம்:

ரங்கராஜனுக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது; நன்றாக படம் வரையும் திறமையும் இருந்தது. வார இதழ் ஒன்றில், ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த, ஓவியர் மாலியை போல, தானும் ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதை தெரிந்து கொண்ட பள்ளி தோழன் பாபு, "மாலியை போல நீயும் சிறந்த ஓவியராக வரவேண்டும்' என்று கூறி, ரங்கராஜனுக்கு, "வாலி' என, பெயர் வைத்தார்.


"சின்னத் தாயவள் தந்த ராசாவே': பின்னணி பாடகி மஹதி"ஒஸ்தி' பட இசை வெளியீட்டு விழாவிற்கு, வாலி வந்திருந்தார். அந்தப் படத்தில், "நெடுவாலி...' என்ற பாடலை பாடியிருந்தேன். விழாவில், "உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?' என்று, நான் கேட்க, அவரோ, "உங்களின் கர்நாடக இசை மிகவும் பிடிக்கும்; உங்களோடு நான் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?' என்று கேட்டார். நான் பாடிய, "தீயில்லை... புகையில்லை... ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே...' பாட்டு, அவர் கைப்பட எழுதிய காகிதத்தை, என்னிடம் பாடக் கொடுத்தனர். எனக்கு வாலியின் நினைவாக வைத்துக்கொள்ளத் தோன்றியது. இசையமைப்பாளரிடம் கேட்டு, அந்த கையெழுத்து பிரதியை, என்னிடம் வைத்துக் கொண்டேன். அவர் எழுதியதில் என்னைக் கவர்ந்தது, "சுந்தரி... கண்ணால் ஒரு சேதி மற்றும் சின்னத் தாயவள் தந்த ராசாவே...' பாடல்கள் தான்.


தலைமுறை கவிஞர்:

திண்டுக்கல் லியோனி, பட்டிமன்ற நடுவர்: அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்களை எழுதி, மலைக்க வைத்தவர் கவிஞர் வாலி. இலக்கிய கற்பனைகளில் புதுமையை புகுத்தியவர். ""மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே. போரில் புதுமைகள் புரிந்த சேரனின் வில்லை, உன் புருவத்தில் கண்டேனே. தஞ்சையில் பறந்த புலிக்கொடியை, உன் பெண்மையில் கண்டேனே. இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே'' என பெண்ணை, தமிழகத்தோடு ஒப்பிட்டு எழுதியவர். "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே,' என்று எல்லோருக்கும் புரியும் வகையில் எண்ணங்களை தெளிவுபடுத்தியவர்.


தீர்க்கதரிசன கவிஞர்:

கவிஞர் முத்துலிங்கம்: எனது 45 ஆண்டுகால நண்பர். சினிமா பாடல்களைத்தவிர, பத்திரிகைகள், கவியரங்கங்களுக்கு வாலி கவிதை எழுதுவார். அக்கவிதைகளை என்னிடம் வாசித்து காண்பித்தபின், பத்திரிகைகளுக்கு அனுப்புவார்; நான், அவரை விட வயதில் இளையவன். அப்படி இருந்தும், என்னை வழிகாட்டியாக கொண்டிருந்தார். இந்த நட்புக்கு, தமிழ்தான் காரணம். இந்திய சினிமா வரலாற்றில், 10 ஆயிரம் பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர்; பாபநாசம் சிவனுக்கு பின், இசையறிவுடன் திகழ்ந்த கவிஞர். "நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால், இந்த ஏழைகள் வேதனைப்படமாட்டார்...,' என தீர்க்கதரிசனமாக, எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பாடல் எழுதியவர்.


தமிழே உன் தலையெழுத்து:

மதுரை ரேடியோ நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம்: ""பூ முகத்து புன்னகையே இனி யார் முகத்தில் பார்ப்போம்! புது நடையில் சொற்பொழிவை யாரிடத்தில் கேட்போம்! நடை துள்ளும் தமிழுக்கு பகை வந்தால், அங்கே உடைவாளை எடுக்கின்ற பெரும் வீரர் எங்கே? இமை மூடிக் கொண்டாய்! புதை குழியில் மெல்ல தமிழே உன் தலையெழுத்தை நான் என்ன சொல்ல?'' -இது அண்ணாதுரை இறந்த போது, கவிஞர் வாலி எழுதியது. வாலிக்கும், இது பொருந்தும்.


மனம் மாறிய வாலி:

கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி, இளமையில் வறுமையின் காரணமாக, ஒருமுறை தற்கொலை முடிவை' எடுத்தார். அப்போது கண்ணதாசன் "சுமைதாங்கி' என்ற படத்துக்காக எழுதிய, "மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா...' என்ற பாடலில் வரும், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு...' என்ற பாடல் வரியைக் கேட்ட வாலி, மனம் மாறி தற்கொலை முடிவை கைவிட்டார்.


இதுக்கு மேல் எழுத முடியாது:

"அபூர்வ சகோதரர்கள்' படத்துக்காக, காதல் தோல்வி தொடர்பாக வாலி பாடல் எழுதினார். அதில் திருப்தி அடையாத நடிகர் கமல், மீண்டும் கேட்டார். இதுமாதிரி ஐந்து முறை பாடலை மாற்றிய வாலி, 5 தடவைக்குப் பின், இதற்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என கூறி, கோபத்துடன் ஒரு பாடலை கமலிடம் கொடுத்தார். அந்த பாடல்தான், "உன்ன நெனச்சேன்... பாட்டு படிச்சேன்... தங்கமே, ஞானத்தங்கமே...' என்ற பாடல்.


வாலியின் வரி:

""அன்று 24 மணி நேரம் இருந்தது. ஆனால் சாப்பிட எதுவும் இல்லை. இன்று சாப்பிட அனைத்தும் இருக்குகிறது; ஆனால் நேரம் இல்லை'' என வாலி ஒரு முறை குறிப்பிட்டார்.


வாலி "1000':

கவிஞர் வாலியின் 80வது பிறந்த தின நிகழ்ச்சியில், ஆயிரம் படங்களுக்கு அவர் பாடல் எழுதியதை பாராட்டி, "பிரம்ம கான சபை' சார்பில், 2010 நவ., 13ல், "வாலி - 1000' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.


பிரதிபலித்த வாலி:

எம்.ஜி.ஆர்., படங்களுக்கு அதிகளவில் வாலி பாடல்களை எழுதினார். எம்.ஜி.ஆர்., கருத்துக்களை பாடல்களில் வாலி பிரதிபலித்தார். எம்.ஜி.ஆர்., புகழுக்கு, வாலியின் பாடல் வரிகளும் ஒரு காரணமாக அமைந்தன. அந்தளவு இருவரது உறவு, நட்பு வட்டத்தை தாண்டி இருந்தது.


எளிதில் புரியும்:

வாலியின் பாடல் வரிகள், சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்கும். அதே வகையில் சில பாடல்களில் பிற மொழி வார்த்தைகளை கலந்தும் பாடல்களை எழுதியுள்ளார். வாலி தத்துவ பாடல்களை மட்டும் எழுதவில்லை.


எம்.ஜி.ஆர்., தந்த கடிகாரம்:

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்: நல்ல ஓவியர். இவர் வரைந்த பாரதியாரின் ஓவியத்தை பார்த்து, "என் அப்பாவைப் பார்த்தது போலிருக்கிறது' என, பாரதியாரின் மகள் வியந்ததுண்டு. நிறைய நாடகங்கள் எழுதியுள்ளார். இலக்கியவாதியும் கூட. இந்த தலைமுறைக்கேற்ப மகாபாரதத்தை "பாண்டவர் பூமி' யாக, ராமாயணத்தை "அவதாரபுருஷனாக', புதுக்கவிதையாக மாற்றித் தந்தவர். "அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே...' பாட்டெழுதியவர், வாலி. ஆனால் இசையமைப்பாளர் விஸ்வநாதன், "எனக்காக கண்ணதாசன் எழுதியது' என்று தன்னை மறந்து சொன்னாராம். "கற்பகம்' படத்தின் "மன்னவனே... அழலாமா... அத்தை மடி மெத்தையடி... பக்கத்து வீட்டு பருவமச்சான்....' பாடல்கள், வெற்றியைத் தந்தது. டி.எம்.எஸ்.,க்காக ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிய பாடல் தான், "கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும்... கந்தனே உனை மறவேன்'. கலங்கரை விளக்கம் படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் மெட்டு அமைத்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர்., வாலியிடம், "15 நிமிடத்திற்குள் இந்த மெட்டுக்கு பாட்டு எழுதினால், என் கைக்கடிகாரத்தை தருகிறேன்' என்றார். சொன்ன நேரத்திற்குள், "காற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்...' என்றெழுதியதும், எம்.ஜி.ஆர்., கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். மூன்று முறை அவரை சந்தித்துள்ளேன். சமீபத்தில் கூட சென்னைக்கு சென்று, குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கினேன்.


வலிமை கவிஞர் வாலி:

கவிஞர் நெல்லை ஜெயந்தா: 1958ம் ஆண்டு முதல் இன்று வரையிலும், திரைத்துறையில் தேடப்படும் ஒரே நபர் வாலி. பாடல்களில் பழமையும், புதுமையையும் தரும் வலிமை, வாலிக்குத் தான் இருந்தது. "டிமாண்ட்' செய்யும் ஒரே பாடலாசிரியர். யாராக இருந்தாலும் இவரிடம் பாடல் கேட்டால் 4 பல்லவி, 4 சரணம் கொடுத்துவிடுவார். சிலர் புதியவர்களுக்கு, சிலவரிகளை கொடுப்பார்கள்; ஆனால், வாலிக்கு அந்த பழக்கமே இல்லை. தெரியாத விஷயங்களை தெரிந்தவர்களிடம், தன்னை ஒரு முட்டாள் போல் நினைத்து கேட்பார். ஆயிரக்கணக்கான அவரது பாடல்களில் பலதை ரசித்தாலும், எனக்கு அவரது பழைய பாடல்களில் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...' புதிய பாடல்களில் "என்ன விலை அழகே...' மிகவும் ரசித்துக் கேட்பேன். வாலி, பெரும்பாலும் தனிமையைத் தான் விரும்புவார். நன்கு பழகியவர்களை எந்த இடத்தில் கண்டாலும் அழைத்து பேசுவார். அது போல், ஒருவரை சந்திக்க "அப்பாயின்மென்ட்' கொடுத்த பின், அதைவிட புகழ்பெற்ற அல்லது மிக முக்கியமான நபராக இருந்தாலும், அந்த நேரத்தை மாற்ற மாட்டார்.


வந்ததும் காலி; காரணம் "வாலி':

கவிஞர் வாலியின் வரிகளுக்கு அன்றும், இன்றும் இருக்கும் "மவுசுக்கு', அதை தாங்கி வந்த "கேசட்', "சிடி'களின் விற்பனையே சாட்சி. குறிப்பாக, வாலி-எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ்கள், லட்சக்கணக்கில் விற்றுள்ளன. இன்றும், தொடர்ந்து விற்பனைக்கு வருகின்றன. "நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்', "ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை', "காற்று வாங்க போனேன்... கவிதை வாங்கி வந்தேன்', "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...' போன்ற எம்.ஜி.ஆர்., ன் காலத்தால் அழியாத பாடல்களின் அமோக விற்பனையில், வாலியின் வரிகளும் பின்னணியில் அணிவகுத்தன. டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய, "கற்பனை என்றாலும்', "ஓராறு முகமும்... ஈராறு கரமும்...' போன்ற பக்தி பாமாலைகளுக்கும், வரிகளால் பூமாலை கோர்த்தவர், வாலி. எம்.ஜி.ஆர்., டி.எம்.சவுந்தர்ராஜனுக்கு அடுத்தபடியாக, அதிக ஆல்பங்கள் விற்பனைக்கு வருவது, வாலியின் பாடல்கள் தான். மதுரை, கீஷ்டுகானம் உரிமையாளர் துளசிராமிடம் கேட்ட போது, ""எனது 25 ஆண்டு கால ஆடியோ விற்பனையில், துவக்க காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு "டெமோ' காட்ட, வாலியின் வரிகளில், டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய பாடல்களை தான், ஒலிக்கச் செய்து காட்டுவோம். அதை கேட்டதுமே, கேசட் விற்றுவிடும். ஒவ்வொரு சீசனிலும், 30க்கும் மேற்பட்ட ஆல்பங்கள், வாலி பெயரில் விற்பனைக்கு வரும். அடுத்த சீசன் வருவதற்குள், முன்பு வந்தவை விற்றுவிடும். வாலியின் வரிகளை தேடி வரும் ரசிகர்கள், 70வயதிலும் இருக்கிறார்கள், 20லும் இருக்கிறார்கள். வாலி-எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ் விற்பனையை, வேறு எந்த ஆல்பமும் முறியடிக்க முடியாது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sornavelu Sornavelu - COIMBATORE,இந்தியா
25-செப்-201323:55:24 IST Report Abuse
Sornavelu Sornavelu மாற்று கருத்து ஒன்றும் இல்லவே இல்லை. வேண்டுமானால் இன்னொரு முறையும் அதைத்தான் சொல்லுவேன்
Rate this:
Share this comment
Cancel
Sornavelu Sornavelu - COIMBATORE,இந்தியா
25-செப்-201323:46:31 IST Report Abuse
Sornavelu Sornavelu அவ்வளவு பாடல்களையும் மக்கள் மன்றத்தில் பதிவு செய்து, பெரும் புரட்சி செய்த கவிஞர் வாலியே, நீ மீண்டும் பிறந்து வா என கேட்கிறோம் வழியவே, உண் புகழ் மாத்திரமல்ல உண் பாடல்களும் வாழியவே.
Rate this:
Share this comment
Cancel
Ramanathan AV - Chennai,இந்தியா
20-ஜூலை-201300:19:56 IST Report Abuse
Ramanathan AV கால மாற்றத்தில் காணாமல் போனவர்களில் வாலி வேறுபட்டவர் மாற்றத்தோடு ஒட்டிப்போய், அந்தக்காலத்திற்கும், இந்தக்காலத்திற்கும் பொருத்தமான பாடல்களை எழுதி எல்லோரையும் கவர்ந்தவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X