பழநி: பழநி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' (பெருங்கற்களாலான அமைப்பு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது "சவுக்கை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாராயண மூர்த்தி கூறியதாவது: இங்குள்ள மலைப்பகுதியில் இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர். தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத எழுத்து வடிவில் உள்ளது. சூரிய ஒளியின் நகர்வுப்பாதையை கணிக்க இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் இவ்வமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனை சவுக்கை என்பர். 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஓர் ஆண்டில் 6 மாதம் காலத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் பயணத்தை தட்சணாயண காலம் என்றும், மீதி உள்ள 6 மாத காலத்தில், தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் காலத்தை உத்தராயண காலம் என்றும் கணித்துள்ளனர். இந்தாண்டு தட்சணாயணத் துவக்க நாளான ஆடி 1-ல் சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக, சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுவதை காண முடிந்தது. மூன்று நாட்கள் இதுபோல் ஒளியை காணலாம். இதைப்போல் உத்தராயணகால, துவக்க நாளான தை 1-ல் சூரியன் மறையும் போது, ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவதற்கு ஏற்பவும், இந்த சவுக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சவுக்கைகள் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் உள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE