சைவ, வைணவ ஒற்றுமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சைவ, வைணவ ஒற்றுமை

Added : ஜூலை 19, 2013

அவிநாசிக்கு கிழக்கே, பழங்கரையில் அமைந்துள்ள பொன்
சோழீஸ்வரர் கோவில், கி.பி., 10ம் நூற்றாண்டில் கொங்கு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பெருமை வாய்ந்தது. முற்காலத்தில், வணிக பெருவழியாக இருந்த, இதே தேசிய நெடுஞ்சாலையில், சைவ வணிகர்கள் வணங்குவதற்காக,
இக்கோவில் கற்றளியாக கட்டப்பட்டது.
கொங்கு நாட்டின், 24 பிரிவுகளில் அவிநாசி வட்டார பகுதிகள் அடங்கியது வடபரிசார நாடு என்றழைக்கப்பட்டது. அதில், பழங்கரையும் ஒன்று. ஒரு காலத்தில், கோவிலுக்கு மேற்கில் (பின்புறத்தில்) "அக்னிமா நதி' என்ற ஆறு ஓடியுள்ளது. நீரை தேக்கி வைக்கும், செக் டேம் இன்றும் காட்சியளிப்பது, ஆறு இருந்ததற்கான அடையாளத்தை நினைவு படுத்துகிறது.
கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம், கோவில் கட்டிய காலத்தை அறிய முடிகிறது. கொங்கு சோழன் வீர ராஜேந்திர சோழனின் (கி.பி., 1207 - 1256) மூன்று கல்வெட்டுகளும், மூன்றாவது விக்கிர சோழனின் (கி.பி., 1273 - 1303) ஒரு கல்வெட்டும், விஜயநகர அரசர் அச்சுதராயரின் (கி.பி., 1530 - 1542) இரண்டு கல்வெட்டுகளும் கோவிலில் காணப்படுகின்றன.

கல்வெட்டுகள் கூறுவதென்ன?
அக்கல்வெட்டுகளில் இருந்து, பழங்கரையில் கோவில் கொண்டுள்ள இறைவனின் பெயர் "முன் தோன்றீச்சுர முடையார்' எனவும், இறைவியின் (அம்மன்) பெயர் "சுரும்பார் பூங்குழலி அம்பிகை' எனவும் அறியப்படுகிறது. ஆனால், அம்பிகைக்கு கி.பி., 13 அல்லது 14ம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டது. சோழர்களால் கட்டப்பட்ட கோவில் என்பதால், "பொன் சோழீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறது. இறைவன் பெயரிலிருந்த "முன்' என்ற சொல், காலப்போக்கில் திரிந்து, பொன் ஆகியுள்ளது. அவிநாசிக்கு கிழக்கிலும், திருமுருகன்பூண்டிக்கு அருகிலும், "நாக கன்னிகாபுரி' என்ற ஊரும், நாக கன்னிகாபுரி கோட்டையும் இருந்ததாக, சோழன் பூர்வ பட்டயம் எனும் நூலில் குறிப்புகள் உள்ளன. அதன் மூலம், தற்போதுள்ள பழங்கரை, நாக கன்னிகாபுரியாக இருந்துள்ளது என்பதை அறியலாம். திருமுருகன்பூண்டி கோவிலிலுள்ள கல்வெட்டில், பழங்கரை அருகே படை வீடு (படை வீரர்கள் தங்கியிருந்த இடம்) இருந்ததாக குறிப்பு காணப்படுகிறது. எனவே, பழங்கரையில் கோட்டையும், படை வீடுகளும் இருந்துள்ளது உறுதியாகிறது.
அமுதுபடிக்காக நெல்மணிகளை நீர்வார்த்து கொடுத்தும், யானை சின்னம் பொறித்த காசுகளை திருக்கார்த்திகை நாளன்று சிறப்பமுது செய்யக் கொடுத்ததும், பழங்கரை ஊர்ச்சபையாரும், குடிமக்களும் கம்பு அளித்ததும், அவிநாசி சொக்கஞான சம்பந்த வள்ளல் மடத்தின் சிவபூஜைக்கும், ஆகியவற்றுக்கு பழங்கரையூரில் உள்ள நிலங்கள் தானமாக கொடுத்த செய்திகளும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.

ஒற்றுமைக்கு உதாரணம்
தமிழகத்தில் சைவம் மற்றும் வைணவ சம்பிரதாயங்களுக்கு இடையே நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகள் இன்றளவும் பேசப்படுகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், இக்கோவிலுக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக நித்ய கல்யாண சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியின் ஈசானிய மூலையில் (வட கிழக்கு பகுதி) முன் மண்டபத்துடன் இணைத்து பெருமாள் சன்னதி கட்டப்பட்டுள்ளது.
பெருமாளுக்கு, சிவாச்சாரியரே, தினமும் அனைத்து கைங்கர்யங்களையும் மேற்கொள்கிறார். விஜயநகர அச்சுதராயர் காலத்தில், சிவன், பெருமாள், அம்மன் சன்னதிகள், திருமதில் ஆகிய திருப்பணிகள் செய்திருக்க வேண்டும். சைவ, வைணவ ஒற்றுமைக்கு மிகச்சிறந்த உதாரணமாக, பழங்கரை கோவில் இன்றும் விளங்குகிறது, என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X