நேரத்தைக் காட்டும் கடிகாரம் போல, உலக மக்கள் தொகையைக் காட்டும் கடிகாரம் ஒன்று உள்ளது. இணையதளத்தில் இந்தக் கடிகாரத்தைப் பார்க்கலாம். இம்மாதம், 11ம் தேதி, "உலக மக்கள் தொகை' தினத்தன்று இந்தக் கடிகாரம் காட்டிய உலக மக்கள் தொகை அளவு, 710 கோடி. பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் இந்தக் கடிகாரம், "புரோகிராம்' செய்யப்பட்டு உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள் தொகை, நூற்றாண்டின் இறுதியில், 600 கோடியை மிஞ்சி விட்டது. அதாவது, 19 நூற்றாண்டுகளில் அதிகரித்த மக்கள் தொகையைப் போல், இரு மடங்கு, ஒரே நூற்றாண்டில் அதிகரித்து இருக்கிறது.மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பிய, ஐக்கிய நாடுகள் சபை, ஜூலை 11ம் தேதியை, உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.உலக மக்கள் தொகை, 500 கோடியை எட்டிய தினம், 1986 ஜூலை 11ம் தேதி. அதன் காரணமாகத் தான், அந்த குறிப்பிட்ட தேதியை, உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது, ஐ.நா., சபை. அதன் படி, 1987 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது, மக்கள் தொகை தினத்தின் முக்கிய நோக்கங்கள்.பல இடங்களில் இந்த தினம், "கொண்டாடப்படுவதாக' சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்வது தவறு. இந்த தினம், "கடைப்பிடிக்கப்பட' வேண்டிய தினம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களைக் கொண்டாட வேண்டும். தேசத் தலைவர்கள், அறிஞர்கள் போன்றோர், மறைந்த தினங்களை அனுசரிக்க வேண்டும். கொண்டாட்டத்திற்கோ, அனுசரிப்பதற்கோ ஏற்புடையதல்லாத பிற தினங்களை, கடைபிடிக்க வேண்டும்.உலகளவில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருவது, மக்கள் தொகைப் பெருக்கம். இதன் காரணமாக, வளர்ச்சியின் பலன்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றன. அளவான மக்கள் தொகை அச்சமற்றது, அவசியமானது. அளவு கடந்த மக்கள் தொகைப் பெருக்கம், ஆபத்தானது.
உலக மக்கள் தொகையில், முதல், 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளில், முதலிடம் வகிப்பது சீனா. 20 சதவீத மக்கள் தொகையை, சீனா கொண்டிருக்கிறது. இரண்டாம் இடம் வகிப்பது, இந்தியா. உலக மக்கள் தொகையில், 18 சதவீதம் இந்தியாவில் உள்ளது. மூன்றாவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் பங்கு வெறும், 5 சதவீதம்தான்.இதைத் தொடர்ந்து, அந்த வரிசையில் இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், நைஜிரியா, வங்கதேசம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஆக, சீனாவும், இந்தியாவும் மட்டுமே மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான, 38 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்பு, வளரும் நாடுகளில் தான் அதிகமாக உள்ளது. காரணம், உலக வளத்தில், 80 சதவீதத்தை வைத்திருக்கும் வளர்ந்த நாடுகளான, செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை, 20 சதவீதம். வெறும், 20 சதவீத வளங்களைக் கொண்டிருக்கும் வளரும் நாடுகளான, ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ, 80 சதவீதம்.மக்கள் தொகை மிகுந்த நாடாக சீனா இருப்பினும், மக்கள் நெருக்கடி மிகுந்த நாடாக இந்தியா இருக்கிறது. இதற்குக் காரணம், இந்தியாவைப் போல, மூன்று மடங்கு பரப்பளவைக் கொண்டது சீனா. இந்தியாவில் சுதந்திரத்தின் போது, 34 கோடியாக இருந்த மக்கள் தொகை, தற்போது, 127 கோடியாக உயர்ந்து விட்டது.
உலக நிலப்பரப்பில் வெறும், 2.4 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில், 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது. உலக மக்கள் தொகையில், ஆறு பேரில் ஒருவர் இந்தியர்.இந்தியாவின் மக்கள் தொகை, வரும், 2018ல், 145 கோடியாக அதிகரித்து, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என, ஐ.நா., சபை தெரிவித்து உள்ளது.
மக்கள் தொகையில், இந்தியாவில் முதலிடம் வகிக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை, பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக இருக்கிறது. இரண்டாவது பெரிய மாநிலமான, மகாராஷ்டிர மாநிலத்தின் மக்கள் தொகை, மெக்சிகோ நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது. மூன்றாவது பெரிய மாநிலமான, பீகாரின் மக்கள் தொகை, ஜெர்மனி நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றில் இருந்து, வன்முறை, கொலை, கொள்ளை வரையிலான அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என, உறுதியாகச் சொல்லலாம்.
ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறினால், முன்னேற்றம் காண முடியாது. அளவோடு பெற்றால் தான், வளமோடு வாழ முடியும். வீட்டுக்குப் பொருந்தும் இந்த நியதி, நாட்டுக்கும் பொருந்தும்.மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து, இரு வேறு கருத்துகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. மக்கள் தொகைப் பெருக்கத்தை, சுமை என்று ஒரு சாராரும், அது ஒரு சொத்து என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர்.மேலும், மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட, மக்கள் தொகைக் குறைந்து விட்டால், அது பேராபத்தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக, உழைக்கும் மக்களின் எண்ணிக்கைக் குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை, ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.அறிவுப் புரட்சி மேலோங்கி இருக்கும் காலகட்டத்தில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம், ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது என்ற கருத்து, பழங்கதையாகி, அறிவுத்திறனே முக்கிய காரணி என்ற கருத்து, உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே, 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காக உள்ளது.இந்த அடிப்படையில் தான், ஒரு நாட்டின், "வளர்ச்சி' என்பது, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதாக மட்டும் அல்லாமல், மானுட வளர்ச்சியை உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். இதற்காக, 1990ல், ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டம், "மானுட வளர்ச்சிக் குறியீட்டு எண்' என்ற புதிய அளவுகோலை அறிமுகப்படுத்தியது.சில மாதங்களுக்கு முன், 2013ம் ஆண்டிற்கான, "மானுட வளர்ச்சி அறிக்கை' வெளியிடப்பட்டு உள்ளது. ஐ.நா.,வின் உறுப்பு நாடுகளான, 192 நாடுகளில், 186 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தியா, 0.55 புள்ளிகளைப் பெற்று, நடுத்தர வளர்ச்சிப் பட்டியலில், 136வது இடத்தில் உள்ளது.இந்தியாவிற்கு மேலாக சீனா, 101வது இடத்திலும், இலங்கை, 92வது இடத்திலும் உள்ளன. இந்தியாவிற்குக் கீழாக வங்கதேசம், 146வது இடத்திலும், பாகிஸ்தான், 145வது இடத்திலும் உள்ளன.
மிக உயர்ந்த வளர்ச்சிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே, நார்வே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. கடைசி மூன்று நாடுகளாக, மொசாம்பிக், காங்கோ, நைஜர் (186வது ரேங்க்) ஆகியவை உள்ளன.ஆக, இந்தியா இன்னும் மானுட வளர்ச்சியில் செல்ல வேண்டிய பயணத் தூரம், அதிகமாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை, அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, "மிக உயர்ந்த' வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம் பெற முடியும்.இன்றைய நிலையில் இந்தியாவில், 65 சதவீத மக்கள், 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது, நமக்கிருக்கும் மிகப்பெரிய பலம்."இந்தியா ஏழைகள் வாழும் செல்வந்த நாடு' என்பர். இந்தியாவில் செம்மைப்படுத்தப்படாத, பக்குவப்படுத்தப்படாத, வெளிச்சத்திற்கு வராத பல திறமைகள் புதைந்து கிடப்பது போல், உலகில் வேறு எங்கும் இல்லை' என்று, 20ம் நூற்றாண்டின், தலைசிறந்த நிர்வாகி என்று கருதப்படும், ஜாக் வெல்ச் கூறுகிறார்.இயற்கையின் உன்னதப் படைப்பு மனிதன். இயற்கை வளம் மிகுந்த இந்தியாவில், மகா சக்தியாக விளங்கும் மனித சக்தியை முறையான கல்வி அளித்து, அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து, உள்ளார்ந்த திறனை வளர்த்து, ஆக்க வழியில் ஈடுபடுத்தினால், சுமையாகக் கருதப்படும் மக்கள் தொகை, சொத்தாக மாறும்.
அந்தநாள் வரும் வரை, மக்கள் தொகை தினத்தைக் கடைபிடிப்போம். அதன் பிறகு
கொண்டாடுவோம்.
இ-மெயில்: regr@bu.ac.in
- பி.கே.மனோகரன் -
பதிவாளர், கோவை பாரதியார்
பல்கலைக்கழகம்