சென்னை:"அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவே, தற்போது, அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, "இலங்கையிலே, 13 து சட்டத் திருத்தம் நீர்த்துப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்' என, பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி, அதற்கு பிரதமரும் பதில் எழுதியிருக்கிறார்.சட்டசபையில், இலங்கை பிரச்னைக்காக, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தீர்மானம் கொண்டு வந்தபோது, தமிழ் ஈழமே கிடைத்து விட்டது என்பதைப் போல, மகிழ்ச்சி அடைந்து, வானத்திற்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்தனர்.இலங்கை தமிழர் பிரச்னைக்கு, 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், முழு அரசியல் தீர்வாக அமையாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும், இலங்கை தமிழர்களிடையே பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பது தான், "டெசோ' அமைப்பின் நிலைப்பாடு.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.