உரத்த சிந்தனை : காகிதமாகும் இந்திய பணம் : - வி.கோபாலன் - வங்கி அதிகாரி

Added : ஜூலை 27, 2013 | கருத்துகள் (5) | |
Advertisement
வரலாறு காணாத ரூபாயின் வீழ்ச்சி. ஒரு டாலருக்கு, 61 ரூபாய் என்ற விகிதத்தில், ரூபாய் மதிப்பு குறைந்தது. நம் இந்திய கரன்சி, ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக, 53 முதல் 54 ரூபாய் வரை என்ற அளவில் தான் இருந்தது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நிலை, கொஞ்சம் ஆட்டம் கண்டது. நான்கு நாட்கள் இடைவெளியில், 54 ரூபாய் என்ற அளவிலிருந்து, 60 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது. ரூபாயின் மதிப்பு மேலும்
Uratha sindanai,உரத்த சிந்தனை, காகிதமாகும், இந்திய, பணம்,- வி.கோபாலன் ,வங்கி ,அதிகாரி

வரலாறு காணாத ரூபாயின் வீழ்ச்சி. ஒரு டாலருக்கு, 61 ரூபாய் என்ற விகிதத்தில், ரூபாய் மதிப்பு குறைந்தது. நம் இந்திய கரன்சி, ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக, 53 முதல் 54 ரூபாய் வரை என்ற அளவில் தான் இருந்தது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நிலை, கொஞ்சம் ஆட்டம் கண்டது. நான்கு நாட்கள் இடைவெளியில், 54 ரூபாய் என்ற அளவிலிருந்து, 60 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது.

ரூபாயின் மதிப்பு மேலும் குறைவதை தடுத்து நிறுத்த, ரிசர்வ் வங்கி தலையிட்டு, தன் கைவசம் உள்ள அமெரிக்க டாலரிலிருந்து ஒரு பகுதியை வெளியே விட்டு, ரூபாயின் சரிவை கொஞ்சம் தடுத்து நிறுத்தியது. இருந்தாலும், அடுத்த சில நாட்களுக்குள், இந்திய ரூபாய் மீண்டும் சரியத் துவங்கியது. ஒரு கட்டத்தில், ஜூலை 8ம்தேதி, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூபாய், 61-21 என்ற கணக்கைத் தொட்டது.அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் ஏன், திடீரென்று வீழ்ச்சி அடைந்தது? இதனால், நம் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது?எந்த நாட்டிற்கும், அதன் தேவைகள் முழுவதும், உள் நாட்டிலேயே கிடைப்பதில்லை. அவசியமான பல பொருட்களை, வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை, நாம் இறக்குமதி செய்யும் பல பொருட்களில் முக்கியமானவை, கச்சா எண்ணெய்.மற்ற பொருட்களில் முக்கியமானவை தங்கம், தாவர எண்ணெய், உணவுப்பொருட்கள், நிலக்கரி, ராணுவ சாதனங்கள், பத்திரிகை காகிதம், கனரக இயந்திரங்கள் முதலியன. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு, செலுத்த வேண்டிய தொகையை, ஏற்றுமதி செய்யும் பொருள்களின் கட்டண மதிப்பிலிருந்து ஈடு செய்கிறோம்.

ஏற்றுமதி செய்யும் பொருள்களின் கட்டண மதிப்பும், இறக்குமதி செய்யும் பொருள்களின் கட்டண மதிப்பும், ஏறக்குறைய சமமாக இருந்து விட்டால் பிரச்னை இல்லை. நடைமுறையில் இது சாத்தியமில்லை. நம் ஏற்றுமதி - இறக்குமதி கணக்கில், பல ஆயிரம் கோடி டாலர், துண்டு விழுகிறது. இதைத்தான், நம் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை என்று சொல்கிறோம்.இந்தியர்கள் பலர், வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். அவர்கள் வருமானத்தில் பெரும் பகுதியை, இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். இந்த முறையில், நமக்கு அன்னிய செலாவணி கிடைக்கிறது. இதைத்தவிர, தகவல் தொழில் நுட்பத்துறையில், பல இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தக ஸ்தாபனங்களின் வேலைப் பொறுப்பின், ஒரு பகுதியை இந்தியாவில் செய்கின்றனர் . இந்த வகையிலும் நமக்கு, அன்னிய செலாவணி கிடைக்கிறது.இதைத்தவிர, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துறையில் முதலீடு செய்கின்றனர். அதற்கான, அன்னிய செலாவணியை அவர்கள் கொண்டு வருகின்றனர். அதே மாதிரி வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய, அன்னிய செலாவணி கொண்டு வருகின்றனர்.

இப்படி வரும், அன்னிய செலாவணியினால், நாம் நம் நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரி செய்கிறோம். வெளிநாட்டு தொழில் நிறுவனங்களே, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள். இவர்கள் கொண்டுவரும் அன்னிய செலாவணி நிரந்தரமானதல்ல. இந்த இரண்டு வகை நிறுவனங்களும், எந்த நாட்டில் தங்கள் முதலீட்டுக்கு, அதிக வருமானம் கிடைக்குமோ, அங்கே தாவி விடுகின்றனர். அந்த நேரத்தில், தாங்கள் கொண்டு வந்திருந்த அன்னிய செலாவணி அத்தனையும், திரும்ப எடுத்துச் சென்று விடுவர். அந்த மாதிரி காலகட்டத்தில், நம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாகும்.இந்த மாதிரி நிலைமைத்தான், ஜூன் முதல் வாரத்தில் ஏற்பட்டது. இதைத்தவிர, கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள், தாங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணை, கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலையில், அமெரிக்க டாலரை வாங்க முற்பட்டனர். இந்த மாதிரி டாலரின் தேவை அதிகமாகும் போது, இந்திய வர்த்தக வங்கிகளிடம், அந்த அளவு டாலர் கைவசம் இல்லாதிருந்தால், டாலருக்கு கிராக்கி ஏற்பட்டு, ஒரு டாலருக்கு அதிக இந்திய ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனால் தான், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. ரூபாயின் இந்த வீழ்ச்சியினால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்கிறது. பணவீக்கம் அதிகமாகிறது. இதைத்தவிர, நம் நாணயத்தின மதிப்பு குறையும் போது, நம் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் தயங்குவர்.

இதை மனதில் கொண்டுதான், மத்திய அரசு அவசர அவசரமாக, சில நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியிருக்கிறது. முக்கியமாக அன்னிய முதலீட்டாளர்களுக்கு, பல சலுகைகளை அறிவித்திருக்கிறது. இந்தச் சலுகைகளின் மூலம், இந்தியாவிற்கு அன்னிய செலவாணி வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், மத்திய அரசு செயல்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாடு ஒரு தற்காலிக நிவாரணம் தான்.நிலைமையை சமாளிக்க, அரசு அமெரிக்க டாலரில் கடன் பத்திரங்களை வெளியிடலாமா என்று, தீவிரமாக யோசித்து வருகிறது. இந்திய அரசு வெளியிடும் அமெரிக்க டாலர், கடன் பத்திரங்களுக்கு, வெளிநாட்டில் வழங்கும் வட்டி விகிதத்தை விட, அதிக வட்டி அளித்தால், இந்த டாலர் கடன் பத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கக்கூடும். இதுவும், ஒரு தற்காலிக நிவாரணம் தான். அன்னிய செலவாணி பற்றாக்குறை, நம்மை துரத்திக் கொண்டே இருக்கும். நம் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனா, ஒவ்வொரு ஆண்டும், கூடுதல் கையிருப்பு பெறுகிறது. இந்தக் கையிருப்பில் பெருமளவு, அமெரிக்க வங்கிகளிலும், அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களிலும், முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவை விட, சீனா பரப்பளவில் பெரிது. மக்கள்தொகையும் அதிகம். உள்நாட்டு உற்பத்தியின் அளவும் அதிகம். ஏற்றுமதி - இறக்குமதி அதிகம். அன்னிய செலாவணி கையிருப்பு அதிகம். சீன அரசின் நோக்கம், கூடிய சீக்கிரத்தில், உலக அளவில் அமெரிக்காவை விட, எல்லா அம்சங்களிலும் பெரியநாடு என்று, மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என்பதுதான். இந்த சூழ்நிலையில் நாம், நம் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை, மனதில் கொண்டு, சில அதிமுக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். சீனாவுடன் வர்த்தக ரீதியாக, ஒரு உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். முதல்கட்டமாக சீனாவிடமிருந்து, அமெரிக்க டாலரை கடனாக, 10 ஆண்டுகளுக்குப் பின் திருப்பிச் செலுத்துவதாக உறுதி செய்து, பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.இந்தக் கடன் தொகைக்கு, சீனாவுக்கு அதன் முதலீட்டில் அமெரிக்க வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட, கொஞ்சம் கூடுதல் வட்டி தர, இந்தியா சம்மதிக்க வேண்டும். சீனாவிடமிருந்து, இந்த மாதிரி கடன் பெறுவதில், எந்தத் தவறும் கிடையாது.

இந்தியா, இதற்கு முன் பல ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, உலக வங்கி, இவைகளிடமிருந்தெல்லாம் கடன் பெற்றிருக்கிறது. சீனாவும், தன் உயர்ந்த ஸ்தானத்தை இந்தியா ஏற்றிருக்கிறது என்ற மகிழ்ச்சியில், பல கோடி டாலர் கடனாகத் தர சம்மதிக்கலாம். 10 ஆண்டுகாலத்திற்கு, இந்தத் தொகை நமக்கு கடனாக கிடைத்தால், இது பெருமளவிற்கு நம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.இந்திய ரூபாயின் மதிப்பு இனி குறையாது. 10 ஆண்டுகளில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியினால், நம் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நேரத்தில், நிச்சயமாக சிரமப்படமாட்டோம். இந்திய அரசு சிந்திக்க வேண்டும்.

- வி.கோபாலன் - வங்கி அதிகாரி - பணி நிறைவு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (5)

தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
04-ஆக-201312:42:16 IST Report Abuse
தஞ்சை மன்னர் சீனாவில் இருந்து வரும் கடத்தல் பொருளுக்கும், வணிக ரீதியாக வரும் பொருள்களை சரியான ரீதியில் தடுத்தாலே பாதி டாலர் வெளியேறுவது தடுக்கப்படும், ஒரு கண்டைனர் பொருளுக்கு 5 கண்டைனர் அளவுக்கு டாலர் திருடும் கூட்டம் சீனக்காரன் அதற்க்கு ஒத்து போகும் நம்நாட்டு திருட்டு வியாபாரிகள், இவர்களை தடுத்தாலே போதும், எப்போது சீன பொருளுக்கு வாசல் திறக்கபட்டதோ அப்போதே கைவரிசை ஆரம்பிக்கப்பட்டு விட்டது .
Rate this:
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-201315:24:45 IST Report Abuse
K.Balasubramanian இரண்டாம் உலக போர் முடிந்த பின் பல நாடு கரன்சிகள் சாக்கு மூடைகளில் கொடுத்து தங்கம் நாணயம் வாங்க வேண்டியதாக கேள்வி பட்டேன் , அந்த நிலை வரு நாள் தூரத்தில் இல்லை .
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28-ஜூலை-201306:52:14 IST Report Abuse
ஆரூர் ரங் முழுக்க விவசாய நாடு ஆனால் உணவுப் பொருட்களையும் எண்ணையையும் இறக்குமதி செய்துகொள்கிறோம். ஏழை நாடு தங்கத்தில் முதலீடு செய்ய இறக்குமதி செய்கிறோம். ஆளுக்கு ஆள் சொந்த வண்டி ஆசை அதிக கச்சா எண்ணை இறக்குமதியில் தள்ளிவிடுகிறது குக திட்டத்தை நிறுத்திவிட்டு , பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு இறக்குமதியை அதிகரிக்கிறோம். நுகர்வோர் கலாசார ஆபத்து நன்கு தெரிந்தும் அடுத்த தலைமுறையை நுகர் போதைக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறோம் .கம்பும் கேழ்வரகையும் விட ஓட்ஸ் எந்த விதத்தில் உசத்தி எனத் தெரியவில்லை அதனை மாங்கு மாங்கென்று இறக்குமதி செய்து அமுதம்போல் சாப்பிடுகிறோம். .ஆகா மொத்தம் நம் ஊர் ஏழை விவசாயிகளின் பிழைப்பில் மண்போட்டு , அவனது நிலத்தை பிளாட் ட் போட்டு விற்று அழியவைக்கிறோம் பொருளாதார மேதைகள் பிரதமராகவும் நிதி மந்திரியாகவும் உள்ளனராம் மதசார்பற்றவர்கள் என்பதால் வேறுயாரும் வரக் கூடாதாம் தீதும் வாதும் பிறர் தர வாரா. இது நமக்கு நாமே வைத்துக்கொண்டிருக்கும் ஆப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X