பெரியகுளம்: பெரியகுளத்தில், மாணவன் படிக்காததை கண்டித்த ஆசிரியரை, பள்ளிக்குள் புகுந்து, மாணவனின் தந்தையும், அவரது நண்பர்களும் தாக்கினர்.
தேனி மாவட்டம்,பெரியகுளம் தென்கரையில், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரபாகரன்,15; இவரை, கணித ஆசிரியர் பாண்டியன்,31, கணிதம் சரியாக செய்யாததால், கண்டித்து, கம்பால் அடித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த, மாணவனின் தந்தை, மூர்த்தி,45, தன் நண்பர்கள், ஐந்து பேருடன், பள்ளிக்கு சென்று, பாண்டியன் மற்றும் ஆசிரியர்களை, ஒருமையில் பேசி, பாண்டியனை தாக்கினார். தென்கரை போலீசார், மூர்த்தி உட்பட, ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமையாசிரியை மார்க்ரெட் கூறுகையில்,""மாணவன் பிரபாகரன் நன்றாக படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆசிரியர் கண்டித்ததை, தவறாக புரிந்து கொண்ட மாணவனின் தந்தை மூர்த்தி உட்பட, ஆறு பேர், பள்ளி வளாகத்தில் புகுந்து, தரக்குறைவாக பேசி, ஆசிரியரை தாக்கினர்,'' என்றார். பெரியகுளம், மாவட்ட கல்விஅலுவலர் -பொறுப்பு மகேஸ்வரி கூறுகையில், ""புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து, பள்ளி நிர்வாகம், இதுவரை, தகவல் தெரிவிக்கவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE