இந்து அமைப்பு தலைவர்கள் மற்றும் பா.ஜ., பிரமுகர் கொலைகளில், பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, "பறவை' பாதுஷா, கிச்சான் புகாரி ஆகியோர், மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரிடமும் விசாரிக்க, பெங்களூருவில், தமிழக எஸ்.ஐ.டி., போலீசார் முகாமிட்டுள்ளனர்.
ஆடிட்டர் ரமேஷ் கொலை:
சேலம் பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவத்துக்கு பின், தமிழக உளவு அமைப்புக்கள் தீவிர விசாரணையில் இறங்கியதால், திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் சிலர், வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. அங்கு சோதனை நடத்திய போது, பெங்களூரு வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய, "பறவை' பாதுஷா மற்றும் கிச்சான் புகாரியின் கூட்டாளிகள், முகம்மது தாசிம், 33, கட்ட சாகுல், 38, நூரூல் ஹமீது, 22, அன்வர் பிஸ்மி, 20, சம்சுதீன், 20, ஆகியோர், கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களிடம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.டி., அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிச்சான் புகாரி, "பறவை' பாதுஷா ஆகியோரை, விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி இன்று, "பறவை' பாதுஷாவை, கஸ்டடியில் எடுக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக, அதிகாரிகள், பெங்களூருவில் முகாமிட்டு உள்ளனர்.
ரவுடிகளுடன் தொடர்பு:
இது குறித்து, எஸ்.ஐ.டி., போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெங்களூரு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள கிச்சான் புகாரி, 2012ல், சேலம் மத்திய சிறையில், ஆறு மாதம் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது, சேலம் உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பின், பெங்களூரு சிறைக்கு மாற்றப்பட்டான். சேலம் தொடர்பை, சாதகமாக பயன்படுத்திய கிச்சான் புகாரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, கூட்டாளி, "பறவை' பாதுஷாவுடன் சேர்ந்து, தமிழகத்தில், இந்து ஆதரவு அமைப்பு தலைவர்களை, கொல்ல திட்டத்தை வகுத்து, ஆதரவாளர்கள் மூலம், கொலை செய்து வந்துள்ளான். கொலை திட்டத்தை, அரங்கேற்றுவதில் கிச்சான் புகாரி, "பறவை' பாதுஷா ஆகியோர், மூளையாக செயல்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளோம். இதில், இன்று, "பறவை' பாதுஷாவையும், அதைத் தொடர்ந்து, கிச்சான் புகாரியையும் விசாரிக்க உள்ளோம். அதன் பின், மேலப்பாளையத்தில், வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, ஐந்து பேரை, தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணைக்கு பின்னரே, கொலையாளிகள் குறித்த முழு விவரங்களும் தெரிய வரும். இவர்களுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடம் விசாரணையும் முடிக்கப்பட்டு விட்டது. இதில் சிலரை, குற்றவாளிகளாக உறுதி செய்துள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். இவ்வாறு, அதிகாரி கூறினார்.
- நமது நிருபர் -