அடிக்கடி உயர்த்தப்படும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, லாரி வாடகையை உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறினர்.
கச்சா எண்ணெய் விலை:
பெட்ரோல், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ற வகையில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே, அவ்வப்போது விலையை உயர்த்தி வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், டீசல் விலை, வரிகளுடன் சேர்த்து, லிட்டருக்கு, 61 காசுகள் உயர்ந்தது. இதையடுத்து, ஒரு லிட்டர் டீசல் விலை, 54.76 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜனவரி, 17ம் தேதியிலிருந்து, ஏழு முறையும், கடந்த ஓராண்டில், 14 முறையும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வப்போது உயர்த்தப்படும் விலை ஏற்றத்தால், வாகனங்களில் வாடகை கட்டணமும் உயர்த்தப்படுகிறது. ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் கட்டணங்களை உயர்த்தி விடுகின்றனர். அதே வேளையில், சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில், அடிக்கடி வாடகையை உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது: கடந்த ஓராண்டில், 14 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டதன் மூலம், லிட்டருக்கு, 11.20 காசுகள் உயர்ந்துள்ளது. இதில், 8.60 காசுகள் விலை உயர்வும், 2.60 காசுகள் மாநில அரசின் வரியும் உட்படும்.
தினமும் பிரச்னை:
லிட்டருக்கு, 50 காசுகள் வீதம் அவ்வப்போது உயர்த்தப்படும் டீசல் விலைக்கு ஏற்ப, உடனடியாக லாரி வாடகையை உயர்த்த முடியவில்லை. குறிப்பாக, "50 காசு உயர்வுக்காக, வாடகையை உயர்த்தி வ‹லிக்கிறீர்களே?' என, வாடகை தருபவர்களிடம் இருந்து கேள்வி எழுகிறது. ஆகையால், ஆண்டுக்கு ஒரு முறை, டீசல் விலையை மொத்தமாக உயர்த்தும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும், விலை உயர்வுக்கு ஏற்ப, மாநில அரசு வரியை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். டீசல் விலை உயர்வை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, வரும், 12ம் தேதி, டில்லியில் சங்கத்தினர் கலந்து ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -