திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில மகளிர் ஆணைய தலைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளுவர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்கள் மீதான பாலியல் கொடுமை, வரதட்சனை கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்டவைகளுக்கு அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில மகளிர் ஆணைய தலைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் கலந்து கொண்டார். கூட்டத்தில் 17 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட நிலையில், ஆய்வு மேற் கொண்டு இருந்த விசாலாட்சி நெடுஞ்செழியன் திடீரென தனது இருக்கையில் இருந்து மயங்கி விழுந்தார். 10 நிமிடங்கள் வரை மயங்கிய நிலையில் இருந்த அவரை, கலெக்டர் வீரராகவ ராவ், சமூக நலத்துறை அலுவலர் ரூத்வெண்ணிலா ஆகியோர் டாக்டரை வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதிக ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்தார். அரை மணி நேர ஓய்வுக்கு பிறகு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவி மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.