புதுடில்லி: ""பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பிரதமர் பதவிக்கு தகுதியானவர். பிரபலமான ஒருவர் தான், பிரதமராக வரவேண்டும் எனில், நடிகர் அமிதாப் பச்சன் கூட, நாட்டின் ஜனாதிபதியாக முடியும்,'' என, பாலிவுட் நடிகரும், பா.ஜ., - எம்.பி.,யுமான, சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார்.
நிதிஷ் ஆதரவாளர்:
பீகார் மாநிலம், பாட்னா - சாகேப் தொகுதியிலிருந்து, பா.ஜ., சார்பில், லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர் சத்ருகன் சின்கா. பாலிவுட் நடிகரான இவர், சமீபத்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்ததோடு, அவரை பாராட்டியும் பேசினார். "பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நிதிஷ்' என்றும் கூறியிருந்தார். பீகாரில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் இடையே, பல ஆண்டுகளாக நீடித்த கூட்டணி, சமீபத்தில், உடைந்த நிலையில், முதல்வர் நிதிஷ்குமாரை, சத்ருகன் சின்கா பாராட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக, இவர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், டில்லியில், பேட்டி அளித்த, சத்ருகன் சின்கா கூறியதாவது: பா.ஜ.,வில், பிரதமர் பதவிக்கு தகுதியானவர், எல்.கே.அத்வானி. கட்சியின் மூத்த தலைவர் என்பது உட்பட, பிரதமர் பதவி வேட்பாளருக்கான, அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. பா.ஜ., கட்சியின் வளர்ச்சிக்கு, அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். இரண்டு, எம்.பி.,க்களுடன் இருந்த கட்சியை, 200 எம்.பி.,க்கள் கொண்ட கட்சியாக மாற்றியவர் அவரே. சிறப்பான செயல்பாடு கொண்டவர். அனைத்து வகையிலும் சிறந்தவர்; கட்சியில், அவரை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ஊழல் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வும், மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவராக நியமித்ததன் மூலம், மத்திய அரசின் ஊழல்கள் எல்லாம், திசை திருப்பப்பட்டுள்ளன.
திறமையானவர்:
"நாட்டில் மிகவும் பிரபலமான தலைவர் நரேந்திர மோடி. அதனால், அவரை பிரதமர் பதவி வேட்பாளராக்கலாம்' என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறி வருகிறார். பிரதமர் பதவிக்கு, பிரபலம் ஒன்று தான் ஒரு அளவுகோல் என்றால், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூட, நாட்டின் ஜனாதிபதியாக முடியும். முதல்வர் மோடி, நல்ல மற்றும் திறமையான நிர்வாகி. அம்மாநில அரசை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், அவரைப் போல திறமையான முதல்வரே. இவ்வாறு, சத்ருகன் சின்கா கூறினார்.