மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து, நேற்று மாலை, வினாடிக்கு, 1.33 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்ததால், மேட்டூர் அணை மூன்று நாளில் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 110 அடியாகவும், நீர் இருப்பு, 78 டி.எம்.சி,யாகவும் இருந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கனமழை நீடிப்பதால், நேற்று காலை, வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., அணை உபரி நீர்திறப்பு, நேற்று இரவு வினாடிக்கு, 88,500 கனஅடியாகவும், வினாடிக்கு, 26 ஆயிரம் கனஅடியாக இருந்த கபினி உபரி நீர்திறப்பு, நேற்று இரவு, வினாடிக்கு, 45 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு, 1 லட்சத்து, 33,500 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இது, நடப்பாண்டு காவிரியில் திறக்கப்பட்ட அதிகபட்ச உபரிநீராகும் என்பதால், ஒகேனக்கல் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். உபரிநீர், இன்று மாலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால், மேட்டூர் அணை நீர்இருப்பு நாள் ஒன்றுக்கு, 10 டி.எம்.சி., அதிகரிக்கும். அணை நிரம்ப, 15 டி.எம்.சி., நீர் தேவை. இதனால், அடுத்த மூன்று நாளில், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.