நாகரிகம் என்பதைத் துறந்த பிறகு தான், சிலர் அரசியல்வாதிகளாகின்றனரா அல்லது மக்கள் பிரதிநிதிகளான பிறகு, அவர்கள் நாகரிகத்தைத் துறக்கின்றனரா என்ற கேள்வியை, நவீன வேதாளம், நவீன விக்கிரமாதித்தனிடம் எப்போது கேட்கும் என்று தெரியவில்லை. ஆனாலும், மக்களைப் பொறுத்தவரை, இது தலை வெடிக்கும் கேள்வியே.
மக்கள் பிரதிநிதிகளின் கவுரவம், அகவுரவம் பற்றி நாம் கவலைப்படுவது போல், அவர்கள் கவலைப்படுவதில்லை என்பது, நம் ஜனநாயக அவலங்களில் ஒன்று. அவர்களுக்குக் காரியம் தான் முக்கியம்; வழிமுறைகள் அல்ல. எந்த வழியிலும் நினைத்ததை சாதிக்க வேண்டும். அதுவே அவர்களது குறி. இப்போது பல அரசியல்வாதிகளின் குறி, நரேந்திர மோடி. பா.ஜ.,வின் சிலர் உட்பட, பல அரசியல் தலைவர்கள் என்னென்னவெல்லாம் செய்தால், நரேந்திர மோடியை அரசியல் களத்தை விட்டுத் துரத்த முடியும் என்பதில், கவனமாக இருக்கின்றனர். அப்படி என்ன பாவம், பாதகம் செய்து விட்டார் மோடி? குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துகிறார்; அது தவறு தான். பிறரைப் போல் அவர், தன்னையல்லவா வளர்த்துக் கொள்ள வேண்டும்? அதனால், தன்னை வளர்த்துக் கொள்வதில் குறியாக இருக்கும் அரசியல்வாதிகள், இந்த எதிர்மறை உதாரண புருஷரை நினைத்து, ரொம்பவும் சங்கடப்படுகின்றனர். மோடி மீது ஊழல் குற்றச் சாட்டுகள் இல்லை. இதுவும் பா.ஜ.,வில் உள்ள சிலர் உட்பட, பலரை உறுத்துகிறது; இவரைப் போலவே நீங்களும் ஊழலற்றவர்களாக இருக்கக் கூடாதா என்று, மக்கள் கேட்டு விட்டால், தம் பாடு திண்டாட்டமாகி விடும் என்று நினைக்கின்றனர். அதனாலேயே மோடி இவர்களுக்குப் பகையாளியாகி விட்டார்.
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா மீது, ஊழல் குற்றச் சாட்டுகள் வந்த போது, மென்று விழுங்கி சமாளித்த, பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள், நரேந்திர மோடி, குஜராத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தரும் போது, தக்க புள்ளி விவரங்களுடன், அவரை பகிரங்கமாகப் பாராட்டியிருக்க வேண்டாமோ? ஆக, அந்தக் கட்சிக்கும், ஊழல் பெரிய பிரச்னை அல்ல, நேர்மை தான் பிரச்னையாக இருக்கும் போலிருக்கிறது. நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா, "விசா' வழங்கக் கூடாது என்பதற்காக, நடந்த கையெழுத்து இயக்கம் பற்றி, பா.ஜ.,வில் யாருக்குமே தெரியாமல் போயிருக்குமா? நிஜமாகவே தெரியவில்லை என்றால், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற, பிரக்ஞை இல்லாத பா.ஜ., பார்லிமென்ட் உறுப்பினர்களால், கட்சிக்கும், நாட்டுக்கும் என்ன பயன்? அப்படி அசடர்களாக, பா.ஜ., பார்லிமென்ட் உறுப்பினர்கள் இருந்திருப்பர் என்று சொல்ல முடியாது. நம்மால், மோடியை இரண்டு தட்டு தட்ட முடியவில்லை. மற்றவர்கள் தட்டி விட்டுப் போகட்டுமே என்ற நினைப்பு, அங்கேயும் இருந்திருக்கலாம். நிஜக் கையெழுத்தோ, பொய்க் கையெழுத்தோ... இப்படி ஒரு மனு தயாராகிறது என்பது தெரிய வந்த உடனேயே, அது அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன், பா.ஜ., தலைவர்கள், அமெரிக்கத் தூதரைச் சந்தித்து, இப்படி மனு வந்தால், அதைப் பொருட்படுத்தாதீர்கள் என்று சொல்லி இருக்கலாமே. மோடிக்கு, விசா தராமல் இருப்பது தவறு என்பதற்கான காரணங்களை அடுக்கி, இவர்கள் பதில் மனு தரலாமே.
காங்கிரஸ் அளவுக்கு, பா.ஜ.,வில் ஊழல் இல்லை என்றாலும், இந்திரா, தன்னைத் தவிர தேசியத் தலைவர்கள் யாரையும் வளரவிட்டதில்லை. மாநிலத் தலைவர்கள் யாரும் உயர்வதற்கு வழிவிட்டதில்லை. நரேந்திர மோடி விஷயத்தில், பா.ஜ.,தலைமையும் அப்படி நடந்து கொள்கிறதோ என்று, சந்தேகப் பட வேண்டியிருக்கிறது. இல்லையெனில், மோடியின் விசா விஷயமாக, பா.ஜ., தலைவர்கள் எப்போதோ, டில்லியிலும், வாஷிங்டனிலும் தங்கள் தரப்பை எடுத்துச் சொல்லியிருக்கலாமே. பிரதமர், இதை ஒரு தேசிய கவுரவ பங்கமாகக் கருதி, ராணுவப் புரட்சி செய்து, "பிரதமரான பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்புக்கு விசா கொடுத்த நீங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வருக்கு, விசாவை மறுப்பது நியாயமில்லை' என்று எடுத்துச் சொல்லியிருக்கலாம். பிரதமர் அப்படிச் செய்யவில்லை. பா.ஜ.,விடம் இல்லாத எதையும், காங்கிரஸ் பிரதமரிடம் எதிர்பார்க்க முடியுமோ? அமெரிக்க விசா வழங்குவது என்பது, மனுவைப் பரிசீலித்து நபரை நேர்காணல் செய்யும், "வைஸ் கான்சல்' என்ற இளநிலை அதிகாரியிடம் தான் இருக்கிறது. இவருக்கு மேல், கான்சல், கான்சல் ஜெனரல், அம்பாசிடர், வெளியுறவு அமைச்சர் எல்லாருக்கும் மேலே, ஜனாதிபதி என்று, உயர் அடுக்கு இருக்கிறது. ஆனால், விசா விஷயமாக ஒரு வைஸ் கான்சல் எந்த நிர்பந்தமும் இல்லாமல், ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியும். உடன் பணி செய்பவர்கள் அல்லது மேலதிகாரிகளின் சிபாரிசுகளை ஏற்கலாம்; நிராகரிக்கவும் செய்யலாம். ஒரு அதிகாரி நிராகரித்தால், விசாவை மறுத்தால், மறுபடியும் மனு செய்யும் போது, வேறு ஒரு அதிகாரி விசாரிப்பார். விசாவை வழங்குவதும், வழங்காததும் அந்த அதிகாரியின் முடிவைப் பொருத்தது. அவர் வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிலையில், நரேந்திர மோடியின் விசாவுக்கு வலுவான முட்டுக்கட்டை, மேல் மட்டத்திலிருந்து தான் போடப் பட்டிருக்க வேண்டும். சில பார்லிமென்ட் உறுப்பினர்களின் கையொப்பம் தாங்கிய மனு, இப்போது மீண்டும் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இது, ஏற்கனவே அனுப்பப்பட்ட மனுவின் நகல். மறுக்கப்பட்ட விசாவைப் பெறுவதற்காக, மறுபடியும் மனு செய்யலாம். உரிய, கூடுதல் ஆவணங்களைக் காட்டினால், விசா கிடைக்கும். ஆனால், ஒருவருக்கு விசா வழங்கப்பட, நியாயமான முகாந்திரங்கள் இருக்கும் போது, அந்த விசாவை வழங்காமல் இருக்க முடியாது. மருத்துவ அவசரம் என்றால், ஞாயிற்றுக் கிழமைகளில் கூட, விசா வழங்கப்பட்டிருக்கிறது. தகுதி இல்லாதவர் பெற முடியாது, தகுதியினர் பெறுவதைத் தடுக்க முடியாது. இதில், நரேந்திர மோடிக்கு என்ன தகுதியில்லாமல் போய் விட்டது? மும்பை அமெரிக்கத் தூதரக, வைஸ் கான்சல் கொடுத்திருக்க வேண்டிய, மோடியின் விசாவைத் தடுக்க, நம் மக்கள் பிரதிநிதிகள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம் வரை, காவடி தூக்க வேண்டிய அவசியமென்ன? மாநில முதல்வர்களுக்கு, "டிப்ளமேடிக்' பாஸ்போர்ட் உண்டு. அது, வெள்ளை நிறம். அதற்குத் தனி அந்தஸ்து, முன்னுரிமை உண்டு. தூதரகத்திற்கு முதல்வர் செல்ல வேண்டியதில்லை; கியூவில் நிற்க வேண்டியதில்லை. அவரது செயலர்களில் ஒருவர், பாஸ்போர்ட்டையும், மனுவையும் கொடுத்தால் போதும். உடனடியாக விசா வழங்கப்படும். டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டுக்கு எப்போதும் ராஜமரியாதை உண்டு. அந்த மரியாதையை மோடி பெறக் கூடாது என்று, சில மக்கள் பிரதிநிதிகள் ஏன் துடிக்கின்றனர் என்பது தெரியவில்லை. மோடியை ஏதோ பட்டாக் கத்தியை வீசி, கோத்ராவில் தலை தலையாக வெட்டிக் கொன்ற கொலைகாரர் போல் உருவகப்படுத்தும் எதிர்க்கட்சிகாரர்கள், உள்நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். ஆனால், சர்வதேச அரங்கில், இப்படி மானக் குறைவான காரியத்தைச் செய்ய வேண்டுமா?
தனி நபர் மீதுள்ள காழ்ப்புணர்வால், நாட்டின் கவுரவத்தைப் பாழ்படுத்திய தம் செயலுக்காக, இந்த மக்கள் பிரதிநிதிகள் வெட்கப்படவில்லை. வெட்கம், மானம் என்ற உணர்வுகள் இருந்தால், இப்படிச் செய்திருப்பரா? ஆனால், இவர்களை லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுத்த மக்களும், ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும், வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன், அமெரிக்க வெளியுறவுத் துறை, "மோடி மீண்டும் விசாவுக்காக மனு செய்தால், அது பரிசீலிக்கப்படும்' என்று சொல்லியிருந்தது. அண்மையில், அமெரிக்கா சென்ற, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், இதை கையில் எடுத்திருக்கிறார் என்பது தெரிய வந்ததுடன், மோடி எதிர்ப்பாளர்கள் மீண்டும் துடிக்கத் துவங்கி விட்டனர். இதை இப்போது சொல்வதற்கு பதிலாக, அமெரிக்கா அப்போதே மோடிக்கு விசா வழங்கியிருக்கலாம். இதனால், மோடிக்கு லாபமும் இல்லை, நஷ்டமுமில்லை. ஆனால், இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு வளைந்து கொடுத்து, அமெரிக்கா, நரேந்திர மோடிக்கு, இனியும் விசா கொடுக்காமல் இருந்தால், அது அந்த நாட்டு உயர் அதிகார மையம் சுதந்திரத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பும். நம்மவர்கள் காப்பாற்றாத தேசிய கவுரவத்தை, அமெரிக்காவாவது காப்பாற்றட்டுமே. email: hindunatarajan@hotmail.com
ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்