மரம் அல்ல காட்டையே வளர்த்த ஓரு மாமனிதர்...

Updated : ஆக 10, 2013 | Added : ஆக 10, 2013 | கருத்துகள் (40) | |
Advertisement
அது 2008-ம் வருடமாகும்.நகர்ப்புறத்திற்குள் நுழைந்துவிட்ட யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டி விடுவதற்காக அதனை துரத்திக் கொண்டே சென்ற வனத்துறையினருக்கு யானைகள் நுழைந்திட்ட ஒரு காட்டைப் பார்த்ததும் திகைத்துப் போய்விட்டனர்.மனித சஞ்சசாரமே படாமல் அடர்ந்து பசுமை பொங்க காணப்பட்ட அந்த காடு அரசு பதிவேட்டிலேயே இடம் பெறாத காடாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட்டனர்.எப்படி
மரம் அல்ல காட்டையே வளர்த்த ஓரு மாமனிதர்...

அது 2008-ம் வருடமாகும்.

நகர்ப்புறத்திற்குள் நுழைந்துவிட்ட யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டி விடுவதற்காக அதனை துரத்திக் கொண்டே சென்ற வனத்துறையினருக்கு யானைகள் நுழைந்திட்ட ஒரு காட்டைப் பார்த்ததும் திகைத்துப் போய்விட்டனர்.

மனித சஞ்சசாரமே படாமல் அடர்ந்து பசுமை பொங்க காணப்பட்ட அந்த காடு அரசு பதிவேட்டிலேயே இடம் பெறாத காடாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட்டனர்.



எப்படி உருவானது இந்தக்காடு, எத்தனை பேர் உருவாக்கினர் இந்த காட்டை என விசாரித்தபோது இன்னும் அதிசயித்து போனார்கள், காரணம் "முலாய் காடு' என்று அழைக்கப்பட்ட அந்த காட்டை, கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக உருவாக்கி இருக்கிறார் என்பதால்.

யார் அவர்,



அவர்தான் ஜாதவ் பயேங்

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி . அங்குள்ள மக்கள் இவரை "முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979ம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் போன்ற ஊர்வன அடித்து வர பட்டது. வெள்ளம் வடிந்த பின் அவை வெப்பம் தாங்காமல் மணல்பரப்பிலேயே இறந்து கிடந்தன். ஒரு மர நிழல் இருந்திருந்தால் கூட பல உயிர் பிழைத்திருக்கும் என வனத்துறையினர் சொன்னதை கேட்ட போது ஜாதவ்விற்கு வயது 16. அப்போது மரம் வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.



1980ம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் "சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, அந்த திட்டத்தில் தன்னை ஆர்வமுடன் இணைத்துக் கொண்டார். திட்டப்பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட, இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை.

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார் ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து "சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளரவில்லை. இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார் வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார் இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் இதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.



இப்படி 2008ம் வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008ம் ஆண்டு தற்செயலாக யானைகளை துரத்திவந்த வனத்துறையினர் இந்த காட்டைப்பார்த்த பிறகுதான் காடு பற்றியும், ஜாதவ் பற்றியும் வெளி உலகிற்கே தெரியவந்தது.



தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன, 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள்,விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த "முலாய் காடுகள்' .

யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம், இன்னும் சொல்லப் போனால் இவரைப்போன்றவர்களுக்குதான் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்க கவுரவிக்கவேண்டும்.



மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

16 வயதில் மரம் வளர்க்கத்துவங்கியவருக்கு இப்போது 50 வயதாகிறது. "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் '' என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!



இரு ஆண்டுகளுக்கு முன் மிக "பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். "ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள், ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை, இவரது புகைப்படத்தை கூட மிகுந்த தேடுதலுக்கு பின்தான் கூகுளில் பார்க்கவே முடிகிறது.



மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல ஜாதவ். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக்க முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம், சிறிது முயன்றுதான் பாருங்களேன்.



இயற்கையை நேசிப்போம், எங்கும் பசுமை செழிக்கட்டும்.
- எல்.முருகராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (40)

P VELUMANI - COIMBATORE,இந்தியா
25-செப்-201316:20:32 IST Report Abuse
P VELUMANI வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ப வேலுமணி, கோயம்புத்தூர், INDIA
Rate this:
Cancel
mani k - trichy,இந்தியா
22-செப்-201316:54:34 IST Report Abuse
mani k மரங்களையும் காடுகளும் அழித்து பணம் பண்ணும் இக்காலத்தில் இவர் போன்ற விந்தையான பாராட்டக்கூடிய பொது நலனுக்காக கடுமையாக உழைக்க கூடிய மனிதருள் மாணிக்கம் போன்றவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.கி.மணி.திருச்சி.
Rate this:
Cancel
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
22-செப்-201313:00:27 IST Report Abuse
திருமகள்கேள்வன் இது போன்ற சமூக பணிக்காக பத்ம விருதுகள் என்ன பாரத ரத்னாவே கொடுக்கலாம்... காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலத்தில் ஒரு தன்னலமற்ற, தன்னிகரில்லாத மாமனிதன்... அவதார புருஷன்... எல்லா வளங்களும் பெற்று இவர் நீடூடி பல காலங்கள் வாழவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X