புதுடில்லி:வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், அதன் விலையை கேட்டாலே, தற்போது கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை, கிடு.. கிடுவென, உயர்ந்து வருகிறது.
கடந்த மாத இறுதி வரை, தக்காளி விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தற்போது இறங்கியுள்ளது. இப்போது வெங்காயத்தின் முறை. ஆனால், தக்காளியை போல், இதன் விலை, குறைய வாய்ப்பில்லை, மேலும் உயர்ந்து கொண்டு தான் போகும்.
ஏற்றுமதி:
ஏனெனில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புதிய வெங்காயம் வரத்தாக வாய்ப்பில்லை என்று, தெரிகிறது. நாசிக்கின் லசல்கான் சந்தையில் வரத்தாகும்,வெங்காயத்தில் பெரும்பகுதி, ஏற்றுமதியாகி விடுகிறது. கையிருப்பில் உள்ள சரக்கையும், மொத்த வியாபாரிகள் கூட்டணி அமைத்து பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்த சந்தையில் இருந்து தான், நாட்டின் முக்கிய சந்தைகளுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது.வரும் நாட்களில், வெங்காய வினியோகம் குறைந்து, அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த இரு வாரங்களாகவே, நாட்டின் முக்கிய சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகமிருந்தும், அதன் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.உதாரணமாக, நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி, சென்னை, கோயம்பேடு சந்தைக்கு, 4,200 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அப்போது, மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 3,000 ரூபாயாக இருந்தது.
கடந்த 12ம் தேதி, கூடுதலாக, 600 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அதாவது, மொத்தம், 4,800 குவிண்டால் சந்தைக்கு வந்தது. ஆனால், மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 5,800க்கு விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயம் விலை, 35 ரூபாயில் இருந்து, 65 - 70 வரை, தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.பெங்களூரு: வெங்காயம் விலை, கடந்த ஆண்டு இதே நாட்களில் விற்கப்பட்டதை விட, ஐந்து மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னையில், ஒரு குவிண்டால் வெங்காயம், 1,100 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரு வார நிலவரப்படி, பெங்களூரு, லசல்கான், புனே, சென்னை, கோல்கட்டா, மும்பை சந்தைகளுக்கு வெங்காயம் அதிக அளவில் வரத்தாகியுள்ளது.
பெங்களூரு சந்தையில், கடந்த 1ம் தேதி, 10,253 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. இது, 12ம் தேதி, 44,720 குவிண்டாலாக அதிகரித்துள்ளது. அது போன்று, இதே காலத்தில், லசன்கான் சந்தையில், வெங்காயம் வரத்து, 4,580ல் இருந்து, 12 ஆயிரம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது.இது, புனே சந்தையில், 7,314ல் இருந்து, 11,543 குவிண்டால் ஆகவும், கோல்கட்டாவில், 1,280ல் இருந்து, 16,800 குவிண்டால் ஆகவும், மும்பையில், 5,300ல் இருந்து, 8,950 குவிண்டால் ஆகவும் உயர்ந்துள்ளது.நாட்டின் முக்கிய சந்தைகளில், கடந்த இரு வாரங்களில், வெங்காயம் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவதன் பின்னணி குறித்து, மத்திய அரசு ஆராய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொதுவாக, சந்தைக்கு வரும் சரக்கு குறைந்தால், அதன் விலை உயர்வது வழக்கம்.
தற்போது பண்டிகை, திருமண காலம் எதுவும் இல்லாத நிலையில், வெங்காயத்திற்கான தேவையும் மிதமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதன் விலை மட்டும் உயர்ந்து வருவது, நுகர்வோரை பெரிதும் பாதித்து உள்ளது.தடை: இதே நிலை நீடித்தால், அடுத்த இரண்டு மாதங்களில் புதிய வெங்காயம் வரத்தாவதற்கு முன்பாக, அதன் விலை, கிலோ, 100 ரூபாயை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சிறு வியாபாரிகள். வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்தால், அதன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என, அண்மையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE