நிலத்தடி நீர்மட்டம் குறைவு: காற்றிலிருந்து நீர் உற்பத்தி : முதன் முறையாக மதுரையில் அறிமுகம்| water from Air | Dinamalar

நிலத்தடி நீர்மட்டம் குறைவு: காற்றிலிருந்து நீர் உற்பத்தி : முதன் முறையாக மதுரையில் அறிமுகம்

Updated : ஆக 14, 2013 | Added : ஆக 14, 2013 | கருத்துகள் (40)
மதுரை:மதுரையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்து, குடிநீர் வழங்கும் திட்டத்தை, முதன் முறையாக மாநகராட்சி அறிமுகம் செய்ய உள்ளது.மழை குறைவு, மரங்கள் அழிப்பு போன்றவற்றால், மதுரையின் நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வைகை அணையிலிருந்து கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே, மாநகராட்சி நம்பியுள்ளது.
water, Air, நிலத்தடி, நீர்மட்டம், நீர் உற்பத்தி,மதுரை

மதுரை:மதுரையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்து, குடிநீர் வழங்கும் திட்டத்தை, முதன் முறையாக மாநகராட்சி அறிமுகம் செய்ய உள்ளது.

மழை குறைவு, மரங்கள் அழிப்பு போன்றவற்றால், மதுரையின் நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வைகை அணையிலிருந்து கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே, மாநகராட்சி நம்பியுள்ளது. போர்வெல்களில் தண்ணீர் இல்லாததால், வார்டுகளில், பொது குடிநீர் தொட்டிகள் நிறுவ முடியவில்லை. இதனால், மதுரை நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் முறையை, நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் வறண்ட எல்லை பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை, தமிழகத்தில் முதன் முறையாக, மதுரையில் நடைமுறைப்படுத்த உள்ளனர். காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட "வாட்டர் மேக்கர்' இயந்திரம் மூலம், அதற்கான பரிசீலனை நடக்க உள்ளது. குழாய் இணைப்பு, நீர் ஆதாரங்கள் எதுவும் இன்றி, "திரவமாக்குதல், சேகரித்தல், வடிகட்டுதல் மற்றும் வழங்குதல்,' பணிகளை, அந்த இயந்திரம் செய்து முடிக்கும். அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமான பகுதிகளில், "வாட்டர் மேக்கர்' இயந்திரத்தின் செயல்பாடு, அபரிதமாக இருக்கும். சராசரி வெப்பநிலை, 25 டிகிரி செல்ஷியல் முதல், 32 டிகிரி செல்ஷியசிலும், ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும் நிலையில், திறனுக்கேற்ற நீரை உற்பத்தி செய்யும்.

வெப்பநிலையை, 8 முதல், 13 டிகிரி செல்ஷியஸ் வரை பராமரிக்கும். 120ல் துவங்கி, 5,000 லிட்டர் வரை, நாள் ஒன்றுக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் அளவிற்கு இயந்திரங்கள் உள்ளன. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸி., அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகளில் மட்டுமே, "வாட்டர் மேக்கர்' இயந்திரம் மூலம், குடிநீர் உற்பத்தி நடக்கிறது. இந்தியாவில், மணிப்பூர் மற்றும் அருணாச்சலில் உள்ள நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன், குஜராத், கோல்கட்டா, திரிபுரா எல்லை பாதுகாப்பு படை, மணிப்பூர் துணை கமிஷனர் அலுவலகம், நாகலாந்து மருத்துவமனை கழகம் போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள "வாட்டர் மேக்கர்' முறை, மதுரை மாநகராட்சியில் நடைமுறைக்கு வருகிறது.

மேயர் ராஜன் செல்லப்பா கூறியதாவது: மதுரையில், குடிநீர் பற்றாக்குறையான பகுதிகளில், காற்றின் ஈரப்பதத்திலிருந்து, குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதலில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நிறுவப்படும். அதன் பலனைப் பொறுத்து, அனைத்து பகுதிகளிலும் "வாட்டர் மேக்கர்' முறையில், குடிநீர் வினியோகம் செய்யப்படும், என்றார்.

கிரஸ்ட் ஆக்வா டெக் உரிமையாளர் கிரி பிரசாத் கூறுகையில், ""காற்றிலிருந்து நீர் உற்பத்தி குறித்து மேயர், கமிஷனர் விளக்கங்களை கேட்டுள்ளனர். மதுரைக்கு பின், நெல்லை உள்ளிட்ட, நிலத்தடி நீர்மட்டம் குறைவான பகுதிகள் "வாட்டர் மேக்கர்' இயந்திரத்தை பொருத்த, விருப்பம் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X