அவிநாசி:""மன
ஒருமைப்பாட்டுடன் இறைவனிடம் பக்தி செலுத்தினால், மன நிம்மதி கிடைக்கும்,''
என நிருபாமிர்த சைதன்யா பேசினார்.கோவை மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி
சார்பில்,
ஸ்ரீசர்வ ஐஸ்வர்ய தீப விளக்கு வழிபாடு, அவிநாசியில் நடந்தது. சேவா சமிதி
நிர்வாகி நிருபாமிர்த சைதன்யா பேசியதாவது:கோவிலுக்குச் சென்றோம்; சுவாமி
கும்பிட்டோம் என இருக்கக் கூடாது. மன ஒருமைப்பாட்டுடன், இறைவனிடம் பக்தி
செலுத்த வேண்டும். அப்போது மட்டுமே, நமது பிரார்த்தனை நிறைவேறும். அதற்காக,
அவரிடம், "அதை செய்கிறேன், இதை செய்கிறேன்,' என்று பேரம் பேசக்கூடாது.
நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத்
தெரியும்.இறைவனுக்கு செய்யும் நைவேத்யங்கள், பூஜை, புனஸ்காரங்கள்
ஆகியவையால் மட்டுமே பலன் கிடைத்து விடாது. நமக்கான வினைகளையும்,
கஷ்டங்களையும் குறைத்துக் கொள்ளவே, இதுபோன்ற நற்காரியங்களில் ஈடுபடுகிறோம்.
அடுத்தவர் மனது புண்படும்படியாக பேசக்கூடாது. தொடர்ந்து,
பேசிக்கொண்டிருந்தால், வெறுப்பு அலைகள் நம் மீது படர்ந்து விடும். பின்,
எந்த காரியமும் நன்றாக நடக்காது. நல்ல எண்ணங்களோடு வாழ்ந்தால், எல்லாம்
நல்லதே கிடைக்கும், என்றார்.