சிதம்பரம் : சிதம்பரத்தில் தெரு நாய்கள் மற்றும் குரங்குகளுக்கு கடந்த 15 ஆண்டுகளாக சமூக ஆர்வலர் ஒருவர் நாள் தோறும் உணவு வழங்கி வருகிறார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மந்தக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (65). சமூக ஆர்வலரான இவர் கடந்த 15 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு தினமும் காலை வேளையில் பால், பிஸ்கெட், இரவில் தயிரில் பால் கலந்த சாதம் அளித்து வருகிறார்.மாலை 6:00 மணிக்கு பெரிய அண்டாவில் சாதத்துடன் தனது ஸ்கூட்டரில் புறப்படும் பாலசுந்தரம் சிதம்பரம் மின் நகர், மந்தக்கரை, இளமையாக்கினார் கோவில் தெரு, நெல்லுக்கரை தெரு, ஆர்.டி.ஓ., அலுவலக வாயில், நகராட்சி, நீதிமன்றம், பெருமாள் தெரு, மேட்டுத் தெரு, தெற்கு சன்னதி, தெற்கு வீதி ஆகிய இடங்களில் தெரு நாய்களுக்கு உணவு கொடுக்கிறார். இவர் வரும் நேரத்திற்கு முன்பாகவே நாய்கள் அந்தந்த இடத்தில் ஆஜராகி காத்திருப்பதுதான் ஆச்சரியம்.உடல் நிலை சரியில்லாத நாய்களுக்கு மருந்து போடுகிறார். இதே போல், சிதம்பரம் நகரில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கும், அவரது வீட்டுத் தோட்டத்தில் பழங்களை உணவாக வைக்கின்றார். இதற்காகவே தினமும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் ஆஜராகி விடும்.
பாலசுந்தரம் கூறுகையில், "கடந்த 1998ம் ஆண்டு என் மனைவிக்கு அடிக்கடி நெஞ்சு வலி வரும். டாக்டரிடம் பரிசோதனை செய்ததில், எந்த பிரச்னையும் இல்லை என்றார். வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்த்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என அறிவுறுத்தினார்.அதன் பின்பு வீட்டில் நாய், பூனை வளர்த்தேன். நாளடையில் தெருவில் பட்டினியாக சுற்றித் திரியும் நாய்களுக்கும் உணவு அளிக்கும் பணியை துவங்கி 15 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. சில நாட்களில் கையில் பணம் இல்லாமலோ, வேறு சூழ்நிலையிலோ உணவு கொடுக்க முடியாத வேளையிலும் அந்தந்த இடத்தில் உள்ள நாய்களை சந்தித்துதான் செல்வேன். கையில் உள்ளதைப் பிரித்து அனைத்து நாய்களுக்கு கொடுப்பேன். கையில் உணவு இல்லை என்று சொன்னாலே போதும், நாய்கள் புரிந்து கொண்டு சென்று விடும்' என்றார்.இவரது சேவை மேலும் விரிவடைந்து வேப்பூர் ரோட்டில் சாலையில் திரியும் குரங்குகளுக்கு தனது மனைவியோடு சென்று மாதம் இரு முறை உணவளித்து வருகிறார். இவரது மகன் பல் மருத்துவர் கணேஷ், தந்தையைப் போலவே சாலையில் சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கும் சேவையை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பாலசுந்தரம், நாய்களுக்காக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் "அவதார்' என்ற டிரஸ்ட் துவக்கியுள்ளார். இவரது சேவைக்கு உதவ நினைப்பவர்கள் 94432 91169 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.