சென்னை:"தமிழகத்தில், பாலியல் குற்றங்கள், பரவலாக நடைபெறுகின்றன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாற்றுமுறை குறை தீர்வு மையக் கட்டடம் ஒன்று, 3.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா அதில் கலந்து கொண்டு, மகளிருக்காக, அ.தி.மு.க., ஆட்சியில், நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையெல்லாம் தொகுத்து சொல்லியிருக்கிறார்.பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இடர்பாட்டிற்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படையில் தான், இந்தத் திட்டங்களையெல்லாம், அ.தி.மு.க., அரசு அமலாக்கி வருகிறது என, கூறினார்.
மற்ற மாநிலங்களுக்கெல்லாம், வழிகாட்டியாக செயல்படுவதாகவும் பேசியிருப்பதை படித்த போது, என் கண் எதிரே, தர்மபுரி நகரில், அ.தி.மு.க.,வினர் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பஸ் ஒன்றை வழிமறித்து தீயிட்ட போது, உடல் கருகி, அலறிக் கொண்டே இறந்த மாணவியர் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் தான் தெரிந்தனர்.
கடந்த ஏப்ரல் 12ம் தேதி, திருப்பூரில் ஒரு கொடுமை. எட்டு வயதான ஒரு மலையாளச் சிறுமி, பள்ளியிலிருந்து திரும்பிய பின், வீட்டிலே தனியாக இருந்தபோது, ஒரு கும்பலால் அலற, அலறக் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். திருப்பூரிலே மாத்திரமல்ல, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்மை கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., மாணவி நதியா என்பவர் கற்பழிக்கப்பட்டு, கொலையே செய்யப்பட்டாள்.
பாலியல் குற்றம் என்றால், டில்லி மாநகரமே அல்லோலகல்லோலப்படுகிறது. கேரளச் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான செய்தி கேள்விப்பட்டதுமே, கேரள முதல்வருக்கும், மலையாளிகள் சங்கத்தினரும் கவலை கொண்டு ஆறுதல் கரம் நீட்டுகின்றனர்.ஆனால், ஒரு பெண்மணி ஆளும் தமிழகத்தில், தட்டிக் கேட்க ஆளில்லாமல், பாலியல் குற்றங்கள் பரவலாக நடைபெறுகின்றன. ஆனால், பாலியல் வன்முறை சார்ந்த குற்றங்களை கடும் குற்றங்களாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவல் துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது, என, முதல்வர் கூறியிருக்கிறார். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.