தமிழகத்தில், வறட்சி குறித்து ஆய்வு செய்து சென்ற மத்தியக் குழு, அறிக்கை சமர்ப்பித்து மூன்று மாதமாகி விட்டது. ஆனால், மாநில அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை தராமல், மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.
பருவமழை ஏமாற்றியதால், தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறுவை, சம்பா சாகுபடி இல்லாததால், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள் உற்பத்தியும் குறைந்துள்ளது.
மூன்று நாள் ஆய்வு:
இதனால், சென்னையை தவிர்த்து பிற, 31 மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்டவை என, தமிழக அரசு அறிவித்தது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும் அறிவிக்கப் பட்டது. "வறட்சி பாதிப்பை சமாளிக்க, மத்திய அரசு, 19,665.13 கோடி ரூபாய் நிவாரணம் தர வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து, மத்திய வேளாண்மை வணிக விற்பனை மைய நிர்வாக இயக்குனர் பிரவேஷ் சர்மா தலைமையிலான மத்திய குழு, மே, 6ம் தேதி, சென்னை வந்தது. இரண்டு பிரிவாக பிரிந்து, வறட்சி பாதித்த மாவட்டங்களில், மூன்று நாட்கள் முகாமிட்டு ஆய்வு நடத்தியது.பின், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, இந்த குழு ஆலோசித்தது. அப்போது, "வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், மக்கள் இடம் பெயராமல் இருக்க, அரசு மேற்கொண்ட முயற்சிகள் சிறப்பானவை' என, குழுவினர் தெரிவித்தனர்.இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர், "வறட்சியை சமாளிக்க, மாநில அரசு கோரியபடி, 19,665 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.
ஒன்றுமே கிடைக்கவில்லை
:"ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய குழு உறுதியளித்துச் சென்றது. இதன்படி, ஒரு வாரத்தில், வறட்சி நிவாரணம் குறித்த ஆய்வு அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது பரிசீலிக்கப்பட்டு, முழுமையாக நிதி வழங்காவிட்டாலும், முதற்கட்டமாக ஒரு தொகை, நிவாரண நிதியாக வழங்கப்படும் என, தமிழக அரசு எதிர்பார்த்தது.ஆனால், மூன்று மாதமாகியும், இதுவரை வறட்சி நிவாரண நிதி தராமல், மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால், மத்திய குழு ஆய்வு என்பது, வெறும் கண்துடைப்பு வேலை தானோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய குழு ஆய்வு முடிந்து, மூன்று மாதமாகியும், வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு இன்னும் தரவில்லை. இதுகுறித்து, மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, 524.25 கோடி ரூபாயும், டெல்டா அல்லாத பகுதிகளுக்கு, 835.21 கோடி ரூபாயும், வறட்சி நிவாரணமாக அறிவிக்கப்பட்டு, 96 சதவீத நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -