சென்னை : சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தணிக்கை துறை அறிக்கையில் அம்பலம் ஆகியுள்ளது. அதையடுத்து, தணிக்கை அறிக்கை பெற்ற பிறகே அதிகாரிகளுக்கு பணி ஓய்வு அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பணி ஓய்வு பெறும் போது, தாங்கள் மேற்கொண்ட பணிகள், அதற்கான செலவு விவரம், பணியில் இருக்கும் போது நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனரா என்பன போன்ற பல விஷயங்கள் ஆராயப்பட்டு, விரிவான தணிக்கை அறிக்கை வழங்கப்பட வேண்டும்.
பின்பற்றப்படவில்லை:
தணிக்கை துறை அறிக்கை வழங்கிய பிறகு தான், அதிகாரிகளுக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டு, அவர்களுக்கான பண பலன்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.ஆனால், சென்னை மாநகராட்சியில் தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மாறாக அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, தங்கள் மீதான தணிக்கையில் தவறு இருந்தால், அதற்கு பொறுப்பேற்பதாக, எப்போது வேண்டுமானாலும் உரிய விளக்கம் அளிப்பதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்துவிட்டு, பணி ஓய்வையும், பண பலன்களையும் பெற்று கொள்கின்றனர். அதுபோன்று பணி ஓய்வு பெற்ற பல அதிகாரிகள் மீது, தணிக்கைஅறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்புஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.மண்டல வாரியாக ஓய்வு பெற்ற அனைத்து துறை அதிகாரிகள் மீது தணிக்கை செய்யப்பட்டதில், முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதது, வருவாய் இழப்பை ஏற்படுத்தியது என, பல்வேறு குற்றச்சாட்டுகளில்அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.
என்ன குற்றச்சாட்டு?
இதில், வருவாய் துறை அதிகாரிகள் தான் அதிகமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2008-09ம்ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையில் வெளியான சில தகவல்கள்:
*பழைய மண்டலம் 9ல் உதவி வருவாய் அதிகாரிக்கு வாடகை வாகனத்திற்கு செலவிடப்பட்ட தொகை 3.15 லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லை. *அதே மண்டலத்தில் சமுதாயக்கூடத்திற்கு வாடகை வசூலித்தது சம்பந்தமாக தணிக்கையில் எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை. *பழைய மண்டலத்தின்படி வார்டு 132ல் தென்மேற்கு பகுதி கெங்கையம்மன் கோவில் தெருவில், செய்யாத பணியை செய்ததாக செலவு கணக்கு காட்டி 3.85 லட்சம் ரூபாய்க்கு கையாடல் செய்துள்ளனர். இதற்கு மண்டல அதிகாரி, கணக்கு அதிகாரி உட்பட பொறுப்பானோர் மீது தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
*தொழில் உரிமம் வழங்காதது, விடுதி கட்டணம், தொழில் வரி, வாகன நிறுத்துமிடங்களுக்கு கட்டணம், துப்புரவு கட்டணம் வசூலிக்காதது என, பல வழிகளில் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
*பழைய மண்டலம் 10ல் (புதிய மண்டலம் 13) கேபிள் டிவி தட வாடகை வசூலிக்காத வகையில் 39 லட்சம் ரூபாய் இழப்பு.
*திருமண மண்டபங்களுக்கு துப்புரவு கட்டணம் வசூலிக்காத வகையில் 2.75 லட்சம் ரூபாய் இழப்பு.
*திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைத்த பிறகும், அந்த மண்டலத்தில் 2.59 கோடி ரூபாய் துப்புரவு பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
*தனியார் நிறுவனம் குப்பை அகற்றும் பணியை செய்தபோது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், மாநகராட்சிக்கு 11 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் ஒரே ஆண்டில் 50க்கும் மேற்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பது தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு முந்தைய ஆட்சியில் அதிகாரிகள் செய்த குளறுபடிகள் தற்போது பட்டியலாக தயாராகி வருகின்றன.இந்த குளறுபடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆயத்தமாகி வருகிறது. அனைத்து மண்டலங்களிலும் இந்த குளறுபடிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சையில் சிக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும். தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் நின்று நிவர்த்தி செய்ய வேண்டும். அதுவரை அந்த அதிகாரிகளுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் என்றார்.
இனி புதிய நடைமுறை:
மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பணி ஓய்வு பெற்ற பிறகு தணிக்கை செய்து, அதிகாரிகள் செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இழப்பீடு வசூல் செய்வது, மேல் நடவடிக்கை எடுப்பது என்பது இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.ஆனால், இனி எந்த ஒரு அதிகாரியும் பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அந்த அதிகாரி மீதான தணிக்கை அறிக்கை பெற வேண்டும் என, மேயர் உத்தரவிட்டுள்ளார். தணிக்கையில் தவறு நடந்திருப்பதாக தெரிந்தால், அதற்குரிய நடவடிக்கைக்கு பிறகு தான், பணி ஓய்வுபெறும் அதிகாரிக்கு பணி ஓய்வும், பண பலன்களும் கிடைக்கும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.