"மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்ற பாடல் வரிக்கேற்ப, மனிதரை மயங்க வைக்கும் சிறப்பு, மல்லிகைப் பூவுக்கு உள்ளது. அதிலும், மதுரை மல்லிக்கு இத்தகுதி அதிகம். புராண காலத்திலேயே, "பெண்களின்கூந்தலுக்கு மணம் வந்தது பூக்களால்தான்' என, சிவபெருமானும், பாண்டிய மன்னனும் கூந்தல் மணத்திற்காக கோபம் கொண்டதும் இதே மதுரையில்தான்.
மதுரை மல்லி, குண்டு, குண்டாய், கொள்ளை வெள்ளையாய், இதழ் தடிமனாய், எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல், மருத்துவ குணம் கொண்டது.
இந்த மல்லிகைப் பூக்கள், மதுரையில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. மல்லிகையின், தாய்ச்செடி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து பதியன்களாக பல்வேறு இடங்களுக்கும் செல்கிறது. திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மதுரை பகுதியில் விளையும் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், இதற்கு மதுரையில்தான் மார்க்கெட் இருந்தது. பின் திண்டுக்கல், நிலக்கோட்டை, கொடைரோடு, உசிலம்பட்டி, அருப்புக்கோட்டை என்றாகிவிட்டது. மதுரை மார்க்கெட்டுக்கு, தினமும் 10 டன் உட்பட, 6 மார்க்கெட்டுகளிலும் 50 டன்னுக்கும் மேலாக மல்லிகைப்பூ விற்பனைக்கு வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் பேராவது இத்தொழிலில் இருப்பர்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை மல்லிகைப்பூ உற்பத்தி அதிகமாக இருக்கும். மே முதல் ஜூலை வரை 50 சதவீதமாகவும், ஆகஸ்ட், செப்டம்பரில் 30 சதவீதமாகவும், அக்டோபர், நவம்பரில் 20 சதவீதமாகவும், டிசம்பரில் 10 சதவீதம் என்ற அளவிலும் இதன் உற்பத்தி இருக்கும். ஒரு கிலோ மல்லிகைப்பூ கிராக்கியான காலங்களில் ரூ. 2000க்கும், மலிவான காலங்களில் ரூ. 20க்கும்கூட விற்பனையாகி உள்ளது.
இதனால் நிலையான வருவாய் இல்லாமல் மல்லிகைப்பூ விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மல்லிகைப்பூவை கொண்டு மணமுள்ள "சென்ட்' தயாரிக்கலாம். மற்ற மல்லியைவிட, மதுரை மல்லியில் அதிகளவு சென்ட் தயாரிக்க உதவும் மெழுகு கிடைக்கிறது. சென்ட் தயாரிக்க, மதுரையில் 2, நிலக்கோட்டையில் 2, திண்டுக்கல், சேத்தூரில் தலா ஒன்று என, தொழிற்சாலைகள் உள்ளன. பூ உற்பத்தி அதிகமுள்ள காலங்களில் இந்நிறுவனங்கள் அதிகளவு கொள்முதல் செய்து, சென்ட் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. கிராக்கியான காலங்களில் மல்லிகைப்பூ பக்கத்து மாவட்டங்கள், கேரளம், வெளிநாடு என அனுப்பப்படுகிறது.
மல்லிகை உற்பத்தி அதிகரிக்க என்ன வழி?:
மதுரை பூவியாபாரிகள் சங்க தலைவர் சோ.ராமச்சந்திரன்: விலைமலிவான காலங்களில், சென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் கட்டுப்படியான விலைக்கு கொள்முதல் செய்தால், மல்லிகை விவசாயிகள் நஷ்டப்பட மாட்டார்கள். மதுரை விமான நிலையம், சர்வதேச நிலையமாகி, பொருட்களை எளிதில் கொண்டு செல்ல அனுமதிக்கும்போது, மல்லிகையை அதிகளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
மதுரை மல்லி புவிசார் குறியீடு பெற்றிருந்தாலும் இதுபோன்ற மேம்பாடும் பெற வேண்டும். இதற்கென ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இதுவரை ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டால் மல்லிகை இன்னும் மணம் பெறும் என்பது உண்மை.
செடி ஒன்று; பலன் 15 ஆண்டு:
மதுரையில் வலையபட்டி, ஆலங்குளம், கொம்பாடி, வெடத்தகுளம், சின்ன உலகானி, பெரிய உலகானி, தொட்டியபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப்பூ சாகுபடி நடக்கிறது.
வலையபட்டி மல்லிகை பூ விவசாயி சிங்கராஜ்: நூறு நாள் வேலை திட்டத்துக்கு பலர் சென்று விடுகின்றனர். இதனால், பூ விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பது கடினம். மல்லிகை செடியை ஒரு முறை நடவு செய்த பின், ஆறாவது மாதத்தில் இருந்து பலன் கொடுக்கும். 15 ஆண்டுகள் வரை பூ கிடைக்கும். கிணற்று பாசன வசதி இல்லாத பூ விவசாயிகள், வாடகை தண்ணீர் லாரிகளை வரவழைத்து செடிகளை காப்பாற்றி வருகின்றனர். ஒரு லாரி தண்ணீர் ரூ.1500. செடிகளை காப்பாற்றுவதற்காக, விவசாயிகள் தண்ணீருக்கு அதிக பணம் செலவு செய்கின்றனர்.
மண்ணின் மலர்:
சுகந்தி, குடும்ப தலைவி: நான் தினமும், மல்லிகை பூவை தலையில் வைக்காமல் வெளியே செல்வதேயில்லை. சிலர் தலைக்கு பூ வைப்பதையே தவிர்த்து விடுகின்றனர். பெண்களுக்கு தலை நிறைய பூ வைப்பது, அழகாக இருப்பதோடு மங்கலகரமாக தெய்வீக உணர்வை தரும். அதுவும் மதுரை பெண்கள் மல்லிகை வைப்பது மலரின் மணத்தை மட்டுமல்ல, நம் மண்ணின் மணத்தையும் மற்ற ஊர்க்காரர்களுக்கு தெரியப்படுத்தும். தினமும் 30 ரூபாய்க்கு வாங்குவேன்.
பொத்தி வச்ச மொட்டு:
சுப்புலட்சுமி, மல்லிகைப்பூ வியாபாரி, அம்மன் சன்னதி: அம்மன் சன்னதியில், 45 ஆண்டுகளாக மல்லிகை பூ வியாபாரம் செய்து வருகிறேன். நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை வாங்குகிறேன். காலை 5 மணி முதல், மதியம் 12 மணிவரையும், பின் 4 மணியிலிருந்து இரவு 9 மணிவரையிலும் வியாபாரம் நடக்கும். நான் கொண்டு வருவது அனைத்தும் ஒரே நாளில் விற்று தீர்ந்து விடும். கிலோ 250க்கு வாங்கி, முழம் ஒன்றுக்கு ரூ.10 என விற்கிறோம். மலர்ந்த மல்லிகையை விட, மொட்டுகளாக மலராத மலர்களையே அதிகம் கேட்டு வாங்குகின்றனர்.
மதுரையின் சொத்து மல்லி: உமா கண்ணன், செயலாளர், தியாகராஜர் கல்லூரி ("மதுரை மல்லிகை' என்ற புத்தகம் எழுதியவர்): "இன்டாக்' அமைப்பின் சார்பில், கிராமப்புற பெண்களுக்காக மல்லிகை குறித்த பல்வேறு பயிற்சி பட்டறைகள் நடத்தியுள்ளேன். ஆண்கள் பூமாலை கட்டுவதையும், பெண்கள் பூச்சரம் தொடுப்பதையும் தொழிலாக கொண்டுள்ளனர். ஆண்களைப் போல, பெண்களும் மாலை கட்ட ஆரம்பித்தால், கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இந்த பயிற்சி பட்டறை அதை சாத்தியமாக்கியது. மாலைகள் வடிவமைக்கும் போது, அவர்களின் கற்பனைத் திறனும் அதிகமாகிறது. நான் எழுதிய "மதுரை மல்லிகை' நூல், மல்லிகைக்கு மட்டுமின்றி மல்லிகை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் காணிக்கை. மதுரையின் சொத்தான மல்லி, மக்களின் வாழ்வோடு இரண்டறக்கலந்துள்ளது. மதுரை
மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மல்லிகை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள் ளன. புவிசார் குறியீடு (ஜி.இ.,) பெற்றது, பெருமைக்குரிய விஷயம்.
தொடர்புக்கு: malligai madurai@gmail.com
மல்லிகை ஒழுக்கத்தின் அடையாளம்:
விஜயலட்சுமி, பாத்திமா கல்லூரி மாணவி: மாணவிகளுக்கு, மல்லிகை ஒழுக்கத்தின் அடையாளம். நவீனத்தில் "லூஸ் ஹேர்' கலாசாரம் வந்தாலும், கல்லூரிக்கு வரும் போது, மல்லிகை சூடிவருவதை, எந்த மாணவியும் தவிர்ப்பதில்லை. மதுரையில் பிறந்து, மதுரை மல்லியை வெறுக்கும் பெண் உண்டா? மல்லிகைப் பூ சூடும் போது, நம்மைஅறியாமலேயே, புத்துணர்ச்சி வரும்.
அதனால் தான், தன் மகள் மல்லிகை சூட, அம்மாக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எனக்கு தெரிந்தவரை, மல்லிகையை விரும்பாத மாணவியை, பார்ப்பது அரிது தான். அது அன்றைய மாணவியாகட்டும், இன்றைய மாணவியாகட்டும், நாளைய மாணவியாகட்டும்; அனைவரும் ஒன்று தான்.
மல்லி ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்:
தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன்: மதுரையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு, கோவை, திருச்சி, கொச்சி வழியாக மலர்கள் ஏற்றுமதி
செய்யப்படுகிறது.
மதுரையில் இருந்து ஒரு டன் அளவிற்கு மல்லிகை உட்பட பல்வகை மலர்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், விமான நிலையத்தில் அதற்கான வசதி இல்லாததால், தினமும் 500 கிலோ வரை மட்டுமே அனுப்பப்படுகிறது.
மதுரை விமான நிலையத்திற்கு, மூன்று மாதத்திற்கு முன்தான், சரக்கு கையாள சுங்கத்துறை அனுமதி அளித்தது. ஆனால், அதற்குரிய எந்த வசதியும் இல்லை. உதாரணமாக, மலர்களை அனுப்ப முன்கூட்டியே "புக்கிங்' செய்யும்போது, அவை சுங்கத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிடும். விமானத்தில் அனுப்பும் வரை, அதை பாதுகாக்க "குளிரூட்டப்பட்ட வைப்பு அறை' இல்லை. பழைய டெர்மினல் கட்டடத்தில், பயணிகள் காத்திருக்கும் அறையை "வைப்பு அறையாக' பயன்படுத்தலாம். மேலும், ஏற்றுமதி காய்கறி, மலர்களில் பூச்சி, புழு போன்றவை உள்ளதா என ஆய்வு செய்ய வேளாண் அதிகாரிக்கான அலுவலகம் இல்லை. சரக்குகளை கையாள பிரிவுக்கென தனி அதிகாரி இல்லை. இந்நிலை தொடர்ந்தால், ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது