ஜிகினா போராளிகள் - திருந்துவரா நம் மக்கள்? உரத்த சிந்தனை, எல்.முருகராஜ்

Updated : ஆக 24, 2013 | Added : ஆக 24, 2013 | கருத்துகள் (110)
Share
Advertisement
uratha sinthanai, உரத்த சிந்தனை

ஒரு வழியாக, "தலைவா' படம் தியேட்டருக்கும் வந்துவிட்டது. இனிமேல் கடலில் கலந்து வீணாய் போன, 6 டி.எம்.சி., தண்ணீர் திரும்ப கிடைத்து விடும், எல்லை மீறி வந்து பாக்., படையினர் தொல்லை கொடுக்க மாட்டார்கள், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் நல்ல தீர்ப்பு கிடைத்து விடும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்...
அடப்போங்கய்யா... ஏற்கனவே, பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் பார்த்தாகி விட்ட படத்திற்கு, தமிழகத்தில் கிடைக்கப் போவது லாபப் பணமே. அதிலும், ஏதாவது வரிவிலக்கு கிடைக்குமா என்று பார்த்தனர்... அதற்கு வழியில்லை, அந்த வகையில், 3 கோடி ரூபாய் நஷ்டம் வரும். அதை யார் ஏற்பது என்பதில் தான், "நெஞ்சுவலியே!' மற்றபடி, உண்ணாவிரத போராட்டமெல்லாம் ஒரு உதார் தான். எங்கே அனுமதி கொடுத்துவிடுவரே என்று பயந்து கொண்டே தான், மனுவே கொடுத்தனராம்; நல்லவேளையாக அனுமதி கிடைக்கவில்லை. இல்லையென்றால், அமலாபால், சந்தானம் இவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரதத்தின் புனிதத்தையே கெடுத்து காமெடியாக்கி இருப்பர்; தப்பித்தது தமிழகம். அரசியல் காரணங்களால் படத்திற்கு தடை என்பதும் தமாஷே! "நீயா தலைவனா வரலை; மக்கள் தான் உன்னை தலைவனா வரச்சொல்றாங்க'ன்னு, மகேந்திரன் பேசும் வசனத்தை வேண்டுமானால் அரசியலில் சேர்த்துக் கொள்ளலாம். "படத்தில் ஒரு துளி அரசியல் இல்லை' என்று, அப்பாவும், பிள்ளையும் காலையிலும், மதியத்திலும், இரவிலும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு கொண்டிருந்தனர். அட அட்டைகத்தி வீரர்களா... படத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்று யார் சொன்னது? அரசியலே சினிமாவாக வந்த, "முகமது பின் துக்ளக்' போன்ற படங்கள் வந்த ஊர்தானே இது. உங்க படத்தில் அரசியல் இல்லை தான்... அப்படியே இருந்தால், "ஆமாம் நாட்டிற்கு தேவையான அரசியல் இருக்கிறது' என்று துணிந்து சொல்ல வேண்டியது தானே. அதைவிட்டு, "அரசியல் சுத்தமா இல்லீங்க' என்று சொல்ல, கொடநாடு வரை போய் அசிங்கப்பட்டு திரும்புவது எல்லாம் தேவைதானா? இப்ப என்னாச்சு நீங்க துப்பாக்கியில் பேசின, "அந்த பயம் இருக்கணும்' என்ற வசனம், இப்ப உங்களுக்கு தானே ரொம்பவே பொருந்துகிறது.

ஒரு படத்தைப் பார்த்து எடுத்தால் தானே, "திருட்டு' என்பர். பல படத்தை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாய் திருடினால், திரட்டு என்பார்களோ? என்னவோ தெரியவில்லை... "நாயகனில்' ஆரம்பித்து, "தேவர் மகன்' வரையிலான படங்களில் இருந்து சுட்டதை வைத்து உருவாக்கின கதை தான், "தலைவா' என்ற பெயரில் கந்தலாகியுள்ளது. உங்க பிரச்னைக்கு நடுவில, கோவை ரசிகன் ஒருத்தன் உங்க படத்தை தியேட்டர்ல பார்க்க முடியலங்கற கவலையில, தூக்கு போட்டு செத்தே போனான். படம் பார்த்து இருந்தாலும், இதே முடிவு தான் எடுத்திருப்பான்ங்றது ஒரு தரப்பினர் வாதம். அது வேறு விஷயம்... ஆனா, செத்துப் போன ரசிகனுக்கு ஓடிப்போய் அனுதாபம் தெரிவித்து, இழப்பீடு கொடுத்து அவனது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை... ஆனால், ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத அளவிற்கு நீங்க பட்ட கவலை அவ்வளவு சரியாகப்படலை. இந்த அட்டை கத்தி ஹீரோக்களை, எப்போது தான் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்போகின்றனரோ!

முதல்ல, சினிமா பார்க்கப் போனால், பார்த்த சினிமாவை தியேட்டரோடு விட்டுவிட்டு வரவேண்டும். அதை வீட்டுக்குள் கொண்டு வருவதால் தான் இத்தனை வினையும். அவர்கள் கொண்டு வராவிட்டாலும், இப்போதும் வீட்டின் வரவேற்பறைக்கு, "டிவி'களும், மொபைல், ஐபேட் போன்ற மின்னணு பொருட்களும், உங்கள் பைக்குள் கொண்டு வந்து, விஷத்தை துப்பும் காலமாக இருக்கிறது. ரஜினி, ஒரு காலத்திலும் நிஜத்தில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில் பிடித்தது இல்லை. ஆனால், அவரது ரசிகர்கள் தான், அந்த வேலையை செய்து, உதட்டை இன்னமும் புண்ணாக்கி கொண்டு இருக்கின்றனர். 80களில் நன்றாக இருந்த இளைஞர்களில் பலரை, சிகரெட் பிடிக்கவும், குடிக்கவும் வைத்த பெருமை, ரஜினியையே சேரும். அதற்கு பிராயச்சித்தமாக அவர், ராகவேந்திரராக மாறினாலும், அவரது ரசிகர்களுக்கு அவரை பரட்டையாகத் தான் பிடித்துப் போய் விட்டது. கமல், "நான் வீட்டை விற்கப் போகிறேன்... நாட்டை விட்டு போகிறேன்' என்றவுடன், கவுதமியை விட, அதிகம் உணர்ச்சிவசப்பட்டவன் நமது ரசிகன் தான். ஏதோ அந்த வீட்டை வாங்கும் போது, இதே போல மீடியாவில் தோன்றி, "நான் இந்த படத்தில் நடித்ததன் மூலம் வாங்கிய வீடு' என்று, இவர்களிடம் சொல்லிவிட்டு வாங்கிய வீட்டை, இப்போது விற்கப் போவது போல, வீட்டிற்குள் கமலும், வெளியில் ரசிகர்களும் வைத்த ஒப்பாரி அதிகம் தான். இந்த ஒப்பாரியை, மும்பை வரை கொண்டு போய் வைத்தது, இன்னமும் அசிங்கம்.

மதுரையில் நடந்த, "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவிற்காக, ரயிலேறி வந்திருக்கலாம்... பெரிய ஆளுகங்றதுனாலே விமானம் ஏறி வந்துருக்கலாம் தப்பில்லை. ஆனால், ஹெலிகாப்டரில் கதாநாயகியுடன் வந்துவிட்டு, "100 கோடி போட்டு இருக்கேன்' என்று மீடியாவிடம் கதறினால் என்ன அர்த்தம். படத்திற்கு, 10 கோடியும்; புதுக்கதாநாயகியுடன் ஹெலிகாப்டரில் சுத்தியதற்கு, 90 கோடியும் செலவானால், அப்புறம் வீட்டை விற்கத்தான் வேண்டியிருக்கும். இதில் என்ன வேடிக்கை என்றால், "யாரால்' பிரச்னை என்று, 10, 15 நாள் புலம்பினார்களோ, அவர்களுக்குதான் முதல் நன்றியை, பிரச்னை தீர்ந்ததும், கமலும், விஜயும் முந்திக் கொண்டு கூறினர். காரணம், மறுபடியும் பிரச்னையாகி விடக் கூடாதல்லவா?

கப்பலோட்டிய தமிழனையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும், சினிமா மூலமாகத் தான், தமிழன் ஒரு காலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டான். அது சாதனை என்றால், அதே தமிழன், "கண்டபடி கட்டிப் பிடிக்கவும்' அதே தமிழ் சினிமாவை துணையாக்கிக் கொண்டது தான் வேதனை. ஆகவே, கோபம் சினிமா மீதல்ல... அதை சரியாக பயன்படுத்தாமல் வீணாக சீன் போடும் அட்டை கத்தி வீரர்கள் மீது தான்! எல்லாரும், எம்.ஜி.ஆராக ஆசைப்படுகின்றனர்... அது தப்பில்லை! ஆனால், "ஒளிவிளக்கு' படத்தில், ஒரு காட்சியில் குடிகாரனாக, மது பாட்டிலுடன் நடித்துவிட்டு, அதற்காக பல காலம் வருந்தியவர் அவர். விற்பனைக்கான கற்பனை உலகமே அது என்றாலும், அதிலும் கற்பை கடைபிடித்தவர் அவர்... "நம்மைப் பார்த்து ரசிகர்கள், கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது' என்பதில் கவனமாக இருந்தவர் அவர். ஆகவே, அவர் நிஜ ஹீரோவாக மக்கள் மன்றத்திலும் ஆட்சி செய்தார்.


ஆனால், நிஜத்தில் எந்நேரமும், "சிவந்த கண்களுடன்' நாக்கை துருத்தி, கையை ஓங்குவதும், திட்டுவதும், அடிக்க பாய்வதுமான செயல்பாடுகளை செய்துவிட்டு, "நான் கறுப்பு எம்.ஜி.ஆர்.,' என்று சொல்லிக் கொள்வது, அவ்வளவு பொருத்தமாக படவில்லை. பக்கம் பக்கமாய் ஊழலுக்கு எதிராக, நீங்கள் பேசிய வசனங்களையும், கொடுத்த புள்ளி விவரங்களையும், எல்லையில் தொல்லை கொடுக்கும் எதிரி படையினரை பந்தாடிய வேகத்தையும், ஏழைகளுக்கான திட்டங்களை தந்த விவேகத்தையும் கண்டு வாய்பிளந்ததன் காரணமாகத் தான், வாழ்நாளெல்லாம், "மைக்' முன் ஆவேசமாக பேசும் வைகோவிடம் கூட கொடுக்காத எதிர்க்கட்சி தலைவர் பதவி அந்தஸ்தை, உங்களிடம் மக்கள் தூக்கி கொடுத்தனர். ஆனால், சினிமாவில் பேசிய வசனத்தையும், வீரத்தையும் இந்த இரண்டு ஆண்டுகளில், சட்டசபையில் ஒரு துளிகூட காட்டவில்லையே ஏன்? சரி, அங்கு தான் கேமரா, ஸ்டார்ட், ஆக்ஷன் சொல்ல வழியில்லை என்று வைத்துக் கொள்வோம். உங்கள் முழக்கங்களை தெரு முனைகளில் மக்கள் முன் வைத்திருக்கலாமே!

எதிர்க்கட்சி தலைவராக இருந்து, பேசவா பிரச்னையில்லை... தூத்துக்குடி மணல் கடத்தல் பிரச்னை ஒன்று போதாதா நீங்கள் உறுமுவதற்கு... உறும வேண்டாம்... திறந்து விடப்பட்ட தண்ணீர், கடை மடை விவசாயிகளுக்கு போகாத வேதனைக்கு ஆதரவாக, தூர் வாராத ஏரி, கிணறுகளுக்கு எதிராக, நித்தமும் பிடிபடும் தமிழக மீனவர்களின் குரலாக, மைக் பிடித்து செருமவாவது செய்திருக்கலாம். இப்படி, விஜய் முதல், விஜயகாந்த் வரையிலான அட்டை கத்தி வீரர்களை, இந்த உலகம் இன்னமும் நம்பிக் கொண்டிருந்தால், நாடு எப்படி உருப்படும்?

இ-மெயில்: murugaraj2006@gmail.com

எல்.முருகராஜ், பத்திரிகையாளர், சிந்தனையாளர்.

Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUNDALAKESI - London,யுனைடெட் கிங்டம்
26-ஆக-201303:58:34 IST Report Abuse
KUNDALAKESI யோவ் முருகராசு, எம் ஜி ராமச்சந்திரன் என்னோமோ மகாத்மா ரேஞ்சுக்கு உதாரணமா சொல்லியிருக்க. அந்தாளு தான்யா சாராய கடைய தொறந்தது. எல்லா பயலும் நாட்டை திருத்தி பொது சேவை செய்ய கலைஉலகதுக்கு (கன்றாவி உலகம் ) வரல்ல. அடுத்தவன மொளகா அரைச்சு, வாய் சவடால் விட்டு ஏமாத்தி சம்பாதிக்க தான் வாரானுக. எம் ஜி ராமச்சந்திரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.
Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
26-ஆக-201309:50:36 IST Report Abuse
Krish Samiசரித்திரம் அறியாத பேத்தல் இது. 'திறந்து' விட்டது, திரு. கருணாநிதி....
Rate this:
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
26-ஆக-201300:23:45 IST Report Abuse
Vasu Murari ஒரு நிலைக்குப் பிறகு சினிமாக்காரர்கள் தேடி ஒழிய விரும்பும் பதுங்கு குழிகள்தான் அரசியல். எதோ சில வசனகர்த்தாக்கள் கோர்துத்தரும் வார்த்தை மாலைகளை வசனங்களாக இயக்குனர்கள் சொல்படியும் தனது மனம் சொல்கின்றபடியும் கைகால்களை ஆட்டியும் கண்களை உருட்டி மிரட்டியும் விட்டால் மட்டும் நிஜ வாழ்க்கையில் மக்களுக்குத் தலைவனாகி விடமுடியாது. கட்டுரையாளர் மிகவும் அருமையாக இவைகளை புட்டு வைத்துள்ளார். இருப்பினும், சினிமா பார்த்து கெட்டுப்போகும் மக்களும், சினிமாவையே மீண்டும் மீண்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கும்பல் இருக்கும்வரை இந்தியா இன்னும் 50 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கும். வெள்ளைகார வல்லுறுகள் 200 ஆண்டுகள் நம்மை ஆள்கிறேன் என்று சொல்லி சதைப்பற்றான இந்தியாவை அகபரித்துச் சென்றுவிட்டான். எலும்போடு ஒட்டிக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதி சதைத் துணுக்குகளை சுரண்டித் தின்ன நரிக் கூட்டங்கள் அங்கங்கே கிளம்பி விட்டன. அதன் விளைவுகள்தான் தனித் தெலுங்கான்வும் அதுபோன்ற இதர இடங்களில் இருந்து எழும் கூக்குரல்களும். பட்டேல் அவர்கள் ஒருங்கிணைத்த இந்தியா சிதறுண்டு போய்க்கொண்டு இருக்கிறது. இதன் காரணங்களால் பாகிஸ்தான், சீனா மற்றும் சுண்டைக்காய் நாடுகளான பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற அண்டை நாடுகளின் வாலாட்டல்கள். எந்த ஒரு கட்சிக்காரனாவது போர்தொடுத்து வாலாட்டும் நாய்களின் கொட்டத்தை அடக்கலாம் என்று கூக்குரல் விடுகிறானா என்றால் ஒரு ஈனஸ்வரத்தில் கூட அத்தகையவைகளை கேட்க முடிவைதில்லை. மாறாக 2014ல் எவருடன் கூட்டணி வைத்து எத்தனை சீட்டுகளைப் பெற்று அடுத்து வரும் 5 ஆண்டுகளில் எவ்வளவு கல்லா கட்டலாலம் என்பதே இன்றைய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் (பகல்) கனவாக இருந்துகொண்டு இருக்கிறது. கட்டுரை ஆசிரியருக்கும் எனக்கு முன்னால் பதிவு செய்த வாசகர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Baskar - Tirunelveli,இந்தியா
25-ஆக-201322:35:40 IST Report Abuse
Baskar அருமையான கட்டுரை .சினிமாவால் இந்ந்த இளைய சமுதாயம் சீரழிகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X