கோவையில், வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதய வால்வுகள், விழிகள், சிறுநீரகங்கள் ஐந்து பேருக்கு தானம் செய்யப்பட்டன. பா.ஜ., கட்சியின் நிர்வாகியான இவரது சிறுநீரகங்களில் ஒன்று, இஸ்லாமிய பெண்ணுக்கு வழங்கப்பட்டது; மவுனமான ஓர் உயிரின் மூலமாக, மத நல்லிணக்கம் இங்கே துளிர்விட்டிருக்கிறது.
கோவை, சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் மருதாசலம்; பெயின்டர். இவரது மனைவி கலா, மகன் ராஜகோபால், 25. பி.சி.ஏ., பட்டதாரி. சரவணம்பட்டியிலுள்ள சாப்ட்வேர் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, குனியமுத்தூரிலுள்ள கல்லூரி நண்பர் மனோஜை அழைத்துக்கொண்டு, பைக்கில் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்றார். குறுக்கு பாதையில் செல்லும்போது, ரோட்டில் நின்றிருந்த அருள்டேவிட்ராஜ் என்பவரது பைக் மீது மோதினார். இதில், மூவரும் காயமடைந்தனர். ராஜகோபால், மனோஜ் ஆகியோரை அருகிலிருந்த மக்கள் மீட்டு, சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் சேர்த்தனர். அருள் டேவிட் ராஜ், போத்தனூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். படுகாயமடைந்த ராஜகோபால், மனோஜ் இருவருக்கும், டாக்டர் பாலமுருகன் தீவிர சிகிச்சையளித்தார். இருப்பினும் நேற்று காலை, ராஜகோபாலுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து, அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அபிராமி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பெரியசாமி தெரிவித்தார். அப்போது, ராஜகோபாலின் தந்தை மருதாசலத்திடம், அவரது நண்பர்கள், " ராஜகோபால், தான் இறந்தால், உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பியதாக,' கூறினர். இதையடுத்து, தனது மகனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, டாக்டரிடம் தெரிவித்தனர். அவர்களை பாராட்டிய டாக்டர் பெரியசாமி, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார். மூளைச்சாவு அடைந்த ராஜகோபாலின் கல்லீரல், இதய வால்வுகள் -4, சென்னை, குளோபல் மருத்துவமனைக்கும்; கண்கள் கோவை, சங்கரா கண் மருத்துவமனைக்கும்; ஒரு சிறுநீரகம், அபிராமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா என்பவருக்கும், மற்றொன்று, ராம் நகரிலுள்ள எஸ்.பி.டி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நூர்ஜஹான் என்பவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் துவங்கின. உடல் உறுப்புகளை அகற்றி, பத்திரமாக இரண்டரை மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லீரலை பெற்றுச் செல்ல, தனி விமானம் மூலம் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் கோவை வந்தனர்.
ஆபரேஷன் "பயணம்' : ஆபரேஷன் நடத்தப்படும் அபிராமி மருத்துவமனையில் இருந்து, உறுப்பு தானம் பெறும் நோயாளிகள் சிகிச்சை பெறும் ராம்நகர் எஸ்.பி.டி., மருத்துவமனை, சங்கரா மருத்துவமனைக்கு, உறுப்புகளை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வது என்றும், சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனைக்கு கல்லீரல் மற்றும் இதய வால்வுகளை, இங்கிருந்து பீளமேடு விமான நிலையம் வரை ஆம்புலன்சில் எடுத்துச் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்வது என்றும் தீர்மானித்தனர். இதற்கான பயணத் தொலைவு, அதற்கு ஆகும் நேரம் முன்கூட்டியே கணிக்கப்பட்டது. சாலைவழி பயணத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, மாநகர போலீசாரின் உதவியை டாக்டர்கள் நாடினர்.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முழு ஒத்துழைப்பு அளிக்க, போலீசாருக்கு உத்தரவிட்டதும், பாதுகாப்பு போலீஸ் வாகனங்கள், மருத்துவமனைக்கு விரைந்தன. மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்பின், சரியாக நேற்றிரவு 7.30 மணிக்கு, அபிராமி மருத்துவமனை இயக்குனர் பெரியசாமி தலைமையிலான டாக்டர் குழுவினர் ஆபரேஷனை துவக்கினர். முதலில், கல்லீரல் மற்றும் இதயத்தின் நான்கு வால்வுகள் பத்திரமாக எடுக்கப்பட்டு, ஆம்புலன்சில் கோவை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்ததாக, ஒரு மணி நேர ஆபரேஷனுக்குப்பின் இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டன; அதில் ஒன்று, ராம்நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, இரு விழிகள் அகற்றப்பட்டு, சரவணம்பட்டி சங்கரா கண் மருத்துவமனைக்கு பயணமானது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய இதற்கான ஆபரேஷன்கள், நள்ளிரவு வரை தொடர்ந்தது.
ராஜகோபாலின் தந்தை மருதாசலம் கூறுகையில்,"" எனது மகன், நாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள விவேகானந்தர் இயக்கத்தின் உறுப்பினர். ஏழு முறை, ரத்த தானம் செய்துள்ளான். "தான் இறந்தாலும் மற்றவர்கள் பயனடையும் வகையில், உடல் தானம் செய்ய வேண்டும்,' என, நண்பர்களிடம் கூறியுள்ளான். அவனது ஆசையை நிறைவேற்றுவதன் மூலம், எனது மகனின் உடல் உறுப்புகளால், உயிர்பெற்றவர்கள் மூலம், என் மகனை காண்பேன்,'' என, கண்ணீர் மல்க தெரிவித்தார்.
டாக்டர் குழு : உடல் உறுப்பு தான ஆபரேஷன் குழுவில் டாக்டர்கள் பெரியசாமி (சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர்), செந்தில்குமார் (குடல்நோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்), பாலகிருஷ்ணன், பாலமுருகன், திருமலைசாமி, சம்பத் ஆகியோர் இடம்பெற்றனர். மயக்கவியல் டாக்டர்கள் சேகர் மைக்கேல், சந்தானம் ஆகியோரும், சென்னை குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் விவேகானந்தன், மனோஜ் ஆகியோரும் இடம்பெற்றனர்.
தானம் செய்யப்பட்ட உறுப்புகள்
கல்லீரல்,
இதயத்தின் 4 வால்வுகள்
இரு சிறுநீரகங்கள்
இரு விழிகள்
போலீஸ் டீம் : சாலை வழியே, உடல் உறுப்புகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு, வழி ஏற்படுத்திக்கொடுத்து, போக்குவரத்தை நெறிப்படுத்தும் பணியில் கோவை மாநகர தெற்குப் பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், 15 எஸ்.ஐ.,கள், 40 போலீசார் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ்களுடன் போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்குச் சென்றன.
உயிரிழந்தார் உயிர்கொடுத்தார்! : விபத்தில் பலியான ராஜகோபால், சரவணம்பட்டி மண்டல பா.ஜ., துணைத்தலைவராக, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் நியமிக்கப்பட்டார். கடந்த எட்டு ஆண்டுகளாக, கட்சி உறுப்பினரும் கூட. இவரது சிறுநீரகங்களில் ஒன்று, ராம் நகரிலுள்ள எஸ்.பி.டி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நூர்ஜஹான் என்பவருக்கு தானம் செய்யப்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
மூளைச்சாவு என்பது என்ன?
டாக்டர் பாலமுருகன் கூறியதாவது: மனித மூளை, மண்டை ஓடால் பாதுகாக்கப்படுகிறது. தாக்குதல், விபத்துக்கு உள்ளாகும் போதும் மூளை சிதைந்துவிட நேரிடும். மீண்டும் சுயநினைவுக்கு திரும்ப முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இதுவே மூளைச்சாவு என்பதாகும். தலைப்பகுதி சிதைந்தால்தான், ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்படும் என்பதில்லை. மாறாக தலையின் வெளிப்புறத்தில் எவ்வித காயமும் ஏற்படாம<லும், உள்ளே மூளை சிதைவதற்கான அபாயமும் உள்ளது. இவ்வாறு, டாக்டர் பாலமுருகன் தெரிவித்தார்.
"பீச் கிராப்ட்' விமானம் : இறந்த ராஜகோபாலின் இதய வால்வுகள் மற்றும் கல்லீரலை கொண்டு செல்ல, சென்னையிலிருந்து குளோபல் மருத்துவமனை ஊழியர்கள், "பீச் கிராப்ட்' என்ற சிறிய ரக விமானத்தை (ஙகூஒஐஃ) பயன்படுத்தினர். இந்த விமானத்தில் அதிகபட்சமாக 16 இருக்கைகள் மட்டுமே இருக்கும்.
தயார் நிலையில் கோவை ஏர்போர்ட் : கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில், குறைந்தது 40 நிமிடம் முதல் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்தில் சென்றடைய முடியும். ராஜகோபாலின் உடல்உறுப்புகளை வேகமாக கொண்டு செல்ல, கோவை சர்வதேச விமான நிலையத்தில், நேற்றிரவு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பொதுவாக விமான போக்குவரத்து அதிகம் இருக்கும் நிலையிலும், இதுபோன்ற அவசரகால தேவைகளுக்கு, வி.வி.ஐ.பி.,க்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அளிக்கப்படும். கோவையில் நள்ளிரவு நேரங்களில் விமான போக்குவரத்து அதிகம் இருக்காது என்ற காரணத்தால், நேற்றிரவு, உடல் உறுப்புகளுடன் செல்லும் பிரத்யேக விமானம் உடனடியாக புறப்பட வசதியாக, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எப்.,) குளோபல் மருத்துவர்கள், ராஜகோபால் உடல் உறுப்புகளை உடனடியாக கொண்டு செல்ல உ<தவ தயார் நிலையில் இருந்தனர்.
எங்களது செல்லப்பிள்ளை...
பாலசந்திரன் (அண்ணன்), டிராவல்ஸ் டிரைவர்: எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். ராஜகோபால் அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டிருந்தான். எங்கள் அனைவருக்கும் அவன் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தான். வாழ்வில் கடினமாக உழைத்து நல்ல நிலைக்கு வர வேண்டும், பெற்றோரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என எங்களிடம் தொடர்ந்து கூறி வந்தான். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என, நாங்கள் நினைத்து பார்க்கவில்லை. அவன் பிரிவு எங்களை கடுமையாக பாதித்துள்ளது.
பிரசாத், (சி.பி.எம்., கல்லூரி தோழர்),தனியார் நிறுவன ஊழியர்: கல்லூரி நாட்களில் அனைவரிடமும் அன்பாகவும், சகஜமாகவும் பழகும் தன்மையை ராஜகோபால் கொண்டிருந்தான். எந்த ஒரு விஷயத்துக்கும் எளிதில் கோபப்பட மாட்டான். யாரையும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டான். நல்ல நண்பரை நாங்கள் அனைவரும் இழந்து விட்டோம்.
மரிய ஆரோக்கியராஜ், பிரனவ் குமார் (நண்பர்கள்) கடந்த ஒரு ஆண்டாக ராஜகோபாலை எங்களுக்கு தெரியும். யாரிடமும் கோபப்பட மாட்டான். பிறருக்கு உதவும் தன்மை அதிகம் கொண்டிருந்தான்.
இதுவரை 2,000 உடல்உறுப்புகள் தானம் : உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு, 2008 முதல் தமிழகத்தில் ஏற்படத்துவங்கியது. விலை மதிப்பில்லாத குடும்ப உறுப்பினரை இழந்த சூழலிலும், உயிருக்குப் போராடும் பலரை காப்பாற்றவும், மறுவாழ்வு அளிக்கவும், பலர் முன்வர துவங்கியுள்ளனர். கடந்த 2008 முதல் இதுவரை, தமிழகத்தில் 375 பேரின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். மொத்தம் 2,000 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.