வாஷிங்டன்:சிரியா மீதான தாக்குதலை, 60 நாட்களுக்குள் முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள், அந்த நாட்டில் இறங்கி போரிடாமல், வான்வழி தாக்குதல் நடத்தவும், இந்த தீர்மானம் வழி செய்கிறது.
சிரியாவின் அதிபர், பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடும் சண்டை நடந்து வருகிறது.கடந்த மாதம், 21ம் தேதி, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், 1,300 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டு உள்ளார். இதற்காக, அமெரிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரியுள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட, ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, உளவு கப்பல் ஒன்றை, மத்திய தரைகடல் பகுதிக்கு, ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. ஜெர்மனும், பிரிட்டனும், இந்த தாக்குதலில் ஈடுபடப் போவதில்லை என, தெரிவித்துவிட்டன. "சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என, அரபு நாடுகளும், சீனாவும் கேட்டு கொண்டுள்ளன. சண்டைக்கு முன்னோட்டமாக, அமெரிக்கா, போர் கப்பலை, மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அந்நாட்டு, பார்லிமென்ட்டின் மேல்சபையில் பேசுகையில், ""ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்காவிட்டால், ஈரான் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு கொண்டாட்டமாகிவிடும்; அதுமட்டுமல்லாது, சர்வதேச அளவில், தோழமை நாடுகளின் உறவை, நாம் இழக்க நேரிடும்,'' என்றார்.
சிரியா மீது தாக்குதல் நடத்த அனுமதி கோரும் தீர்மானம், அமெரிக்க பார்லிமென்ட்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சிரியா மீதான தாக்குதல் நடவடிக்கை, 60 நாட்களுக்குள் முடிய வேண்டும். இந்த நடவடிக்கையில், அமெரிக்க வீரர்களின் காலடி அந்த நாட்டு மண்ணில் படக்கூடாது. (அதாவது விமான தாக்குதல் அல்லது கடற்படை தாக்குதல் நடத்தப்பட வேண்டும்) என, இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், இந்த தீர்மானம், நேற்று இரவு வரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.