படித்து முடித்து, "ஓயிட் காலர் ஜாப்' வேண்டும் என நினைக்கும் இளைஞர்கள் மத்தியில், தேக்கு மரத்தை போல உறுதியாக இருந்தாலும், பொதுநலனிற்காக நாணலை போல வளைந்து கொடுக்க வேண்டும் என்று, சிறிதும் ஆதாயம் இல்லாமல் "குப்பையில்லா சமுதாயத்தை' உருவாக்க, 30 பட்டதாரி இளைஞர் குழுக்கள் களம் இறங்கியிருக்கிறார்கள், குப்பை பூமியை சொர்க்க பூமியாக்கிட!
"நாணல் நண்பர்கள் குழு' என்ற அமைப்பை தொடங்கி, முதல் முயற்சியாக வண்டியூர் கண்மாயில், ஆகாயதாமரை செடிகளை அகற்றி, கலெக்டர் சுப்பிரமணியன் உதவியுடன், வண்டியூர் கண்மாய் நீர் ஆதார மேம்பாட்டு கூட்டமைப்பு திட்டத்தை, 18 குடியிருப்போர் நலச்சங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
பாசன நீர் போக மீதமுள்ள வைகை ஆற்று தண்ணீரை, வண்டியூர் கண்மாயில் தேக்கும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளனர். மதுரை நகர் புறங்களில் நீர் நிலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்றி, பறவைகள் சரணாலயமாக மாற்றுவதே, இவர்களின் முக்கிய நோக்கம். நாணல் குழுவின் <உறுப்பினர் தமிழ்தாசன் கூறுகையில், ""வைகையில் 67 இடங்களில் கழிவுநீர் கலப்பதாக அறியப்பட்டுள்ளது.
ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், என்ன பாதிப்பு ஏற்படுகிறது என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். யாரும் கண்டு கொள்ளாத அரசு மாணவர் விடுதிகளை கண்டறிந்து, விடுதி வார்டன் தலைமையில் சுத்தம் செய்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக மதுரையின் ஒரே வனப்பகுதியான அழகர் கோயில் மலையில் வாழும் கட்டு மாடு, குரங்கு, மான், விலங்கினங்களையும், பறவைகளையும் பாதுகாக்க மலையில் தேங்கும் பாலிதீன் குப்பைகளை அகற்ற முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
குப்பையில்லா நகரை உருவாக்க உழைக்கும், இந்த இளைஞர்களோடு, பொதுமக்களும் இணைந்து தூய்மை பணியாற்ற, 95436 63443க்கு அழைக்கவும்.
மருத்துவ் கழிவுகளை அழிப்பது எப்படி?
உயிர்களையும், இயற்கையையும் அச்சுறுத்தும் கழிவுகளில் மிகப்பெரும் பங்கு வகிப்பது மருத்துவக் கழிவுகள். நோய்கள் பெருகிவிட்ட சூழ்நிலையில், அதுசார்ந்த கழிவுகளும் அதிகரித்து விட்டன.
மருத்துவக் கழிவுகளைப் பொறுத்தவரை, இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது. சலைன் பாட்டில், சிரின்ஞ், மருந்து பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்ந்தது. காட்டன், அறுவை சிகிச்சை அரங்கில் வெளியேறும் ரத்தக் கழிவு, நஞ்சுக்கொடி, மனித பாகங்களின் கழிவுகள், "சர்ஜிக்கல்' வகையைச் சேர்ந்தது. இரண்டு வித கழிவுகளையும் முறையாக அகற்றினால் தான் சுற்றுப்புறம் மாசுபடாமல் இருக்கும்.
மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியைச் செய்து வரும், ராம்கி ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவன விற்பனை நிர்வாகி ராம்கி கூறியதாவது:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற்று, நிறுவனத்தை நடத்துகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கழிவுகளை பெறுகிறோம். காரியாபட்டி முக்குளத்தில் 30 ஏக்கரில் கழிவுகளை அகற்றும் நிறுவனம் உள்ளது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக வெப்பத்தில் சுருக்கி (ஆட்டோகிளேவ்), அதை நூறு துண்டுகளாக உடைத்து, மறுசுழற்சிக்கு அனுப்பி விடுவோம்.
மற்ற கழிவுகள் 1000 டிகிரி வெப்பத்தில் (இன்சினேரட்டர்) எரிக்கப்படும். எரிக்கும் போது வெளியேறும் புகை, 30அடி உயர புகைக்கூண்டு வழியாக, காற்றை மாசுபடுத்தாத வகையில் வெள்ளை நிறத்தில் வெளியேறும். ஒரு நாளைக்கு ஒரு டன் அளவில் மொத்த கழிவுகள் பெறப்படுகிறது. ஒருமணி நேரத்தில் 150 கிலோ கழிவுகளை எரிக்க முடியும். 100 கிலோ கழிவை எரிக்கும் போது 20 கிலோ சாம்பல் மிஞ்சும். இதுவும் காற்றை மாசுபடுத்தும். சாம்பல் நிலத்தில் பட்டாலும் மாசு என்பதால், தரையில் பள்ளம் தோண்டி ரப்பர் ஷீட், பிளாஸ்டிக் ஷீட் விரித்து சாம்பலை பரப்பி மீண்டும் மூடிவிடுவோம். அதிகமாக தேங்கும் போது, அவற்றை எடுத்து, சென்னை கும்மிடிபூண்டியில் உள்ள பெரிய யூனிட்டிற்கு மாற்றி விடுவோம்.ரத்தக் கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை சுத்தம் செய்ய தனி இடம் உள்ளது. இந்த தண்ணீரை மறுசுழற்சி செய்து, நாங்களே பயன்படுத்துகிறோம். வெளியே விடுவதில்லை. ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 700 வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால், இன்னமும் பல மருத்துவமனைகள் இதுகுறித்த விழிப்புணர்வு பெறவில்லை.
மருத்துவமனைகளைப் பொறுத்தவரை அறுவை சிகிச்சை கழிவுகளை மஞ்சள் நிற பையிலும், பிளாஸ்டிக் கழிவுகளை சிவப்பு நிற பையிலும் கொட்ட வேண்டும்.
மஞ்சள் நிற பையில் பிளாஸ்டிக் கழிவு இருந்தால், எரிக்கும் போது பிளாஸ்டிக் எரிந்து காற்று மாசுபடும். இதைத் தவிர்க்க, மருத்துவமனைகளில் இரண்டு வித பைகளை முறையாக கையாள பயிற்சி தருகிறோம், என்றார்.போன்:96771 22718.
சாயம் போன விவசாய நிலங்கள்
முரளீதரன், வக்கீல், வாடிப்பட்டி: மனிதனுக்கு உதவிடும், இயற்கை ஆதாரங்களில் நிலமே முக்கியமானதும், முதன்மையானதும். இது தனிமனிதன் உயிர் வாழ்வதற்கும், மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படை. இந்தியாவின் பொருளாதாரம், விவசாயத்தையும், அதை சார்ந்த கால்நடை பராமரிப்பையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் மொத்த பரப்பளவில், விவசாயம் 43%, காடுகள் 17.5%. தமிழகத்தில் 2,239 கால்வாய்களும், 41 260 ஏரிகளும், 18 லட்சத்து 32 ஆயிரத்து 154 கிணறுகளும், 78 நீர் தேக்கங்களும் விவசாயத்திற்கு பயன்படுகின்றன. விவசாய நிலங்கள், வீட்டடி மனைகளாக மாறி வீடுகள், தொழிற்சாலைகள் உருவாகி அதன் மூலம் வெளியேற்றப்படும் கழிவுளால், பூமி தன்னகத்தே உள்ளடக்கிய கனிமப்பொருட்கள், தாதுப்பொருட்கள் பாதிப்புக்குள்ளாகி, மண்ணின் சத்து கெட்டு விடுகிறது.
பயிர்கள், தாவரங்கள், உணவு பொருட்கள் அதிகம் விளைவதும் தடைபட்டு மண்ணின் பொன்நிறம் சாயம் போய் சத்தில்லாமல் மாறிவிட்டது. நிலம் மாசுபடுவதை தடுக்க, 1988ம் ஆண்டு தேசிய நில பயன்பாட்டு கொள்கை, 1992 இயற்கை மாசுபடுவதை தடை செய்யும் கொள்கை, 2000ம் ஆண்டின் வேளாண் கொள்கை மற்றும் நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை கையாளுதல் விதிகள் ஆகிய சட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.
விவசாய நிலங்கள் வீட்டடி மனைகளாக மாறாமல் தடுப்பது எப்படி? விவசாயிகளுக்கு, விவசாயம் செய்யும் எண்ணம் வளர்க்க, வட்டியில்லா விவசாய கடன் வழங்க அனைத்து வங்கிகளும் முன்வர வேண்டும் விவசாயத்திற்கு தேவையான தரமான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.விவசாய நிலங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும்.
மண்மாசடைவதை தடுக்க பிளாஸ்டிக், நைலான், பாலிதீன் போன்றவற்றை ஒட்டு மொத்தமாக அழிக்க வேண்டும்.
மலை போல் பிளாஸ்டிக்
மதுரையில் சேகரிக்கப்படும் குப்பைகளை, மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கும் பணி மட்டுமே, மாநகராட்சி சார்பில் தற்போது நடந்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, டயர்கள், மரக்கட்டைகள், உலோகங்களை தனியாக பிரித்து வைத்துள்ளனர். உரம் தயாரிப்புக்கோ மக்காத குப்பைகளுடன் மூடும் பணியிலோ, அவற்றை பயன்படுத்த முடியாது. மறுசுழற்சி செய்வோர் விரும்பினால், அவர்களிடம் அவற்றை ஒப்படைக்க, முன்பு முடிவு செய்திருந்தனர். மாநகராட்சி, அதற்கான அறிவிப்பை வெளியிடாததால், பிரித்துவைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் குவியல், மலைபோல் அதிகரித்து வருகிறது.
அண்ணா பல்கலை உடன் இணைந்து, மாநகராட்சி மேற்கொண்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், தினமும் சேகரிப்படும் குப்பையின் எடையில், சதவீத அடிப்படையில் சேகரிப்பாகும் பொருட்கள்:
பொருள்---------------சதவீதம்
காகிதம்------------1.3325
பிளாஸ்டிக்---------0.7525
உலோகம்----------0.085
கண்ணாடி----------0.1675
ரப்பர், ரெக்சின்-----0.0845
மரக்கட்டை--------0.3425
மாட்டு கழிவுகள்---0.9046
தேங்காய் சிரட்டை-0.70
பேக்கிங் கழிவு-----0.26535
காய்கறி, பழங்கள்--29
இலை-------------8.238
உணவுகள்---------24.367
மீன்கள்------------1.3228