இன்றைய இளைஞர்களிடையே, ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவர்கள் தான், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இன்று ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தராமல், கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டால், எதிர்கால இந்தியாவின் நிலை, கேள்விக்குறியாகி விடும். இதை சரிப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இன்றைய சீரழிவுக்கு காரணம், மேற்கத்திய கலாசாரத் தாக்கம் தான். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய நாடுகளைக் கைகாட்டும் நாம், அவர்களிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளலாமே?
பயனுள்ள ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம், மாணவர்களுக்கு, நல்ல ஒழுக்கம் ஏற்படுகிறது. வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் தரப்படும் பயிற்சியின் பலனை, அவர்கள் உணர வாய்ப்பு ஏற்படுகிறது. தேசிய பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் காலத்தில், மாணவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு உரிய சேவையை ஆற்றுவதற்காக தயார் செய்வதே, பல்கலைக்கழக மட்டத்தில், இந்த ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதன் நோக்கம். இந்த பயிற்சியின் மூலம், மாணவர்களிடையே சுய கட்டுப்பாடு, தலைமைப் பண்பு, ஆரோக்கியமான போட்டி, சமுதாய சேவை உணர்வு ஆகியவை ஏற்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், கட்டாய ராணுவ பயிற்சி நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 18 வயது முதல், 25 வயது வரையான அனைத்து ஆண்களும், குறிப்பிட்ட காலத்திற்கு ராணுவ பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அரசுத் துறையில், நிர்வாக பணிகளில் சேர, இந்த ராணுவ பயிற்சி கட்டாயம். இத்தகைய ராணுவப் பயிற்சி பெறாதவர்களுக்கு, அரசு வழங்கும் கல்விக் கடன், நிதி உதவி போன்றவை கிடைக்காது. ராணுவ பயிற்சிபெற பதிவு செய்யாதவர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள பல மாகாண அரசுகளும் கூடுதல் தண்டனை வழங்குகின்றன. ஊர்தி ஓட்டுனர் அனுமதி பெறுவதற்கும், இந்த ராணுவ பயிற்சி அவசியம் என்று, பல மாகாணங்களில் சட்டம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்த நடைமுறையை, பல ஐரோப்பிய நாடுகள் பின்பற்றி வருகின்றன.
சீனாவில், தேசிய, "சியாவோ டுங்' பல்கலைக்கழகத்தில், கட்டாய ராணுவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நவீன ராணுவ அறிவியல் குறித்து, அனைத்து இளைஞர்களும் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும் என்று, சீனா விரும்புகிறது. இந்த பயிற்சியில் பங்கு பெற்றவர்கள், முறையான ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். சீனாவின் தற்போதைய திட்டப்படி, 18 முதல், 22 வயது வரையான இளைஞர்களுக்கு, 24 மாத கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், ஏற்கனவே கிராமப்புற இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து வருகிறது. தற்போது, பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கும், இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனியில், தற்போது மாணவர்களுக்கு, கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், கட்டாய ராணுவ பயிற்சிக்குப் பதில், கட்டாய சமுதாய சேவை திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து, ஜெர்மன் அரசியல்வாதிகள் சிந்தித்து வருகின்றனர்
இந்த கட்டாய சமுதாய சேவை பயிற்சி, ஒன்பது மாதம் அளிக்கப்படும். ஆண்டுதோறும், 90 ஆயிரம் பேர், இந்த பயிற்சியில் சேர்க்கப்படுவர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும், முதியவர்களுக்கு உதவி செய்தல், முதியவர்களுக்கு பேப்பர் படித்து காட்டுதல், முதியவர்களுக்கான அலுவலக பணிகளைப் பார்த்தல் போன்றவை, இந்த கட்டாய சமுதாய சேவைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டில், கட்டாய ராணுவ கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ளது. பள்ளி மட்டத்திலேயே ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு, மக்கள் ராணுவ பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. உடல் ரீதியாக அல்லது மருத்துவ ரீதியாக, ராணுவ பயிற்சி பெறத் தகுதி இல்லாத மாணவர் அல்லது மாணவியருக்கு, அவர்களுடைய உடல் நிலைக்கேற்ப, இதர பயிற்சிகள் தரப்படுகின்றன. மதத்தைக் காரணம் காட்டி இந்த பயிற்சியிலிருந்து தப்பிக்க முடியாது. ராணுவ பயிற்சி பெறாத மாணவர்கள் பட்டம் பெற இயலாது.
இந்தியாவில் தற்போது, தேசிய மாணவர் படை என்ற அமைப்பு உள்ளது. இது பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. 1917லேயே இதற்கான சட்டம் இயற்றப்பட்ட போதும், 1948 ஜூலை 15ல் தான், இது நடைமுறைக்கு வந்தது. இதில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என்ற, மூன்று பிரிவுகள் உள்ளன. தேசிய மாணவர் படையின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இதற்கான பாடத்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஜூனியர் டிவிஷன், 13 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சீனியர் டிவிஷன், பிளஸ் 1 முதல், 26 வயது வரையான கல்லூரி மாணவர்கள் என, இரு பிரிவுகள் உள்ளன. ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளும், சீனியர் டிவிஷன் பிரிவு மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், இதில் சேர்ந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இதை மாற்ற வேண்டும். தேசிய மாணவர் படையில், உடல் தகுதி உள்ள அனைத்து மாணவர்களும் சேர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மாணவ பருவத்திலேயே இதைக் கட்டாயம் ஆக்குவதன் மூலம், அவர்களிடையே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்த முடியும். இத்தகைய ராணுவ பயிற்சியால், இளைஞர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்படுகிறது; நாட்டுப்பற்று அதிகரிக்கிறது. மொழி, மதம், ஜாதி பாகுபாடுகள் நீக்கப்படுகின்றன. சேவை மனப்பான்மை உருவாகிறது. எதிர்கால இந்தியாவைச் சிறந்த முறையில் உருவாக்குபவர்களாக அவர்களைத் தயார் செய்ய முடியும்.
நமது தேசிய இளைஞர் கொள்கைப்படி, கல்வி பயிலும் இளைஞர்கள், தமது படிப்பு காலத்தில், ஐந்தில் ஒரு பங்கு நேரத்தை வெளிப்புற நடவடிக்கைகளில் செலவழிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து மேற்பட்டப் படிப்பு மாணவர்களும் குறைந்தது, ஒரு வார கால ராணுவ பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும் என்று, சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கென, ராஜஸ்தான் மாநிலம், மானேசரில், ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வருகிறது. இதன் மூலம் மேற்பட்டப் படிப்பு மாணவர்கள், இயற்கை சூழலில் வாழவும், தேசிய இளைஞர் கொள்கையில் கூறப்பட்டுள்ளவற்றை அறிந்து கொள்ளவும், பழக வாய்ப்பு ஏற்படுகிறது. மாணவர்களிடையே தோழமை உணர்வையும், சகோதர பரிவையும் ஏற்படுத்துதல் ராணுவத்தின் பணி. அவர்களுடைய செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளவும், இணக்கமான, மாசற்ற சுற்றுச் சூழலில் சாதனைகள் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுகிறது. பேரழிவு நிர்வாகம், அணு ஆயுத, ரசாயன மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல் தொடர்பான, விழப்புணர்வு மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், குழு நடவடிக்கை மற்றும் குழு விவாதத்தில் பங்கேற்றல், உடல் ஆரோக்கியம் மற்றும் தகுதிகளின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வைத்தல் என, இந்த பயிற்சிக்குப் பிறகு, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சியின் போது தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, ராணுவத்தில் பதவி வழங்கப்பட்டு, அவர்களுடைய தலைமைப் பண்பு மேம்பட உதவி செய்யப்படும். எனவே, இன்றைய இளைஞர்கள் நல்வழிப்பட, மாணவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அவசியம். கல்வி கொள்கையை வகுப்பவர்கள், சிந்திப்பரா?
இ-மெயில்: ilango@dinamalar.in
மு.இளங்கோவன், மூத்த பத்திரிகையாளர்