கருவேல மரங்கள், மண்ணின் வில்லன்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருவேல மரங்கள்', மண்ணின் வில்லன்கள்

Added : செப் 08, 2013
Share
விருதுநகர் மாவட்டத்தில்,பொது பணித்துறை, ஒன்றிய பராமரிப்பில், 450 க்கு மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. கண்மாய்களை முறையாக ஆழ படுத்து வதில்லை. இதனாலே கண்மாய்கள் பெரும்பாலும், நிலம் மட்டத்தில் காட்சி தருகின்றன. இதன்விளைவாக, இங்கு கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. கண்மாய்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ளது. தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கண்மாய்களில்


விருதுநகர் மாவட்டத்தில்,பொது பணித்துறை, ஒன்றிய பராமரிப்பில், 450 க்கு மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. கண்மாய்களை முறையாக ஆழ படுத்து வதில்லை. இதனாலே கண்மாய்கள் பெரும்பாலும், நிலம் மட்டத்தில் காட்சி தருகின்றன.
இதன்விளைவாக, இங்கு கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. கண்மாய்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ளது. தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கண்மாய்களில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது.
இது போன்று தான் வரத்துகால்வாய்களில் நிலையும். இங்கும் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புதான். ஏற்கனவே மழை இன்றி, விளை நிலங்கள் அனைத்தும் கருவேல மரங்களாக மாறி வருகின்றன. இதன் பயன், நிலத்தடிநீருக்கு மிக பெரியபாதிப்பை ஏற்படுத்தும். குடிநீருக்கும் பிரச்னைதான். ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டாக போதிய மழையின்றி,விவசாயம் பின்னோக்கி சென்றுள்ளது.குடிநீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டத்தில்,நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் கருவேல மரங்களால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கிராம பகுதியை சேர்ந்த பலர் இடம் பெயர்ந்து, நகரத்தை நோக்கி செல்ல தொடங்கி விட்டனர். 500 வீடுகள் இருந்த கிராமத்தில், தற்போது 50 வீடுகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. அந்தளவிற்கு கருவேல மரங்கள் , விவசாயத்தை நிலைகுலைய செய்து வருகிறது. சிறு மழையை நம்பி எள், சோளம், கம்பு விவசாயம் செய்தால், கருவேல மரத்தின் தாக்கத்தால், பயிர்கள் வளர்ச்சி அடைவதில்லை. விவசாயிகளுக்கும், உழுத கூலி கூட கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. நிலத்தடி நீர், விவசாயத்திற்கு வேட்டு வைக்கும் இந்த மரங்களை, வேரோடு அழித்தாலே, இதற்கு தீர்வு காணலாம்.

கருவேல மரம் வந்த கதை
வேலிகாத்தான் என அழைக்கப்படும் "கருவேல மரங்கள்', மண்ணின் வில்லன்கள். இதன் தாவரவியல் பெயர் "ப்ரோசோபிச் சூலிப்ளோரா'.
இது வேளாண் நிலங்கள், வாழ்வாதாரங்களை நாசப்படுத்தும் தாவரம். மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும், விறகாகவும் பயன்படும் எனக் கருதி, 1950ல் ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தியாவுக்கு விதையாக கொண்டுவரப்பட்டது. நலம் பயக்கும் என கருதி, விதைக்கப்பட்ட இவை, நிலத்திற்கு எதிரியாகி, இன்று இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து விட்டது.
தமிழகத்தில் 25 சதவீத வேளாண் நிலங்கள் என்றால், விருதுநகர் மாவட்டத்தில் 60 சதவீதம் நிங்களில், கருவேல மரங்கள் சூழ்ந்து , வேளாண்மைக்கும் விவசாயத்திற்கும் தீங்கு ஏற்படுத்துகிறது.
53 மீட்டர் வரை வளரும் இதன் வேர், ஆழமாகச் சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. வறட்சி காலத்தில், பிற தாவரங்களுக்குத் தேவையான நீர் முழுவதையும், இவை உறிஞ்சி விடுவதால், மற்ற தாவரங்கள் வாடி வதங்கி விடுகின்றன.
இனி வரும் காலத்தில், விவசாய நிலங்கள் அனைத்தும், தரிசு நிலங்களாக மாறினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. தாவர வகைகளுக்கு வரும் நோய்களும், பூச்சி அரிப்பும் கருவேல மரத்தை தாக்காது.
பல மாதங்கள் பயன்பாடற்ற நிலத்தில், இயற்கையாகவே வளரும் அளவிற்கு, பரவிக் கிடக்கும் கருவேல மரங்கள், அழிக்க முடியாதவை. வெட்ட வெட்ட திரும்ப வளரும் தன்மை கொண்டது. இவற்றை, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தி, மனித குலத்திற்கு பயன் பெறும் வகையில் செய்யலாம்.
பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை, இந்தக் கருவேல மரங்கள் பாழ்படுத்தி, நிலத்தடி நீரே இல்லாமல் செய்துவிட்டன.
"மரம் நடுவோம்' என்ற கருத்து மேலோங்கும் இன்றைய நாளில், "வேலிகாத்தானை வெட்டுவோம்' என்ற கருத்து மேலோங்கினால் மட்டுமே, மண்ணின் மாண்பை காப்பாற்ற இயலும்.

கொடிய விஷம் கொண்டது
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஜயமுருகன் (விருதுநகர்) : விவசாயிகளை பாதிக்கும் கொடிய விஷம் கொண்டது கருவேல மரங்கள். இது காற்றில் வரக்கூடிய நீர் சத்தை கூட உறிஞ்சும் தன்மை கொண்டது.
பல தரப்பட்ட மரங்கள், வேர்கள் மூலமே நீரை உறிஞ்சும், ஆனால், கருவேல மரங்களோ, இலைகள் மூலம் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியான, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடியில் 5, 000 ஏக்கர் பரப்பளவில், கருவேல மரங்கள் உள்ளன.
இவற்றால் இங்கு , நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படைந்துள்ளது.
விவசாயம் செய்யும் நிலத்தின் அருகே, கருவேல மரம் இருந்தால், 10 அடி தூரத்திற்கு விவசாயம் பாதிப்படைகிறது. மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை தூர்வாறினாலே, கருவேல மரங்களை வேரோடு, அப்புற படுத்தி விடலாம்.

விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
விருதுநகர் கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில்,"" கருவேல மரங்கள், நிலத்தடி நீரை, அதிகம் உறிஞ்சுவதால், விளைநிலத்திற்கு போதுமான நீர் கிடைக்காமல், பயிர்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆனால், தனியார்கள் தங்களது தரிசு நிலத்தில், அதிகளவில் கருவேலமரங்களை வளரவிட்டு, பின்னர் அவற்றை
வெட்டி விற்பனை செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். அங்குள்ள மரங்களை மாவட்ட நிர்வாகத்தால் அகற்ற முடியாது. அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள கருவேல மரங்கள், அவ்வப்போது வெட்டப்பட்டு, ஏலம் விடப்படுகின்றன. எனினும், தனியார் நிலங்களிலுள்ள கருவேல மரங்களை உடனுக்குடன் அகற்றுவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.

நிலத்தின் சத்துக்களை உறிஞ்சுகிறது
சுப்பையா (வேளாண் துறை இணை இயக்குனர்) : காமராஜர் காலத்தில், உணவு பஞ்சம் போல், விறகு பஞ்சம் ஏற்பட்டது. உணவு சமைப்பதறகாக வெளி நாட்டில் இருந்து கருவேல மரத்தை இறக்குமதி செய்ததால், இந்த கருவேல மரத்திற்கு "சீமை கருவேலம்' என்ற பெயர் உண்டு.
இந்த மரத்தால், நிலத்தில் உள்ள சத்துக்கள் உறிஞ்சபடுவதால், நிலம் கெட்டு விடுகிறது. தூரத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து கொள்வதால், விளை நிலங்கள் பாதிக்கிறது. நிலத்தின் சத்துக்களையும் உறிஞ்சுகிறது. இந்த கருவேல மரத்தால், விவசாய நிலத்தில் "காஸ்' உருவாகி "அசிட்டிக்' சேருகிறது. இதனால் நிலம் மாசுபடுகிறது. தற்போது தொழிற்சாலை, வீடுகளில் "காஸ்' பயன்படுத்துவதால், விறகு தேவையில்லை. இதை வேறுடன் பிடுங்கி விட்டால், முற்றிலும் அழித்து விடலாம்.

ஏலம் விடுவதில் தான் ஆர்வம்
கார்த்திக் (கல்லூரி மாணவர், நரிக்குடி): விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலுமே, கருவேல மரங்கள் உள்ளன. வரத்துக் கால்வாய்களிலும் அதிக அளவில் அடர்ந்துள்ளதால், மழை பெய்தாலும், தண்ணீர் ஓடி வருவதில்லை.
இதனால், பயிர்களுக்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.இது தொடர்பான தடுப்பு நடவடிக்கை அதிகாரிகளிடம் இல்லை.
கண்மாய்களில் இது போன்ற மரங்களை வெட்டி ஏலம் விடுவதில்தான், அதிகாரிகளிடம் ஆர்வம் உள்ளது.
அதை முழுமையாக அகற்ற, எந்த நடவடிக்கையும் இல்லை.

அதிகாரிகளிடம் இல்லை அக்கறை
முருகன் (ராஜபாளையம்): பிரண்டைகுளம், புளியங்குளம் கண்மாய் வறண்டு உள்ளதால், கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன.
விவசாய பகுதிகள், வறண்ட கண்மாய்களில் இந்த வகை மரங்கள் தானாக வளர்கின்றன.
இதனால், ஒரு கண்மாயில் இருந்து மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. ஷட்டர் அருகே மரங்கள் வளர்வதால், வலுவிழந்து போகும் நிலை உள்ளது. கண்மாய்களை பராமரிக்கும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், கருவேல மரங்களை அகற்றுவதில், அக்கறை கொள்வதில்லை .

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X