ஆந்திராவில் தீவிரமடையும் தெலுங்கானா எதிர்ப்பு : ராயலசீமா பகுதியில் 30,000 மின் ஊழியர்கள் "ஸ்டிரைக்'

Added : செப் 12, 2013
Advertisement

திருப்பதி: ஆந்திர மாநிலம், ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மின் ஊழியர்கள், நேற்று நள்ளிரவு முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளனர். "தனித் தெலுங்கானா அறிவிப்பை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும்' என, ராயலசீமா பகுதி, மின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ராயலசீமா பகுதியில், கடப்பா, சித்தூர், பிரகாசம், அனந்தபுரம், கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. வேலை நிறுத்தத்தில், ராயலசீமாவின், 30 ஆயிரம் மின் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இப்பகுதியில், நாளொன்றுக்கு, 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவை; ஆனால், தினசரி, 6,000 மெகா வாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பாக்கியுள்ள மின்சாரத்தை, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வாங்கி, பற்றாக்குறையை சமாளித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், ஒட்டு மொத்த மின் ஊழியர்களும், போராட்டத்தில் குதிப்பதால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இதை எப்படி சமாளிப்பது என்பது புரியாமல், ஆந்திர மாநில அரசு, திகைத்து போய் உள்ளது. மின் ஊழியர்களின் போராட்டத்தால், அனைத்து மாவட்டங்களிலும், மின் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும்; மின் வினியோகம் தடைபடுவதால், மின்சார ரயில்கள் இயங்காது என்றும், மின் ஊழியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன. மின் ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட "சிம் கார்டு'களை நேற்று மாலை, 5:00 மணியளவில், அரசிடம் ஒப்படைத்தனர்.

தேவஸ்தானம் சமாதான முயற்சி தோல்வி : "திருமலைக்கு செல்லும் எந்த வாகனத்தையும், 13ம் தேதி நள்ளிரவு முதல், 15ம் தேதி நள்ளிரவு வரை அனுமதிக்க முடியாது' என, தெலுங்கானா எதிர்ப்புக் குழுவினர், நேற்று முன்தினம் அறிவித்தனர். இதையடுத்து, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, செயல் இணை அதிகாரி மற்றும் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி ஆகியோர், திருப்பதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மகேஸ்வர ராவை சந்தித்துப் பேசினர். அப்போது, "திருமலைக்கு வரும் பக்தர்களை தடுக்க வேண்டாம்' என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், "தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதை எதிர்த்து நடைபெறும், உச்சக்கட்ட போராட்டம் என்பதால், கோரிக்கையை ஏற்க முடியாது' என, அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மறுத்து விட்டார். மேலும், "மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், முக்கிய அரசு அலுவலகங்களை இயக்க உதவ வேண்டும்' என்ற ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் வேண்டுகோளையும், போராட்டக் குழுவினர் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், திருப்பதி வழியாக செல்லும், நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதிக்கு வராமல், ரேணிகுண்டாவில் நேரடியாகச் சென்று விடுகிறது. ரயில்வேயின் இந்த அதிரடி முடிவால், இந்த ரயிலில் பயணிக்கும் பக்தர்கள், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து, ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, பதில் அளிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X