அமெரிக்கன் கல்லூரியில் மாணவருக்கு நிகராக மரங்கள்: மதுரையின் பாரம்பரிய பெருமைகளில் ஒன்று அமெரிக்கன் கல்லூரி. சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டு, கல்விக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுபோல, சுற்றுச்சூழலை காப்பதிலும் தனித்துவம் பெற்று விளங்குகிறது. வளாகத்தில், குளிர்சோலைக்குள் நுழைவதைப் போல நிழல்தரும் மரங்கள் அடர்ந்துள்ளன. இதற்காகவே கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் எண்ணிக்கைக்கு நிகராக மரங்களையும் வளர்த்து வருகிறது. இங்கு 70க்கும் மேற்பட்ட வகைகளில், 1200க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன என்றால் அதை உணரலாம்.
நம்நாட்டு மரங்களான வேம்பு, புளி, கொன்றை என பலவகை மரங்கள் இருந்தாலும், "தமிழகத்திலேயே இங்கு மட்டும்' என்று சொல்லக்கூடிய அளவில், "அடல் சோனியா' என்னும் தென்னாப்பிரிக்க வகை மரங்கள் 3 உள்ளன. இதன் தமிழ்ப்பெயர் "பாப்பாரப்புளி' என்னும் யானைக்கால் மரம். யானையின் அளவிற்கு உடலும், 40 அடி உயரம் வரை வளரும் தன்மையும் கொண்டது. அதிக நீர்நிறைந்த பகுதியில் மட்டும் வளரும் இம்மரம், அமெரிக்கன் கல்லூரி வளாகத்திலும் நிற்பதால், இங்கு நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இம்மரம் விளங்குகிறது.
முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறியதாவது: கல்லூரி அமைந்துள்ள கோரிப்பாளையம் பகுதியில் வழிந்தோடும் மழைநீருடன், கல்லூரி வளாகத்தில் பெறும் மழைநீரையும் மத்தியில் உள்ள குட்டையில் சேமிக்கிறோம். இதற்கெனவே கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை வளாகத்தில் மேடு, பள்ளங்கள் எங்கெங்கு உள்ளன என ஆய்வு செய்து, அதன்படி வழிந்தோடும் நீரை குட்டையில் தேக்க ஏற்பாடு செய்துள்ளோம். மரங்களை பாதுகாப்பது சவாலானது. எனவே அதை தவமாக கருதி செயல்படுத்துகிறோம். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் இங்குள்ள மரங்களை நம்பி, பறவைகள், சிறுபூச்சிகள், வண்டுகள் என பலவும் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றன. அவற்றை நாங்கள் யாரும் தொந்தரவு செய்வதில்லை. மேலும் இங்கு "பட்டாம் பூச்சி பார்க்' அமைக்க உள்ளோம். அங்கு, பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையில், கிராமங்களில் காணப்படும் தாத்தாப்பூ, தூம்பைப்பூ, இட்லிப்பூ, லேண்டானா கமேரா போன்ற பூக்கள் வளர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மரம் வளர்த்தால் மாசில்லை:
ராமச்சந்திரன், வக்கீல், கிருஷ்ணாபுரம் காலனி: ஒரு வாகனம், ஒரு ஆண்டிற்கு வெளிப்படுத்தும், கார்பன்டை ஆக்சைடைகிரகிப்பதற்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள மரங்கள் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் ஒரு மரம்வெட்டினால், ஒரு மரத்தை வளர்க்க முயற்சி செய்தால், காற்று மாசடைவதை தவிர்க்கலாம். மழை பெய்வது என்பது அரிதாகிவிட்ட இக் காலத்தில், மழை நீரை வீணாக்காமல், ஒவ்வொரு வீட்டிலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், மழை நீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்திட வேண்டும். குளியலறை கழிவுநீரை வீட்டு தோட்டங்களில் செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம். வைகை ஆற்றில் கழிவு நீர், குப்பைகள் கொட்டுவதை தடை செய்து, கரையோரங்களில்மரங்களை நட்டு பராமரிக்கலாம்.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது சுற்றுபுறத்தை எந்த அளவிற்கு மாசுபடுத்தும் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தலாம். தூய்மையாக உள்ள வார்டுகளுக்கு, மாநகராட்சி சார்பில் சிறப்பு பரிசு வழங்கி ஊக்குவிக்கலாம்.
தனிநபர் நினைத்தாலே முடியும்:
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில் நாம் பயன்படுத்தும் பாலீதீன் பைகள் பெரும் பங்காற்றுகின்றன. இப்பைகள் கையாள எளிதாக இருப்பதால், வர்த்தக நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை. கடைக்காரர்கள் வியாபாரத்தை மட்டும் பார்க்காமல், பொது நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். துணிப்பையுடன் வருவோருக்கு மட்டும் பொருட்களை வழங்க வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் மதுரை அண்ணாநகர் சின்மயானந்தம்.
அவர் கூறியதாவது: லட்சுமி பிராய்லர்ஸ் கோழிக்கறி கடை நடத்தி வருகிறேன். பாத்திரம் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்த, ஒரு கிலோ இறைச்சி வாங்கினால், நான்கு முட்டை வழங்குகிறேன். பாத்திரம் கொண்டு வராதவர்களுக்கு, துணிப்பையை கொடுக்கிறேன். துணிப்பை வேண்டாம் என கூறுவோருக்கு, ஒரு முட்டை வழங்குவேன். எந்த காரணம் கொண்டும் பாலிதீன் பை கொடுக்க மாட்டேன். இதனால் தற்போது என் வாடிக்கையாளர்களில் 75 சதவீதம் பேர், பாத்திரம் கொண்டு வந்து கறி வாங்கி செல்கின்றனர். என்னால், மாதத்திற்கு 5 கிலோ பாலிதீன் பை, குப்பையாக சேருவது தவிர்க்கப்படுகிறது என்றார். தொடர்புக்கு: 98931 8424.
காற்றில் கலக்கும் கரும்புகை:
வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன் நச்சுகரும்புகையினால் காற்று எந்த அளவிற்கு மாசடைகிறது என வாகன ஓட்டிகள் அறிவார்களா?
வாகனத்தை எப்.சி எடுக்கவும், பெயர் மாற்றம் செய்யவும் செல்லும் போது மட்டும் வாகன புகையை சோதிக்க வரும், வாகன உரிமையாளர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை சோதனை செய்தால், காற்றை காப்பாற்றலாம் என்கிறார், மதுரை வாகன புகை சோதனையாளர் கோபால கிருஷ்ணன். பெட்ரோல் நன்றாக எரிந்து புகை வந்தால் கார்பன் குறைந்தளவே வெளியேறும். லாரியில் மண்ணெண்ணெய் ஊற்றி ஓட்டுகின்றனர். இதனால் புகை அதிகம் வெளியேறாது, ஆனால் கண்ணுக்கு தெரியாத அளவில் நச்சு புகை சுவாசிக்கும் காற்றில் கலந்து உடலுக்கு பெரிய பாதிப்பை எற்படுத்தும். ஊட்டி,கொடைக்கானல், கேரளா, திருப்பதி செல்லும் வாகனத்தில் நச்சு புகை சோதனை செய்த பின்னே நகருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். மதுரையில், பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE