அன்னூர்:அன்னூர் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக, ஐந்து ஆண்டு பணிபுரிந்த அ.தி.மு.க., பெண் பிரமுகர், பதவியிருந்த, "பந்தா' இல்லாமல், டீக்கடை நடத்தி வருகிறார்.
கோவை மாவட்டம், அ.மேட்டுப்பாளையத்தில் வசிக்கும், சுப்பிரமணியம் மனைவி சித்ரா, 35; அ.தி.மு.க., பிரமுகர். இவர், 2001ல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், அ.மேட்டுப்பாளையத்தில் வெற்றி பெற்றார்.பின், ஒன்றிய சேர்மன் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, மொத்தமுள்ள, 15 கவுன்சிலர்களில், ஒன்பது ஓட்டு பெற்று, சேர்மன் ஆனார். 2001 முதல், 2006 வரை, 21 ஊராட்சிகளும், 189 கிராமங்களும் அடங்கிய அன்னூர் ஒன்றியத்திற்கு, சேர்மனாக பணியாற்றினார்.அப்போது, அ.தி.மு.க., ஆட்சியும் இருந்ததால், பல வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன. பிறகு இவருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. கணவர், கிராமத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். மகன் மற்றும் மகள், உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
கணவரின் வருமானத்தில், குடும்பம் நடத்த முடியாமல், அன்னூர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், புதிய தாலுகா அலுவலகம் துவக்கப்பட்டவுடன், வாசல் அருகே, ஓலை குடிசை அமைத்து, டீக்கடை துவக்கினார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்த தீ விபத்தில், குடிசை எரிந்து நாசமானது. தற்போது, இரும்பு பெட்டியில், டீக்கடை நடத்தி வருகிறார். கடையில் இவரும், கணவரும் மட்டும் வேலை செய்கின்றனர்.ஒன்றிய சேர்மனாக, ஐந்து ஆண்டு பணியாற்றிய மிடுக்கு, கொஞ்சம் கூட இல்லாமல், அருகில் உள்ள கடைகளுக்கும், டீ கொண்டு போய் கொடுத்து வருகிறார்.""தினமும், 300 ரூபாய் மிச்சமாகிறது; எட்டு மணி நேரம் தான் வேலை,'' என, மகிழ்ச்சியாக சொல்கிறார், "மாஜி' சேர்மன் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE