ஆட்சி இருந்தால் அனைத்தும் நமதே என்று, ஆளும் தரப்பு நினைக்கிறது. இதில் மலை, மணல், ஆறு, மரம், மக்களின் வரி, கஜானா எல்லாமே அடக்கம். மக்களின் பணத்தை எப்படி மடக்கலாம்; வந்த பின், அதிலிருந்து எவ்வளவு எடுக்கலாம் என்று, நினைக்கும் அளவுக்கு, நம் ஜனநாயகம் வளர்ந்திருக்கிறது.
மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அரசியல் தொடர்புடைய வியாபாரிகள் மீது, இதுவரை என்ன கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நில அபகரிப்பு வழக்குகளில், தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் எத்தனை பேர்? அரசியல் தொடர்புகள், பலரை எல்லாக் குற்றங்களிலிருந்தும் காப்பாற்றி விடுகிறது.வங்கிக் கணக்கில், 1 லட்சம் ரூபாய் மட்டும் வைத்திருந்த ராபர்ட் வாத்ராவுக்குச் சொந்தமான, "ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டீஸ்' டில்லி அருகே, ஹிகோபூர் என்ற இடத்தில், அரசுக்குச் சொந்தமான மனையை வாங்க, 7.95 கோடி ரூபாய்க்கு, "செக்' வழங்கியது. விரைவில் மனை, 58 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆதாயம் சுளையாக, 50 கோடி; அதாவது, தரகராகக் காட்டிக் கொள்ளாத மேலிடத்து நபர், நில விற்பனையை முடித்துக் கொடுக்க, 50 கோடி ரூபாய் பெறுகிறார். இந்த நிலையில், மனை மாற்றம் செய்தது தவறு என்று, பத்திரத்தை ரத்து செய்கிறார் பதிவுத் துறைத் தலைவரான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி.
பணமில்லாத கணக்கிலிருந்து, 8 கோடி ரூபாய், "செக்'கொடுத்து, வெகு விரைவில், 50 கோடி ரூபாய் ஆதாயம் பெற்ற மேலிடத்து நபர் ராபர்ட் வாத்ரா, பிரியங்காவின் கணவர், சோனியாவின் மாப்பிள்ளை. இவர் வேறு என்ன தகிடுதத்தங்கள் செய்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இப்போதைக்குத் தெரியவந்துள்ள இதை, மூடி மறைக்க, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்களும், மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும், அரியானா அரசின் அதிகாரிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
நில கிரய விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளப் போகிறார் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா என்பதை, மோப்பம் பிடித்த அரியானா அரசு, இரவோடு இரவாக, அவருக்கு மாற்றல் உத்தரவை வீட்டில் தருகிறது. மாற்றல் உத்தரவு பிறப்பித்த அரசாங்கம், அசோக் கெம்காவைப் பார்த்துக் கேட்கிறது. "மாற்றப்பட்ட பின், இந்த மனை மாற்ற விஷயத்தில், ஏன் மூக்கை நுழைத்தீர்கள்! நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டாம் என்று தானே, உங்களை மாற்றினோம். அதன்பின், நீங்கள் எப்படிக் கோப்புகளில் கையெழுத்து போடலாம்?' இவ்வாறு கேள்வியை ஒளிவு மறைவாகக் கேட்டவர்கள், அரியானா மாநில காங்., ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக உள்ள மூத்த அதிகாரிகளும்.இதே கேள்வியை, மக்கள் மத்தியில் கேட்டவர்கள், இரண்டு பிரபல தொலைக்காட்சி விவாதக்காரர்கள். ஒருவர் ராகுல் கன்வால், ராகுல் என்றிருப்பதால், பாவம் அவர், தன்னை ராகுல் என்றே நினைத்துக் கொண்டார். உதட்டை இறுக்கிச் சொற்களைக் கடித்துத் துப்பும் கரண் தாப்பரும், நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி வக்கீல் குறுக்குக் கேள்விகள் கேட்டது போலவே, அசோக் கெம்காவை மடக்கினார். பல சட்ட ஓட்டை நுணுக்கங்களை, சட்ட மீறல் சமாதானங்களைத் திரும்பத் திரும்ப கூறினார்.
கெம்காவை அவர் பேச விடவில்லை.சோனியாவோ, ராகுலோ, ராபர்ட் வாத்ராவோ கெம்காவை, இப்படிக் கேள்விகளால் துளைத்திருக்க மாட்டார்கள். வக்கீல்கள், கட்சிக்காரர்களை விட கெட்டிக் காரர்கள். ராகுல் கன்வாலும், கரண் தாப்பரும் கறுப்பு அங்கி அணியாத காங்கிரஸ் கட்சி வக்கீல்களாகவே நடந்து கொண்டனர்.ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக, நிதானமாக பதில் கூறினார் அசோக் கெம்கா என்ற, அரியானா ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இப்படியும் சில அதிகாரிகள் இருப்பதனால் தான், மக்களிடம் கொஞ்சம் பணமும், நிம்மதியும் மிஞ்சுகிறது என்று நினைக்க வேண்டியிருக்கிறது."மாற்றல் உத்தரவைப் பெற்றதால், கோப்புகளையெல்லாம் போட்டது போட்டபடி, வெளியேறிவிட வேண்டுமென்று சட்டம் கூறவில்லை; மாற்று நபர் பொறுப்பேற்கும் வரை, அந்தத் துறையின் அதிகாரம் என் வசமே. எனவே, எனக்கு நியாயம் என்று பட்டதால், மனை மாற்றக் கிரயப்பத்திரத்தை ரத்து செய்தேன். கையிருப்பு, ஒரு லட்சம் ரூபாய். செக், 7.95 கோடி ரூபாய்க்கு, அது மாற்றப்படவில்லை. அதற்கிடையே நிலத்தை வாங்குபவரிடமிருந்து பெறும் தொகை, 58 கோடி ரூபாய்; எங்கோ, ஏதோ இடிக்கிறது என்பதால், கிரயப் பத்திரத்தைப் பத்திரப்பதிவுத் துறைத் தலைவர் என்ற முறையில் ரத்து செய்தேன்' என்றார் கெம்கா.
வாத்ராவோ, அவர் மனைவியோ, மாமியாரோ இன்னமும் இதற்கு பதில் கூறவில்லையே ஏன்? செய்தது தில்லுமுல்லு. அது வழக்குமன்றத்தில் நிற்காது. எவ்வளவு பெரிய தொகை கொடுத்தாவது, பெரிய வக்கீலையும் இவர்கள் நியமித்துக் கொள்ளலாமே.மடக்கி மடக்கிக் கேள்விகள் கேட்ட ராகுல் கன்வால், "இந்த நேரத்தில், நீங்கள் இதைக் கிளப்பியது தேர்தல் கால கட்டத்தில், காங்கிரசின் பெருமையைக் குலைப்பதற்கா?' என்றே, திரும்ப திரும்பக் கேட்டார். அலட்டிக் கொள்ளாமல் கெம்கா, "என் அறிக்கை பத்திரமான, மாற்றப்பட முடியாத ஆவணமாக இருப்பதற்காக, இன்டர்நெட்டில், மே மாதமே போட்டு விட்டேன்; இப்போது அல்ல. அப்போது கவனிக்காத சில பத்திரிகைகள், இதை, இப்போது வெளியிட்டிருக்கின்றன. அவ்வளவு தான்' என்றார்.காங்கிரஸ் அபிமானம் அப்பட்டமாகத் தெரியவரும்படி, ராகுல் கன்வால் கேட்டார், "நீங்கள், பா.ஜ., கையாளா?' அசோக் கெம்கா இடத்தில் வேறு யாரும் இருந்தால், "நீங்கள், காங்கிரஸ் கட்சியின் கையாளா?' என்று கேட்டிருப்பார்.
நிதானம் இழக்காமல் பொறுமையாக, "அப்படியல்ல, என் மனதுக்கு நியாயம் என்று, பட்டதையே செய்தேன். எனக்கு அச்சுறுத்தல் வந்த போதிலும், கொள்கையில் உறுதியாக நிற்பேன்' என்றார்.ராபர்ட் வாத்ரா இந்த பேரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலும், நிஜப் பங்குதாரர் அல்லது நிழல் பங்குதாரர். இது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் தெரிந்திருக்கிறது. அசோக் கெம்காவை, பேட்டிக்கு அழைத்து, அவரது நேர்மைக்கு உள் அர்த்தம் கற்பிக்கும் தொலைக்காட்சி சேனல்கள், ஏன் சோனியாவையும், ராபர்ட் வாத்ராவையும் பேட்டி காணவில்லை?ஊழல் வரலாற்றின் புதிய போக்கு, ஒத்துவரும் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொள்வது, ஒத்துவராத அதிகாரிகளை எப்படியாவது தண்டித்து, அவர்களுக்கு மன உளைச்சல் கொடுப்பது என்றாகி விட்டது.இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்ற போது, "தனி நபர் பற்றி என்ன விசாரணை' என்று கேட்டு, விவகாரத்தை அப்படியே அமுக்கி விட்டார் நிதி அமைச்சர் சிதம்பரம். வாத்ராவைப் பொறுத்தவரை, இப்போதைக்குத் தெரியவந்துள்ளது இந்த ஒரு ஊழல் தான். அசோக் கெம்கா வளைந்து கொடுத்திருந்தால், இதுவும் வெளியே தெரியவந்திருக்காது.ஆட்சி மாறினால், இவர்களது ஊழல்கள் மேலும், எவ்வளவு வெளிவருமோ தெரியாது. ஆட்சி மாறாது என்ற திடமான நம்பிக்கை, சோனியாவுக்கு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவில்லை. பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வில் சொல்ல முடியாத அளவுக்குப் பெருந்தலைவர்களின் உரசல். கட்சி அபிமானத்தை மீறிய செல்வாக்கு உதவினால் ஒழிய, மோடி பிரதமராவார் என்று கூற முடியாது.
விவரமறிந்தவர்களின் பக்கம் இருப்பதில்லை வெற்றி. இலவசங்களுக்கு மயங்கும் பெருவாரியான மக்கள் கைகளில் இருக்கிறது வெற்றி. காங்கிரஸ் கட்சிக்கு இது நன்றாகத் தெரியும். எனவே, எல்லாருக்கும், உணவு என்ற சாப்பாட்டுத் திட்டத்தின் மூலம், வெற்றிப் பெறத் துடிக்கிறது. மக்கள் தானியங்களைச் சாப்பிடட்டும், தாம் பணமாகச் சாப்பிடலாம் என்று ஆள்பவர்கள் நினைப்பதுவே இங்கே ஜனநாயகம். இன்னும், 10 ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக நாட்டையே இழந்து விடுவோமோ என்ற அச்சம், பலருக்கு இருக்கிறது. அவர்கள் அதைக் கூறவும் அச்சப்படுகின்றனர். இங்கே இப்போது அச்சமே மிச்சம்.
email: hindunatarajan@hotmail.com
ஆர்.நடராஜன் -
கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்