"மனிதர்களை விட மரங்களிடமே பேசுகிறேன்': லட்சம் மரங்களை உருவாக்கிய லட்சிய நாயகர்| Dinamalar

"மனிதர்களை விட மரங்களிடமே பேசுகிறேன்': லட்சம் மரங்களை உருவாக்கிய லட்சிய நாயகர்

Added : செப் 17, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
"மனிதர்களை விட மரங்களிடமே பேசுகிறேன்': லட்சம் மரங்களை உருவாக்கிய லட்சிய நாயகர்

"மனிதர்களிடம் பேசினால் விவகாரம் தான். மரங்களிடம் பேசினால் தீமைகளை உள்வாங்கி நல்லவற்றை நமக்கு மேலே உள்ள இறைவனிடம் அனுப்புகின்றன,'' என்பதை சித்தாந்தமாக கொண்டு செயல்படுகிறார் மதுரை மாட்டுத்தாவணி வனத்துறை நர்சரி வனக்காவலர் பாண்டியன்.


வனத்துறைக்கு அரசு ஒதுக்கி, முள்புதராக இருந்த ஒரு ஏக்கரை 1999 ல் பண்படுத்தி இங்கு நர்சரி உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து, ஆண்டு தோறும் குறைந்தது 20 ஆயிரம் கன்றுகள் என கடந்த 14 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை உருவாக்கியுள்ளார்.


பாண்டியன் சொல்கிறார்...: முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி மண்டல வனபாதுகாவலர் முகமது இக்ரம்ஷா, மாவட்ட வனஅதிகாரி மாரிமுத்து, வனச்சரகர் நாகூர்மீரான் ஆகியோர் மேற்பார்வையில், மாவட்டம் முழுதும் ஆண்டுதோறும் 20 வகைக்கும் மேற்பட்ட, 22 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு தோறும் 40 ஆயிரம் மரக்கன்றுகளை உருவாக்குகிறோம். நகரமயமாதல், காடுகள் அழிப்பு, ரோடுகள் விரிவாக்கம் போன்றவற்றால் பல மரவகைகள் அழிந்து விட்டன. அந்த மரங்களின் விதைகளை தேடி கொண்டு வந்து இங்கு நாற்றுகள், கன்றுகள் என "கண்ணுக்கு கண்ணாக' பார்த்து வளர்க்கிறோம். அவற்றை வளர்க்க விரும்புவோருக்கு வழங்குகிறோம்.


அரிய மரவகைகள்: மீனாட்சி அம்மன் நீர்க்கடும்பு மரங்கள் நிறைந்த கடம்பவனத்தில் மீனாட்சியம்மன் தோன்றியதாக ஐதீகம். கடம்பவனம் இப்போது அழிந்து விட்டது. மதுரை நகரில் ரேஸ்கோர்ஸ் நீதிபதிகள் குடியிருப்பு, மீனாட்சியம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற இடங்களில் மட்டுமே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு இம்மரங்கள் உள்ளன. இந்த மரம் காற்றில் ஆக்ஸிஜனை அதிகஅளவில் வெளியிட்டு சுற்றுச்சூழலை தூய்மையாக்கும். அரிய மருத்துவ குணம் உடைய மரங்களை மீண்டும் உருவாக்க விதைகளை சேகரித்தேன். கடந்த 13 ஆண்டுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்க்கடும்பு மரக்கன்றுகள், இங்கிருந்து வெளி ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை அங்கு விதைகளை உற்பத்தி செய்யும் அளவிற்கு, பெருமரங்களாகி விட்டன.


இதே போல சிவபெருமானுக்கு உகந்த வன்னிமரம், நாகலிங்கம், வில்வம், மற்றும் விளாம்பழ மரக்கன்றுகளை உருவாக்கி வழங்கி வருகிறோம். ஆல், அரச மரங்கள் இல்லாத ஊர் பாழ் என்பர். இம்மரங்கள் தற்போது அரிதாகி விட்டன. இம்மரத்தின் விதைகள் கடுகளவே இருக்கும். 30 ஆண்டுக்கும் மேலான மரங்களில் இருந்து விதைகளை தேர்வு செய்தால் தான் மரம் வளரும். இப்படி சேகரித்து 10 ஆயிரம் ஆல, அரச மரக்கன்றுகளை உருவாக்கியுள்ளோம்.


நான்கு வழிச்சாலைகளில் ஆல, அரச, இலுப்பை, மருது, ஏழிலைபாலை, புங்கன், வேம்பு, போன்ற மரங்களை வளர்த்தால் ஆக்ஸிஜன் அதிகம் வெளியாகும். இவ்வாறு கூறினார்.


மரம் நடும் ஆலோசனை பெற: 97902 94606.


அரிய விதைகளை கொண்டு வந்தது எப்படி?: அரிய மரக்கன்றுகளை உருவாக்கிய விதம் குறித்து வாட்சர் பாண்டியன் சொல்கிறார்: நான் எந்த ஊருக்கு சொந்தவிஷயமாக சென்றாலும், அங்குள்ள அரிய மரவகைகளை தேடுவேன். எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும் ஏறி காய், பழங்களை பறித்து விதை சேகரிப்பேன். சபரிமலை சென்றேன். அங்கிருந்து ருத்திராட்ச விதைகளையும்,தேக்கடியில் இருந்து பிள்ளமருதையும் கொண்டு வந்து ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை உருவாக்கினேன். வீட்டில் சாப்பிடும் பழவகைளின் கொட்டைகளை கூட, குப்பையில் போடுவதில்லை. அவற்றையும் நட்டு கன்றுகளை உருவாக்குகிறோம், என்றார்.


பிளாஸ்டிக் இல்லாத வளாகம்: மதுரை பாத்திமா கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் லில்லி குட்டி: எங்கள் கல்லூரியில் 2002ல் "ஈகோ கிளப்' ஆரம்பித்தோம். 190 மாணவிகள் இணைந்துள்ளனர். மாதம் இருமுறை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறோம். மரங்கள் நடுவது, வளாகத்தை சுத்தம் செய்வது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். கல்லூரியில் கடந்தாண்டை சுற்றுச்சூழல் ஆண்டாக அறிவித்தோம். மாணவிகளை "மதுரை க்ரீன்' அமைப்புடன் இணைந்து நடை பயணத்திற்கு அழைத்துச் சென்றோம். உள்நாட்டு மரங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, இங்கு வளரும் மரங்களை வகைப்படுத்தி தெரிவிக்கிறோம். முடிந்தளவு "பிளாஸ்டிக் இல்லாத' வளாகம் ஆக்க முயற்சி செய்து வருகிறோம். மரங்களில் இருந்து உதிரும் இலைகளை, இரண்டு பெரிய பள்ளங்களில் நிரப்பி உரமாக்குகிறோம். பிளாஸ்டிக் பாட்டில்கள், மற்ற கழிவுகளை தனியாக பிரிக்கிறோம். சுற்றுச்சூழலில் கண்ட இடங்களில் குப்பை கொட்டக் கூடாது என, மாணவிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம். வளாக சுத்தம் மட்டுமல்ல... வகுப்பறை சுத்தத்தையும் செயல்படுத்தி வருகிறோம். சுற்றுச்சூழல் மன்ற மாணவிகள் மட்டுமல்ல... அனைத்து மாணவிகளுமே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இணைந்து செயலாற் றுகின்றனர், என்றார்.


இலவசமாக மரக்கன்று வாங்கலாம்: வனத்துறை சார்பில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசுத்திட்டங்களின் கீழ் இலவசமாக பெற மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள, மாவட்ட வனஅலுவலர் அலுவலகத்தை(@பாலீஸ் டி.ஐ.ஜி., அலுவலகம் அருகில்) நேரில் அணுகவேண்டும். வீடுகளில் மரம் வளர்க்க விரும்புவோர், ஒருகன்று ரூ.40 என வாங்கலாம். குடியிருப்பு பகுதிகளில், இத்துறையினர் மரக்கன்றுகளை இலவசமாக நட்டுத்தருகின்றனர்.


தொடர்புக்கு: 0452-253 6279


மனிதனால் முடியுமா?: டாக்டர் ரேவதி ஜானகிராம் (மகப்பேறு நிபுணர், மதுரை): கடந்த மாத தினமலர் நாளிதழில், வடக்குவெளி வீதியில் வெட்டப்பட்ட மரம் ஒன்று வெளியானதைப் பார்த்தேன். பச்சை பசேலென்ற நெடிய மரத்தை வெட்டியிருந்ததைப் பார்த்ததும், கண்களில் கண்ணீர் முட்டியது. தினமும் அந்த வழியே செல்கையில், மரத்தை பார்த்து இதயம் கனத்தது. சில நாட்களுக்கு முன் அதை பார்த்தபோது, ஆச்சரியம்... விழிகளை விரிய வைத்தது. வெட்டிய மரத்தின் அடிப்பகுதியில் குட்டி, குட்டியாய் பசுந்தளிர்கள் துளிர்விட்டு இருந்தன. அப்போது மனதில் எழுந்தது, "அடேய் அற்ப மனிதா, உன்னை வெட்டி வீழ்த்தினால் மண்ணோடு மண்ணாகி விடுவாய். என்னைப் போல மீண்டும், நீ உயிர்த்தெழ முடியுமா? ஒன்றுக்கும் இயலாத மனிதனுக்கு, என்னை வெட்ட என்ன உரிமை உள்ளது' என கேட்பது போல, அத்துளிர்கள் காற்றில் அசைந்தாடின.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பீபீகுளம் உழவர் சந்தை: மதுரை பீபிகுளம் உழவர் சந்தை, 2000வது ஆண்டு துவங்கியது. ஒன்றரை ஏக்கர் பரப்பில் உள்ளது. 140 விவசாயிகள் காய்கறி வியாபாரம் செய்கின்றனர். தினமும் வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டும். 75 வகையான காய்கறிகள் விற்பனையாவது மூலம், தினமும் ரூ. 12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் நடக்கிறது.


இந்தளவு "பிசியான' சந்தையில் சுற்றுப்புறச் சூழல் காக்கப்படுவது சிறப்பம்சம். இதனை காப்பதில் இங்குள்ள 70க்கும் மேற்பட்ட வேம்பு, புங்கன், பூவரசு போன்ற ஆக்சிஜனை அதிகம் வெளிப்படுத்தும் மரங்களின் பங்கு அதிகம்.


மரங்களை ஊழியர்கள் அக்கறையுடன் பராமரிக்கின்றனர். காலிபிளவர், முட்டைக்கோஸ் இலைகள், காய்கறி கழிவுகளை வீணாக்காமல், கம்போஸ்ட் உரமாக தயாரிக்கின்றனர். இதற்கெனவே அங்கு தொட்டிகள் கட்டப்பட்டு உரம் தயாராகிறது. கிலோவுக்கு ரூ. 10 மதிப்புள்ள கம்போஸ்ட் உரம், விவசாயிகள் மற்றும் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது. பாலிதீன் கழிவுகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்கின்றனர். "பெட்' பாட்டில்களை அங்கு நுண்ணீர் பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர்.


உழவர் சந்தை விவசாய அதிகாரி கே.ஆறுமுகம் கூறுகையில், "" இங்கு 70க்கும் மேற்பட்ட மரங்களை பராமரிக்கிறோம். இதனால் நிழல், நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது'', என்றார். தொடர்புக்கு 98652-06528.


இவரைப்போன்று அரசு அலுவலக வளாகங்கள் பசுமை சூடினால், மதுரையில் மாசு எங்கே?
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X