மதுரை தெற்குவாசல் பாலத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்: இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு "ஈரடுக்கு பாலம்' | Dinamalar

மதுரை தெற்குவாசல் பாலத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்: இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு "ஈரடுக்கு பாலம்'

Added : செப் 17, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மதுரை தெற்குவாசல் பாலத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்: இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு "ஈரடுக்கு பாலம்'

மதுரை தெற்குவாசல் மேம்பாலத்தை, "தொலைநோக்கு' சிந்தனையுடன் அகலமாக கட்டுவதற்கு பதிலாக "சுயநோக்கு' சிந்தனையுடன் குறுகியதாக கட்டியதால், தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர்.
மதுரை தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே ரயில்வே வழித்தடம் உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 500 மீட்டர் நீளத்தில், 12 மீட்டர் அகலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்ட 1987ல் தி.மு.க., அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பாலத்திற்கான அடிப்படை ஆய்வுகளை நெடுஞ்சாலைத்துறை அரைகுறையாக மேற்கொண்டது. பாலம் அமையவுள்ள இருபுறமும் போதுமான அகலத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யாமல், பாலத்தில் நடைபாதைக்கான இடம் கூட விடாமல், வெறும் 12 மீட்டர் அகலத்தில் "ஒருவழித்தடம்' போல் பாலத்தை கட்டினர்.


அன்றே எச்சரித்தது "தினமலர்': "தொலைநோக்கு' சிந்தனை இல்லாமல் "சுயநோக்கு' சிந்தனையுடன் அவசர கதியில் கட்டப்பட்ட இப்பாலத்தை, 1989 ஆக.,11ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். பாலத்தின் எழில் கொஞ்சும் அழகை (?), தனது சகாக்கள் மாஜி சபாநாயகர் தமிழ்க்குடிமகன், மாஜி அமைச்சர்கள் துரைமுருகன், பொன்.முத்துராமலிங்கம் ஆகியோருடன் கருணாநிதி நடந்து சென்று பார்வையிட்டார். ""இந்த குறுகிய பாலத்தால், மதுரையில் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இப்பாலம் தொலைநோக்கு சிந்தனையில் கட்டப்படவில்லை,'' என்று மறுநாளே தினமலர்' செய்தி வெளியிட்டது. "நடப்பதற்காக ஒரு பாலமா' என்று கேள்வியும் எழுப்பியது. தினமலர் அப்படி எழுதியதை, அன்றைய அரசியல்வாதிகள் கிண்டல் செய்தனர். அன்று தினமலர் எழுதியது, இன்று உண்மையாகி விட்டது.


கண்கெட்ட பின்னே சூரிய துதி: இப்பாலம் அப்போதைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, எதிர்காலத்தில் ஏற்படும் வாகன பெருக்கத்தை கணக்கில் கொள்ளாமல் கட்டப்பட்டது. இப்போது வாகனங்கள் பெருகி விட்டன. விமான நிலையம் மற்றும் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக வரும் வாகனங்கள் நெரிசல் மிகுந்த இப்பாலத்தை கடந்து நகருக்குள் செல்ல, குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தேவைப்படுகிறது. மதுரையில். "எப்போதுமே நெரிசல் பாலம்' என்றால் இதுதான்.


எம்.எல்.ஏ., பேசினாரா: இந்த குறுகிய பாலத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, சட்டசபையில் பேசியிருக்கிறீர்களா என்று தொகுதி எம்.எல்.ஏ., அண்ணாதுரையிடம் (மார்க்சிஸ்ட்) கேட்டபோது, "" சட்டசபையில் பேசினேன். பரிசீலிப்பதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார். நெடுஞ்சாலைத்துறைக்கும் கடிதம் எழுதினேன். பதிலில், மதுரை கோட்ட நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தலைமை பொறியாளர் அருணாசலத்துடன் பாலத்தை ஆய்வு செய்தோம். "ஈரடுக்கு பாலம்' கட்ட கோரிக்கை விடுத்துள்ளேன். அதுவரை, இப்பாலத்தை ஒருவழித்தடமாக மாற்ற யோசனை தெரிவித்துள்ளேன்,'' என்றார்.


தீர்வு என்ன?: இனி இந்த பாலத்தை அகலப்படுத்த முடியாது. ஏராளமான கட்டடங்கள் உள்ளன. நிலஆர்ஜிதம் செய்வது இயலாதது. குறுகலான திருநெல்வேலி ஜங்ஷனில் ஈரடுக்கு பாலம் கட்டியதால் நெரிசல் குறைந்தது. அதுபோல் இங்கும் ஈரடுக்குப்பாலம் கட்டினால் நெரிசலுக்கு நிரந்த தீர்வு ஏற்படும்.


இன்னொரு பாலம் கட்டப்போறாங்க!: நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கணேசன், ""இப்பாலத்தை அகலமாக கட்ட இடமில்லை. இதனால், குறுகிய பாலமாக அப்போது கட்டினர். தவிட்டுச்சந்தை - மகாளிபட்டி வழியாக புதிய பாலம் கட்ட வரைபடம் தயாராகி வருகிறது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் பாலப்பணிகள் நடக்கும். அதுவரை, தெற்குவாசல் பாலம் ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்,'' என்றார்.


நெடுஞ்சாலைத்துறையினருக்கு ஒரு வேண்டுகோள்: தவிட்டுச்சந்தை - மகாளிபட்டி பாலத்தையாவது மதுரையின் எதிர்கால போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அகலமாக கட்டுங்கள். 2030 ம் ஆண்டில், எப்படி வாகனங்கள் பெருகும் என்று இப்போதே திட்டமிட்டு, வரைபடம் தயாரிப்பார்களா புத்திசாலி அதிகாரிகள்?


ஆங்கிலேயரின் தொலைநோக்கு நமக்கு எங்கே போயிற்று?: ஏற்கனவே கட்டப்பட்ட பாலம் ஒன்றை இடித்து, புதிதாக கட்ட வேண்டும் என்றால், அந்த பாலத்திற்கு குறைந்து 100 வயதாகி இருக்க வேண்டும். இது ஆங்கிலேயர் நிர்வாக முறை. அப்படி தொலைநோக்கு பார்வையில், 1880 ல் கட்டப்பட்டது தான் மதுரை ஏ.வி., பாலம். எப்படி அகலமாக, 133 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கு பார்வையில் கட்டியுள்ளார்கள் பாருங்கள்!


ஆங்கிலேயர்களின் மோசமான பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் நாம், இது போன்ற நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வது இல்லை. எனவே ஆட்சியாளர்களே...இனி நகரத்தில் பாலங்கள் கட்டினால், இரண்டு பக்கமும் சேர்த்து 10 அடி நடைபாதை, நான்கு டிராக் ரோடு என்று அகலமாக, எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு பாலம் கட்டுங்கள். குட்டி பாலங்கள் கட்டி, மக்களை வதைக்காதீர்.


என்னை விட்டால் ஆளில்லை: கணேசன், மினி பஸ் டிரைவர்: தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே மினி பஸ்சை தினமும் பத்து முறை ஓட்டுகிறேன். "கரணம் தப்பினால் மரணம்' என்பது இப்பாலத்தை கடக்கும்போது உணர்கிறேன். எனவே, மிகவும் கவனமுடன் செல்கிறேன். வேறு வழித்தடத்தில் பஸ் ஓட்டுகிறேன், என முதலாளியிடம் கூறினேன். அவர், உன்னை விட்டால் இப்பாலத்தில் பஸ் ஓட்ட ஆளில்லை, என கூறி விட்டார். விபத்து ஏற்பட்டு விடுமோ, என திக்...திக்... மன நிலையில் பஸ்சை ஓட்டுகிறேன்.


கடவுளை வேண்டுவேன்: உமாநாத், எலெக்ட்ரீஷியன், வில்லாபுரம்: இப்பாலம் வழியாக டவுனுக்கு தினமும் ஏழு முறை செல்கிறேன். பாலத்தின் மேல் தூண்கள் இணையும் இடத்தில் பாளம், பாளமாக வெடித் துள்ளது. இதில் பைக் ஏறி இறங்கும்போது முதுகுத்தண்டுவடம் நொறுங்குவது போல் வலி ஏற்படுகிது. இப்பாலத்தை கடக்கும் ஒவ்வொரு முறையும் கடவுளை வேண்டிக்கொள்வேன். அந்தளவிற்கு நெரிசல்.
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X