சென்னை: மருத்துவ சேவைகள் சரிவர கிடைக்காத பகுதிகளில், சேவையாற்றவும் மற்றும் விரும்பித் தேடப்படும் உலகளாவிய உடல் நல பராமரிப்பு வழங்குனராக உருவெடுக்கவும், 30 ஆயிரம் உடல் நல பரிசோதனை முகாம்களை நடத்த, சென்னையின், "அப்போலோ' மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனை, 30வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது பேசிய, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர், டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியதாவது: ஆசியாவின் முதன்மையான ஒருங்கிணைக்கப்பட்ட உடல் நல பராமரிப்பு சேவை வழங்குனராக, அப்போலோ மருத்துவமனை திகழ்கிறது. 120 நாடுகளிலிருந்து வந்திருந்த, 3.70 கோடி நோயாளிகளின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக, இது திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், மிதமான கட்டணத்தில், சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சையைப் பெற, உலகெங்கிலும் இருந்து, 50 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள், அப்போலோ மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நாட்டின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையான, அப்போலோ, சென்னையில் துவங்கப்பட்டதிலிருந்து நோய்களை குணமாக்குகிற, எமது சிறப்பான பயணம் துவங்கியது. உலகத்திலுள்ள மிகச்சிறந்த மருத்துவ சேவை நிறுவனங்களுக்கு நிகரான, சிறப்பான மருத்துவ சிகிச்சையை, பலரும் பயன்படுத்தக்கூடிய வகையில், மிதமான கட்டணத்தில் வழங்குகிறோம். தனிப்பட்ட முறையிலான சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்வதன் தேவையை, வரும் ஆண்டுகளில் அப்போலோ தீவிரமாக முன்னிலைப்படுத்தும். அடுத்த மூன்று ஆண்டுகளில், 2,500க்கும் அதிகமான மருத்துவமனை படுக்கை வசதிகள், நாங்கள் கூடுதலாக நிறுவ இருக்கிறோம். 30 ஆண்டுகள் நிறைவடைவதை, நினைவுகூறும் வகையில், தமிழகமெங்கும், 30 ஆயிரம் உடல் நல சோதனை முகாம்களை, அப்போலோ மருத்துவமனை நடத்தும். மக்கள் உடற்தகுதியுடனும், உடல்நலத்தோடும் வாழ்வதை ஊக்குவிக்க வேண்டுமென்ற இதன் லட்சியத்தை செயல்படுத்துவதாக இம்முயற்சி அமையும். இவ்வாறு, அவர் பேசினார்.
அப்போலோ குழுமத்தின் பங்களிப்பை, அங்கீகரித்து கவுரவிக்கும் வகையில், இந்திய அரசு, ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டது. மருத்துவ சிகிச்சையளிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு, இத்தகைய கவுரவம் வழங்கப்பட்டது இதுவே முதன் முறை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE