திருச்சி: ""தமிழருவி மணியன் முயற்சிக்கும், பா.ஜ., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., கூட்டணி அமைந்தால் நல்லது,'' என, பா.ஜ., கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
பா.ஜ., இளைஞர் அணி சார்பில், 26ம் தேதி திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாடு குறித்து, மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், திருச்சி தில்லை நகரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்றதும், தமிழக முக்கிய பிரமுகர்கள், அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் கூட, அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர். திருச்சி மாநாடு, எழுச்சியாக, திருப்புமுனையாக அமையும். தேசம் மீது விருப்பம், நன்மை குறித்து அக்கறைபடுபவர், மோடி வர வேண்டும் என விரும்புகின்றனர். தேசம் மீது அக்கறையில்லாத, தேச விரோதிகள், மோடி வருகையை எதிர்க்கின்றனர். யாருக்கு வேண்டுமானாலும், தங்கள் கட்சி சார்பாக பிரதமரை முன்னிறுத்தும் உரிமை உள்ளது. எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை. முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான்.
இதுவரை கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டணியில்லாமல் போட்டியிடுவோம் என்று நாங்கள் இறுமாப்பாக பேசவில்லை. மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதால், கூட்டணியை விரும்புகிறோம். யாருடன் என்பது போக போகத் தெரியும். தமிழருவி மணியன் நல்ல தேசியவாதி. தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதால், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ஜ., ஆகிய கட்சிகளை இணைக்க வேண்டும் என்று, சொந்த முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். வெற்றியடைந்தால் நல்லது. எங்கள் கட்சியில், பிரதமராக வர நிறைய பேர் உள்ளதால், இதில் யார் வருவார் என்ற சந்தேகம் இல்லாமல் இருக்க, மோடியை அறிவித்தனர். இவர் தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர். மோடி என்றால், லஞ்ச, லாவண்யம் இல்லாத, வளர்ச்சியடைந்த குஜராத் என்ற மாநிலம் தான் நினைவுக்கு வரும். பாரத தேசம் முழுவதும் அதை செய்ய மாட்டாரா என்ற ஆதங்கத்தால், அவரை முன்னிலைப்படுத்துகிறோம். இதில் தவறில்லை. இவ்வாறு கணேசன் கூறினார்.