தஞ்சாவூர்: தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மைசூரில் உள்ள அனைத்து மொழிகளில் கல்வெட்டுக்களையும் மின்தரவாக்கம் (டிஜிட்டலைஸ்) செய்து ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறையுடன் (ஏ.எஸ்.ஐ.,) தஞ்சை தமிழ் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்தியாவில் 1887 முதல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களின் படிகள் மத்திய தொல்லியல் துறையின் மைசூர் அலுவலகத்தில் உள்ளன. இவற்றுள் 1908ம் ஆண்டு வரை கண்டறியப்பட்ட வெளியிடப்பட்டுள்ளன. 1909ம் ஆண்டுக்கு பின் உள்ள கல்வெட்டுக்கள் வெளிவராத நிலையில் உள்ளன. இவற்றை ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மின்தரவாக்கம் செய்து கொள்வதற்கான முயற்சியை தமிழ் பல்கலை மேற்கொண்டது.
மைசூரில் உள்ள ஒரு லட்சம் கல்வெட்டில் 65 ஆயிரம் கல்வெட்டு தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுக்கள் இந்திய வரலாற்றை, குறிப்பாக தமிழகத்தின் தொன்மை வரலாற்றை எடுத்துரைக்கும் முதன்மை சான்றாகும். தமிழ் கல்வெட்டுக்கள் மட்டுமின்றி இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து மொழிக் கல்வெட்டுக்களையும் மின்தரவாக்கம் செய்யப்பட உள்ளன.
தமிழக முதல்வர் கருணாநிதி இப்பணிக்காக தமிழ் பல்கலைக்கு 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ள கல்வெட்டுப்படிகள் இனி தஞ்சை தமிழ் பல்கலையிலும் இடம் பெறவும், அவற்றை ஆய்வாளர் கணினி தொழில் நுட்ப வசதியுடன் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதி செய்யும்.
இந்தியாவில் கல்வெட்டுக்களின் கருவூலகமான அலுவலகம் சென்னையில் 1887ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இது 1911ம் ஆண்டு உதகமண்டலத்துக்கு மாற்றப்பட்டு, 1966ல் மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இக்கல்வெட்டுக்களை இந்தியாவில் முதன்முறையாக மின்தரவாக்கம் செய்யும் பணி இப்போதுதான் நடக்க உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் ராசேந்திரன், மைசூர் கல்வெட்டுப் பிரிவின் இயக்குனர் (பொறுப்பு) ரவிசங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர். தமிழ் பல்கலை பதிவாளர் சரவணன், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தலைவர் ஜெயகுமார், நீரகழாய்வு மைய இணைப்பேராசிரியர் ராஜவேலு, மத்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர்கள் நாகராசு, சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர். இத்தகவலை துணை வேந்தர் ராசேந்திரன் தெரிவித்தார்.