மாசில்லா மதுரை: மரங்கள் நகரங்களின் நுரையீரல்| Dinamalar

மாசில்லா மதுரை: மரங்கள் நகரங்களின் நுரையீரல்

Updated : செப் 24, 2013 | Added : செப் 24, 2013
Advertisement
மாசில்லா மதுரை: மரங்கள் நகரங்களின் நுரையீரல்

மனிதனின் நுரையீரலை போல,மரங்களும் காற்றில் கலந்துள்ள நச்சு தன்மையை தன்னுள் இழுத்து, நாம் சுவாசிக்க சுத்தமான காற்றை தருகிறது என்கிறார், தியாகராஜர் கல்லூரி தாவரவியல் துறை, பேராசிரியர் டி.கண்ணன்.
அவர் கூறியது: பெருநகரங்கள் அல்லாத சிறிய நகரங்களில் குப்பைகள்,வாகனபுகை மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் வெளிப்படும், கார்பன் டை ஆக்ஸைடின் சராசரி அளவு 0.9.இந்த அளவு மதுரையில் 0.31ம், சென்னையில் 0.91 ஆகவும் இருக்கிறது. இவ்வளவு நச்சு கலந்த காற்றைதான் நாம் சுவாசித்து கொண்டிருக்கிறோம்.
இந்த கார்பன் வெளியேற்றத்தால் 2000ம் ஆண்டு வரை, 25 சதவீதம் இருந்த புவியின் வெப்பம், இன்று 37 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நச்சு கார்பன்டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் சக்தி, மரங்களுக்கு மட்டும்தான் உண்டு. மரங்கள் ஒளி சேர்க்கை செய்யும்போது, கார்பன் டை ஆக்ஸைடை உள்ளே இழுத்து கொண்டு, சுத்தமான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. நன்றாக வளர்ந்து முதிர்ந்த, ஒரு மரம், ஓர் ஆண்டிற்கு 48 பவுண்டுகள் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளே இழுத்து விடுகிறது. மரங்கள், மண்ணிலிருந்து ஈரத்தை உறிஞ்சி, இலைகளின் துளைகள் வழியாக குளிர்ந்த காற்றை வெளியிடுவதால் வெயில் காலங்களில் வெப்ப காற்றும் குளிர் காற்றாக மாறி ஆரோக்கியத்தை தருகிறது. காய்,கனி,இலை என நம் கண்ணுக்கு தெரிந்த பயனை தரும் மரம், நம் கண்களுக்கு தெரியாத பலவித நன்மைகளை தருகிறது. மரங்கள் இருக்கும் இடத்தில் நுண்ணுயிரிகள் அதிகம் உற்பத்தியாகி மண்வளத்தையும் பெருக்குகிறது. இதை அறியாமல் மரங்களை வெட்டி அழித்து வருகிறோம். வெட்டிய மμங்கள் விறகாக எரிக்கப்படும்போது, தன்னுள் சேகரித்து வைத்த நச்சு கார்பனை வெளியிடுகிறது. இதனால், பூமியை சுற்றி கந்தக டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக் ஸைடு படலங்கள் படிந்து, பூமியை அதிக வெப்பமடைய செய்கிறது.
குறிப்பாக, நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியின் "பிரீசரில்' வெளிப்படும் குளோரோ, புளுரோ கார்பனும் பூமியில் வெப்பத்தின் அளவை பன்மடங்காக அதிகரிக்கிறது. இயற்கைக்கு நாம், ஒரு உதவி செய்தால் அது நமக்கு பல உதவிகளை செய்யும், என்பதை புரிந்து மரங்களை வளர்த்து வந்தால், மாசில்லா காற்றை சுவாசிக்கலாம்.
இவ்வாறு கூறினார்.


இலையெல்லாம் உரமே:

வீடோ, அலுவலகமோ மரம் வளர்த்தால் மட்டும் போதாது. அவற்றின் இலைகளை எரித்தால், காற்று மாசுபடும் என்கிறார், மதுரை மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து.
அவர் கூறியதாவது: வனப்பரப்பு சராசரியாக 33 சதவீதம் இருந்தால்தான் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும். மதுரை மாவட்டத்தில் 19 சதவீத வனப்பரப்பே உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறோம். இதற்கென பத்து நர்சரி மையங்கள் உள்ளன.
உற்பத்தி செய்த மரக்கன்றுகளை பள்ளி, கல்லூரி, மருத்துவமனை,அரசுஅலுவலகங்களில் நடுவதற்கு இலவசமாகத் தருகிறோம். வேம்பு, புங்கன், வாகை, இயல்வாகை, தூங்குமூஞ்சி வாகை, மயில்கொன்றை, சரக்கொன்றை, மஞ்சள் கொன்றை, மூங்கில் கன்றுகள் தருகிறோம்.
வீடுகளில் மரங்கள் வளர்த்தால், கட்டடம் பழுதாகிவிடும் என்பது மாயை. மரங்கள் அடர்ந்த எங்கள் வளாகத்தில் சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். இங்கு 200க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. இதனால் கட்டடத்திற்கோ, காம்பவுண்ட் சுவருக்கோ எந்த பாதிப்பும் வரவில்லை. தென்னை வேர் மட்டுமே (சல்லிவேர்) மேலாக வளரும். மற்ற மரங்களின் வேர்கள் (ஆணிவேர்) நிலத்தின் கீழே செல்வதால் எந்த பிரச்னையும் இல்லை.
அலுவலகப் பகுதியில் மழை பெய்தால், சுற்றுப்புறத்தில் உள்ள மழைநீரும் சேர்ந்து, இங்கே தேங்கி நிற்கும். ஒரு சொட்டு தண்ணீரைகூட வீணாக்குவதில்லை. இந்த பகுதியிலேயே எங்கள் வளாகம் மட்டும்தான் பள்ளமான பகுதி. அதிகபட்சம் மூன்று நாட்களில் தண்ணீர், பூமிக்குள் இறங்கிவிடும். அதுவரை, ஒற்றையடி பாதை போன்ற சிமென்ட் பகுதியில் நடந்து செல்கிறோம். உதிரும் இலைகளை எரிக்கும் பழக்கமில்லை. மற்றவர்களிடமும் இதையே வலியுறுத்தி வருகிறோம். காய்ந்த இலைகளை, அந்தந்த மரங்களைச் சுற்றி ஒதுக்கி விடுவோம். நாளாக நாளாக,இலைகள் மட்கி உரமாகிவிடும். இலை, தழைகள் எல்லாம் கார்பன்தான். கார்பன் பூமிக்குள் செல்வது தான் நல்லது. அதை எரித்து கார்பன் மோனாக்ஸைடு, டை ஆக்ஸைடாக மாற்றினால், காற்றுக்கு கெடுதி. சுற்றுச்சூழல் மாசுபடும் என்றார்.


மனம் இருந்தால் மாசில்லை:

டாக்டர்.வி.எஸ்.ரமணி, திருப்பாலை: குப்பைகளை சாக்கடையில் போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாவதோடு, அதை அப்புறப்படுத்துவதும் மிகவும் சிரமம். மண்வளத்தை பாதுகாப்பது நாம் உடுத்தும் ஆடையிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த காலத்தில் மண்ணோடு மக்கும் கதர் ஆடைகளை அணிந்து வந்தோம். இன்று, பாலிஸ்டர் துணிகளை உடுத்தி வருகிறோம். பயன்படுத்தி தூக்கி எறியும் இவ்வகை துணிகள் மண்வளத்தை பெரிதும் பாதிக்கிறது. நம் சுற்றுப்புறத்தை நாம் சுத்தமாக வைத்து கொண்டால், நோய் பரவுவதை தடுக்கலாம். ரோட்டில் குப்பை கிடக்கிறது என்று, கண்டுகொள்ளாமல் போகிறோம். அது நம்மையும்தான் பாதிக்கும் என்பதை புரிந்திட வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தோடு பொதுமக்களாகிய நாமும் சேர்ந்து ஒத்துழைத்தால், எளிதில் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். குறைந்தபட்ச முயற்சியாக, நாமே நம் வீட்டு வாசலில், தினமும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கலாம். மக்கள் மனம் வைத்தால் மாசில்லா மதுரையை உருவாக்கிடலாம்.


உடல் பருமனைக் குறைக்கும் தாவரம்;

மதுரையில் மட்டுமே அதிசயம்; அழியும் நிலையில் இருக்கிறது: இயற்கையாகவே உடல் பருமனை குறைக்கும் தாவர இனத்தில் முக்கியமான இனம், உலகத்தில் மதுரையில் மட்டும் உள்ளது. அதுவும் அழியும் நிலையில் உள்ளது. காரலூமா இனம் உலகம் முழுவதிலும் உள்ளது. அதில் 12வகை இனங்கள் தமிழகத்திலும், ஒரே ஒரு (சர்க்காரியே) சிற்றினம் மதுரையில் மட்டும் உள்ளது. கவனிப்பாரற்ற இத்தாவரத்தில் மருந்தை தயாரித்து, உடல்பருமனை குறைக்கும் மருந்துகளாக விற்பனை செய்யப்படுகிறது. மருந்து தயாரிக்கும் நடைமுறை இங்கில்லை. பிற மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா சென்று, அங்கிருந்து மருந்தாக கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
மதுரையில் அழகர்மலை, விமானநிலையம் அருகிலுள்ள காலி மனைகள், நாகமலை அடிவாரத்தில் அதிகம் காணப்படுகிறது. இத்தாவரத்தின் பயனைஅறிந்து கொண்டு, வணிகரீதியாக பயன்பெற நினைப்பவர்கள், கூலியாட்கள் மூலம் சேகரித்துக் கொண்டு இருப்பதால், அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மதுரைக் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ராஜசேகர், உதவிபேராசிரியர் கருப்புசாமி கூறியதாவது:இத் தாவரம் கள்ளிவகையைச் சேர்ந்த, தண்ணீரின்றி வறண்ட நிலத்திலும் வளரக்கூடியது. பார்க்க முள் போன்று இருக்கும். ஆனால் வெறும் சதைப்பகுதியாக, இலையில்லாமல், தண்டுப்பகுதி மட்டுமே காணப்படும். தண்டை ஒடித்து சுவைத்தால், லேசான கசப்பாகவும், மென்று தின்னும்போது, வயிறு வரை இனிப்பான சுவையை உணரமுடியும். இதில் "கிளைகோசைடு' சர்க்கரைப் பொருள் இருப்பதால், உடலுக்கு சக்தியைத் தரும். மென்று தின்னும்போது, பசி அடங்குவதால், உணவு உட்கொள்வது குறையும். உடலில் இருக்கும் வேண்டாத கொழுப்புச் சத்தையும் குறைக்கும்.
அழியும் வகை தாவரத்திற்கு முதல் தேவை, இருப்பிட பாதுகாப்புதான். பாதுகாக்க வேண்டியது வனத்துறைதான். உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக, அவற்றை வேற்றிட பாதுகாப்பு முறையில், வீடுகளில் வளர்ப்பதை டைமுறைப்படுத்தலாம். தண்டை பறித்து வைத்தாலும் வளரும். அழியும் வகை தாரங்களை பாதுகாக்கும் சட்டத்தின் (1976) மூலம், வனத்துறை நடவடிக்கை எடுத்து, மதுரையின் சொத்தான இத்தாவரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும், என்றனர். மேலும் விவரங்களுக்கு: 94867 73173.


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்:

பெ.பாண்டிச் செல்வி, ஆசிரியை, ரேஸ் கோர்ஸ் காலனி, மதுரை: வீட்டின் முன் காலியாக உள்ள இடங்களில், அறையை கட்டி காசுபார்க்கும் எண்ணத்தை விட்டு, அவரவர் இடத்திற்கு தகுந்தாற்போல் செடிகள், மரங்கள் வளர்த்து காற்று மாசடைவதை தவிர்க்கலாம். அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாக ஒரு மரம் வளர்த்திட முயற்ச்சிக்கலாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பிறந்தநாளின்போது, பள்ளிக்கு "சாக்லேட் டப்பாவை' கொடுத்தனுப்புவதற்கு பதில் ஒரு மரக் கன்றை கொடுத்தனுப்பலாம். மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், அவற்றை அழிப்பதினால் நாம் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். காலையில் கண்விழித்து பல் துலக்குவதிலிருந்து, இரவு தூங்க செல்லும் வரை நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் எந்த அளவிற்கு நோய்நொடிகளை வாரி வழங்குகின்றன என்பதை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்யலாம். பாலீதின் பைகளின் பயன்பாடு ஓரளவு குறைந்தபோதும், நடைபாதை கடைவியாபாரிகள் பாலீத்தின் பைகளைஅதிகம் உபயோகிக்கின்றனர். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X