அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு, நாடு முழுதும், ஆதரவு அலை வீசத் துவங்கி விட்டதால், அதை முறியடிக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைமை, நாடகம் நடத்தத் துவங்கி விட்டது. குற்றப் பின்னணி உடைய, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக, தானே அறிமுகப்படுத்திய, அவசரச் சட்டத்திற்கு, கட்சித் துணைத் தலைவரான ராகுலை எதிர்ப்பு தெரிவிக்க வைத்து, நாடகத்திற்கு, பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
‘கிரிமினல் வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்’ என, ஜூலை, 10ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
திருத்தத்துக்கு ஆதரவு:இந்த உத்தரவுக்கு, பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு இருந்தாலும், வழக்குகளில், தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்கவும், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை செல்லாததாக்கவும், சட்டத் திருத்தம் கொண்டு வரலாம் என, முடிவு செய்ய, ஆகஸ்ட், 13ம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது, முக்கிய எதிர்க்கட்சியான, பா.ஜ., உட்பட, பல கட்சிகள், சட்டத் திருத்தம் கொண்டு வர, ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, அரசியல் சட்டத் திருத்த மசோதா ஒன்றை, மத்திய அரசு தயாரித்தது; அதை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அது பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.இந்நிலையில், தகுதி இல்லாதவர் களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யுமான, ரஷீத் மசூது குற்றவாளி என, அறிவிக்கப்பட்டார். அவருடைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனையும், எம்.பி., பதவி பறிபோகும் சூழ்நிலையும் உருவானது.
கடுமையான எதிர்ப்பு:இவரின் பிரச்னையை தீர்க்கவும், குற்ற வழக்குகளில், இனி தண்டனை பெறும் எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிபோவதை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து, அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.அந்த சட்டத் திருத்தத்தை, அவசரச் சட்டமாக நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், பா.ஜ.,வும், இடதுசாரி கட்சிகளும், கடுமையாக எதிர்க்கத் துவங்கி விட்டன; ‘அவசரச் சட்டம் அமல்படுத்துவது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது’ என, கூறி வருகின்றன.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையிலான, கட்சிக் குழுவினர், நேற்று முன்தினம், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து, ‘அவசர சட்டத்திற்குஒப்புதல் அளிக்கக் கூடாது; அதை மத்திய அரசின் பரிசீலனைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர்; இதுதொடர்பாக மனுவும் அளித்தனர்.இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே மற்றும் சட்ட அமைச்சர், கபில் சிபல் ஆகியோரை அழைத்து, இந்தப் பிரச்னை தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அவசர சட்டம், பார்லிமென்டில் நிலுவையில் இருக்கும் போது, அதை, அவசர சட்டமாக கொண்டு வந்ததன் அவசியம் என்ன?’ என்று வினவியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலே, அவசர சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
டில்லி பத்திரிகையாளர் சங்கத்தில், காங்கிரஸ் பொதுச் செயலர், அஜய் மேக்கன், நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, திடீரென அங்கு வந்த, ராகுல் கூறிய தாவது:
‘குற்ற வழக்குகளில், தண்டனை பெறும்எம்.பி., – எம்.எல். ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தஉத்தரவை செல்லாததாக்கும் வகையில், மத்தியஅரசு, அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்ற முற்பட்டுள்ளது; அது முட்டாள்தனமானது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு செய்தது மிகவும் தவறானது. அந்த அவசர சட்டம் கிழித்து, துாக்கி
எறியப்பட வேண்டும்; இது என் தனிப்பட்ட கருத்து.அரசியல் ரீதியான சில
விஷயங்களை கருத்தில் கொண்டு, அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என,
காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அதேபோல், பா.ஜ., முலாயம்
சிங்கின் சமாஜ்வாதி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும்,
ஒவ்வொரு காரணம் சொல்கின்றன.ஆனால், இந்த அவசர சட்டம் அமல்படுத்தும்
முட்டாள்தனமான செயலை, காங்கிரஸ் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும்
தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில், ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என
விரும்பினால், கிரிமினல் குற்றம் புரிந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு
பாதுகாப்பு அளிக்கும், இது போன்ற சட்டங்கள் அமல்படுத்தப்படுவது தடுக்கப்பட
வேண்டும். இப்போது, சிறிய விஷயங்களுக்காக, நாம் விட்டுக் கொடுத்தால், பின்,
ஒவ்வொரு விஷயத்திற்கும் விட்டுக் கொடுக்க வேண்டியது நேரிடும்.இவ்வாறு
ராகுல் கூறினார்.
அத்துடன் தன் பேச்சை முடித்து, அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றார். ஆனால், நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், மீண்டும்இருக்கையில் அமர்ந்து, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அப்போது, அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் என்ன செய்கின்றன என்பதில், நான் அதிக அக்கறை காட்டி வருகிறேன். அதனால், இந்த அவசர சட்டம் விஷயத்தில், மத்திய அரசு செய்தது தவறு என, சொல்கிறேன்,’’ என்றார். இதன்பின், நிருபர்கள் சந்திப்பு நடந்த இடத்தை விட்டு வெளியேறினார் ராகுல்.
இதன்பின், நிருபர்களிடம் பேசிய, காங்கிரஸ் பொதுச் செயலர் அஜய் மேக்கன், ‘‘ராகுல் என்ன சொன்னாரோ, அது கட்சியின் கொள்கை,’’ என்றார்.
ஞானோதயம் ஏன்?காங்கிரசை உன்னிப்பாக கவனித்து வரும் டில்லி அரசியல் நோக்கர்கள், ‘காங்கிரஸ் நடத்தும் நாடகம் இது’ என்றேகூறுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:இந்த அவசர சட்டம் தொடர்பாக, ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காத, காங்., துணைத் தலைவரான ராகுல், இப்போது எதிர்ப்புத் தெரிவித்துள்ளது, பலரையும் வியப்படைய வைத்துள்ளது.பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம், இளைஞர்கள் கூட்டமும், பொதுமக்கள் கூட்டமும் பெருமளவில் கூடுகிறது. ‘ஊழலை ஒழிக்க வேண்டும்’ என, இளைஞர்கள் விரும்புகின்றனர். அவர்களது ஒரே தேர்வாக மோடி உள்ளார்.அதனால், காங்கிரசின் செல்வாக்கு சரிந்து விடலாம் என, கணக்கு போட்ட, ராகுல், ‘மிஸ்டர் கிளீன்’ என்ற இமேஜை உருவாக்கிக் கொள்ளவும், ஊழல் எதிர்ப்பில் தான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபிக்கவும், மோடியின் ஊழல் எதிர்ப்பு பிரசாரங்களை முறியடிக்கவும், கட்சியின் முடிவுக்கு மாறாக, நேற்று தடாலடியாக, அவசரசட்டத்திற்கு எதிராகஅறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.இதன் மூலம், ஊழல், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீது தனக்கு கருணை கிடையாது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து; மக்கள் செல்வாக்கை பெற முயற்சி செய்துள்ளார்.
காங்கிரசின் அகிலஇந்திய தலைவர் சோனியா; இவர் ராகுலின், தாய். ராகுல், கட்சியின் துணைத்தலைவர்; ஆட்சியின் கொள்கைகளை முடிவு செய்யும் இவர்கள், முதலிலேயே ஏன் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை?மோடியின்
செல்வாக்கு பெருகி வருவதைத் தடுக்கவே, அரசுடன் சேர்ந்து ஒரு நாடகத்தை
நடத்தியுள்ளனர்.நாடு முழுதும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளரான, குஜராத்
முதல்வர் மோடிக்கு, ஆதரவு அலை வீசத் துவங்கி விட்டது. இனியும், மவுனமாக
இருந்தால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும் தலைவர்கள் பலரும்,
‘டிபாசிட்’ கூட கிடைக்காமல், பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும் எனக்
கணக்கிட்டு, காங்கிரஸ் கட்சி, நாடகத்தை அரங்கேற்றத் துவங்கி விட்டது.தகவல்
தொடர்புத் துறையின், ‘2ஜி’ ஏல ஊழலில் துவங்கி, ஏகப்பட்ட
குற்றச்சாட்டுகளுடன், கீழிறங்கிப் போய்விட்டது காங்கிரஸ் கட்சியின்
இமேஜ்.குற்றப்பின்னணி உள்ள, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிப்பதை
தடுக்கும்சட்டத்தை கொண்டு வர, அரசுமூலம் காய் நகர்த்தி, அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். அப்போதெல்லாம் ராகுலுக்கு இது பற்றி தெரியாதா? ஊழல்வாதிகளை அப்புறப்படுத்த அவதாரம் எடுத்தவர் போல், இப்போது திடீரென ராகுல் எதிர்ப்பு தெரிவிப்பது மிக சரியான நாடகம். மத்திய அரசும், அமைச்சரவையும், காங்கிரசும் திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. ஊழல் ஒழிப்பு கதாநாயகனாக, ராகுலை முன்னிறுத்த, அக்கட்சி, அவர் மூலமே காய் நகர்த்தி, அவர் வாயாலேயே, அவசர சட்டத்தை, ‘முட்டாள்கள் இயற்றியது’ எனச் சொல்ல வைத்து விட்டது.இது போன்ற மேலும் பல அதிரடி அறிவிப்புகளை ெவளியிட்டு, நல்ல இமேஜை ஏற்படுத்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என, காங்கிரஸ் கணக்கு போடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
நாடு திரும்பியதும் முடிவுமன்மோகன் சிங் அறிவிப்பு:ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவரிடம், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை தடுக்கும் அவசரச் சட்டத்துக்கு, ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து,செய்தியாளர்கள் கேட்டனர்.அப்போது, அவர் கூறியதாவது:அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி கொடுப்பதற்கு முன்னதாகவே, அது தொடர்பாக, ராகுல், எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தஅவசரச் சட்டம் குறித்த விஷயம், நாட்டில், பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இதை, அரசு,கவனத்தில் கொள்ளும்.அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக, நான், நாடு திரும்பியதும், அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.இதற்கிடையே, பிரதமரின் முன்னாள் ஆலோசகர், சஞ்சய் பாரு கூறுகையில், ‘‘இவ்வளவு விஷயங்கள் நடந்தபின்னும், பிரதமர் பதவியில் தொடருவது சரியல்ல. உடனடியாக, அவர், ராஜினாமா செய்ய வேண்டும்,’’ என்றார்.
– நமது சிறப்பு நிருபர் –